கலித்தொகை காட்டும் காட்சி அமைப்பு!
ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாய் வீட்டில் ஏதாவது பிரச்சனையா என்று கேட்டாள் தோழி. இல்லை என்று சொல்லிவிட்டுக் தலைகுனிந்து இருந்த அந்தப் பெண் சிறு வயதில் எங்களுடன் சேர்ந்து விளையாடிய சாம்பனை உனக்கு ஞாபகம் இருக்கின்றதா என்று தோழியிடம் மெதுவாகக் கேட்டாள்.
அவனையும் மறக்க முடியுமா கள்ளப் பயல். சிறிய வயதிலே நாங்கள் தெரு ஓரத்தில் கட்டிய மணல் வீட்டினைக் ஓடிவந்து காலாலே தட்டிக் கலைத்து விட்டு ஒரு முறை ஓடினான். இன்னொரு நாள் நாங்கள் தலையிலே கட்டியிருந்த அழகிய மாலைகளைப் பறித்து எறிந்துவிட்டு ஓடினான். இறுதியாக எம் கையிலிருந்த பந்துகளைப் பறித்துக் கொண்டு ஓடியதோடு சரி. அதன் பின்பு அவனை நான் கண்டதே இல்லை.
அவன் எவ்வளவோ காலம் கழித்து இன்று மதியம் எங்கள் வீட்டுக்கு வந்தானடி.
என்ன சாம்பன் உன் வீட்டுக்கு வந்தானா ஏன் உன்னைத் தூக்கிப் போகவா
நான் சொல்வதைக் கேளேன். சுட்டெரிக்கும் வெய்யில் முற்றத்தில் விழும் பொழுதில் அம்மாவும் நானும் வீட்டிலே இருந்தோம். அப்பொழுது வெளியே ஒரு இளைஞன் வீட்டிலே யார் இருக்கிறீர்கள் என் தாகத்துக்குத் தண்ணீர் கொஞ்சம் தருவீர்களா என்று கேட்டான்.
உடனே எனது அம்மாவும் பொன்மயமான ஒரு செம்பிலே தண்ணீர் எடுத்து வந்து; வெளியே போய் அவனுக்கு குடிக்கக் கொடுத்துவா என்று என்னிடம் தந்தாள். நானும் வந்திருப்பது சாம்பன் என்று அறியாமல் செம்புடன் அருகே போனேன். அவன் காப்போடு சேர்த்து என் கையை இறுகப் பிடித்துக் கொண்டான்.
எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அம்மா ஓடிவாங்கோ இவன் என்ன செய்கின்றான் என்று பாருங்கோ என்று பயத்தினால் கத்திவிட்டேன். மறுகணமே இப்படித் துணிவாக என் கையைப் பிடிக்கக் கூடியவன் சாம்பனாகத்தான் இருக்கும் அவனுக்கு மட்டுந்தான் எதிலுமே பயம் கிடையாதே என்ற எண்ணம் நெஞ்சின் ஒரு மூலையில் எழ அவனைக் கூர்ந்து பார்த்தேன்..
அவனின் சிறுவயதுக் குறும்புச் சிரிப்பு இப்பொழுதும் அப்படியே இருந்தது. அதற்குள் அம்மா பதறிப்போய் என்ன மகளே என்று ஓடிவந்து விட்டாள். அவனைக் காட்டிக் கொடுக்க மனம் வரவில்லை. ஆனாலும் நான் கத்தியதற்குக் காரணம் சொல்ல வேண்டுமே. அம்மாவிடம் நான் சொன்னேன்.
நான் தண்ணீர் கொண்டு வெளியே வந்த பொழுது இவன் நாவரண்டு விக்கலினால் கண்கள் செருக சாகும் நிலையில் தள்ளாடினான். எனவேதான் பயத்தில் உங்களைக் கூப்பிட்டேன் என்றேன் நான். பெற்ற மகள் பொய்யா சொல்லப் போகின்றாள் என்று நினைத்து என் தாய் யார் பெற்ற பிள்ளையோ பாவம் என்று அந்தக் கள்வனின் பிடரியையும் முதுகையும் பரிவுடன் தடவிக் கொடுத்தாள்.
அப்படியிருந்தும் நான் செய்த உதவியை நினைக்காமல் அம்மா பார்க்காத சமயத்தில் நீ எனக்கு வேண்டும் என்பது போல கண்களால் கெஞ்சினான் அவன். நான் கோபத்தை காட்டியிருக்க வேண்டும். ஆனால் சிரித்துவிட்டேன். பெரிய காதல் திருடனாக இருக்கிறானடி இந்தக் கள்ளன் மகன் என்றாள் அந்தப் பெண்.
நீதான் சொல்லிவிட்டாயே நான் கோபத்தைக் காட்டியிருக்க வேண்டும். ஆனால் சிரித்துவிட்டேன் என்று. பரவாயில்லை. நாளைக்கும் வெய்யில் வரும். அவனும் வருவான். அந்த நேரம் தாகம் அவனுக்கு மட்டும் வராது. உனக்கும் சேர்த்து வரும். செம்பு நிறையத் தண்ணீரோடு கையையும் நீட்டி வைத்துக்கொண்டு வாசலிலே இரு என்றாள் தோழி. இருவருமே சிரித்தார்கள்.
சுடர்த்தொடீஇ கேளாய் தெருவில் நாம் ஆடும்
மணற் சிற்றில் காலின் சிதையா அடைச்சிய
கோதை பரிந்து வரி பந்து கொண்டு ஓடி
நோ தக்க செய்யும் சிறு பட்டி மேல் ஓர் நாள்
அன்னையும் யானும் இருந்தேமா இல்லிரே
உண்ணு நீர் வேட்டேன் என வந்தாற்கு அன்னை
அடர் பொற் சிரகத்தால் வாக்கி சுடரிழாய்
உண்ணு நீர் ஊட்டி வா என்றாள்: என யானும்
தன்னை அறியாது சென்றேன்; மற்று என்னை
வளை முன்கை பற்றி நலிய தெருமந்திட்டு
அன்னாய் இவனொருவன் செய்தது காண் என்றேனா
அன்னை அலறிப் படர்தர தன்னை யான்
உண்ணு நீர் விக்கினான் என்றேனா அன்னையும்
தன்னைப் புறம்பு அழித்து நீவ மற்று என்னைக்
கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி நகைக் கூட்டம்
செய்தான் அக் கள்வன் மகன்
(கலித்தொகை – குறிஞ்சிக் கலி – பாடல் 51 – பாடியவர் கபிலர்)
இன்று எத்தனையோ கிராமியக் கதை சொல்லும் திரைப்படங்களில் காதலின் தொடக்கத்துக்கு கதாநாயகன் தண்ணீர் கேட்டு கதாநாயகி வீட்டை அணுகும் காட்சிகளும் செம்புடன்; சேர்த்து கை விரல்களைத் தொட்டு கதாநாயகன் வாங்குவதும் அதனால் காதாநாயகி நாணமடைவதும் போன்ற பாவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால் சங்க காலத்திலேயே இலக்கியங்களில் இந்தக் காட்சிகள் விபரிக்கப்பட்டுவிட்டன.
எனவே பாரதிராஜா பாக்கியராஜ் போன்ற கிராமத்து காட்சிகளைப் படம்பிடித்துக் காட்டும் இயக்குனர்களை விடச் சிறந்த காட்சி அமைப்பாளன் ஒருவன் சங்க காலத்தில் இருந்திருக்கின்றான் அவன் பெயர்தான் கபிலன்
கனடா தமிழர் தகவல் 5.6.2026 இதழுக்கு நான் எழுதிய கட்டுரை இது.