|

பாலும் அப்பமும்!

கவிஞர் கண்ணதாசன் அன்னையில்லம் என்ற படத்திலே எண்ணிரண்டு பதினாறு வயது அவள் கண்ணிரண்டில் ஆடுதம்மா காதல் கொண்ட மனது என்று ஒரு பாட்டு எழுதினார்.

உடனே திரைத் துறையினர் இந்தப் படத்தில் நடிப்பது தேவிகா. அவருக்கு 32 வயது ஆகின்றதே. எப்படிப் பதினாறு வயது என்று எழுதுவீர்கள் என்று கேட்டார்கள்.
அதற்கு கண்ணதாசன் இரண்டு பதினாறப்பா அது முப்பத்திரண்டு தானே . நான் சரியாகத்தான் எழுதியிருக்கின்றேன் என்றார்.

இந்தச் செய்தி ஏறி இறங்காத ஊடகங்கள் இல்லையென்னும் அளவுக்கு பிரபலமானது. இன்றைய முகநூலிலும் பிற தளங்களிலும் அவ்வப்போது இந்தச் செய்தி வெளிவருவதும் உண்டு.

இதனோடு தொடர்புடைய மிக முக்கியமான செய்தி ஒன்றை யாரும் எழுதுவதில்லை. அது அவர்களுக்குத் தெரியாதது. தமிழோடு சம்பந்தப்பட்டது.

துறைமங்கலம் சிப்பிரகாக சுவாமிகள் நன்நெறி என்று ஒரு நூலை எழுதினார். அதிலே பின்வரும் பாடலையும் அவர் தந்தார்.

காதல் மனையாளும் காதலனும் மாறின்றித்
தீதில் ஒருகருமம் செய்யவே – ஓது கலை
எண்இரண்டும் ஒன்றுமதி என் முகத்தாய் நோக்கல்தான்
கண்இரண்டும் ஒன்றையே காண்.

ஒரு முகத்திலே கண்கள் இரண்டு இருந்தாலும் அவை பார்க்கும் காட்சி ஒன்றாகவே இருக்கின்றது. அது போல ஒரு குடும்பத்திலே கணவனும் மனைவியும் இருவராக இருந்தாலும் அவர்கள செயல்கள் எல்லாம் ஒன்றுபட்ட மனத்தோடு ஒன்றாகவே செய்யப்பட வேண்டும் என்பது இதன் பொருளாகும்.

இந்தப் பாடலிலே எண்ணிரண்டு ஒன்றுமதி என்முகத்தாய் என்று சிவப்பிரகாசர் குறிப்பது எட்டு இரண்டு பதினாறு கலைகளும் நிரம்பிய மதி போன்ற முகத்தை உடையவளே என்பதாகும். பதினாறு என்பதைத் தன் பாடலிலே எண்ணிரண்டு என்று சிவப்பிரகாசர் பிரித்துச் சொன்னதைப் படித்த காரணத்தினால் தான் கண்ணதாசனும் எண்ணிரண்டு பதினாறு வயது என்று எழுதினார்.

ஆனால் கண்ணதாசன் அறியப்பட்ட அளவுக்கு சிவப்பிரகாசர் அறியப்படவில்லை. கிராமப் புறங்களிலே ஒரு பழமொழி சொல்வார்கள். பாலை நக்கிக் கொண்டு அப்பத்தை எறிவது என்று. ஆம் இங்கேயும் கண்ணதாசன் என்னும் இனிக்கும் பாலை நக்கிக் கொண்டு நன்நெறி என்ற அப்பத்தை எறிந்து விடுகின்றது தமிழ் உலகம். ஆனால் பாலை விட அப்பம் தான் ஆராக்கியமானது.!

இரா.சம்பந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.