|

சிறுகதை – சிதைவுகள்!


யாழ்ப்பாணம் போய்ச் சொந்த பந்தமென்று இந்த நாய்களைப் பார்த்த நேரம் கனடாவிலேயே எத்தனையோ நல்ல இடங்களைப் போய்ப் பார்த்திருக்கலாம். காசும் மிஞ்சியிருக்கும். மனமும் நிம்மதியாக இருந்திருக்கும்.


பக்கத்தில் இருந்த மனைவி ரேவதியிடம் கோபமாகச் சொன்னான் கோபி. விமானம் பறந்து கொண்டிருந்தது கனடாவுக்கு. அவள் கேளாதது போல மௌனமாக இருந்தாள் கண்ணாடி வழியே மேகங்களைப் பார்த்துக் கொண்டு. பிள்ளைகள் இருவரும் கேம் விளையாட்டில் முனைப்பாக இருந்தார்கள்.


மனைவியைப் போல அமைதியாக இருக்க கோபியால் முடியவில்லை. அவன் மனத்தில் யாழ்ப்பாணத்து நினைவுகள் ஒவ்வொன்றாகத் தலையெடுக்கத் தொடங்கின. முப்பது வருட கனடா வாழ்விலே பலமுறை அவனால் நிராகரிக்கப்பட்ட மனைவியின் யாழ்ப்பாண ஆசை அவளோடு வயது வந்த இரு பிள்ளைகளும் சேர்ந்து கொண்டதால் பெரும்பான்மை பலம் பெற்று நிறைவேறிவிட்டது.


உங்களுக்கு ஏன் ஊருக்குப் போகப் பிடிப்பதில்லை என்ற கேள்வியை கோபம் வரும் போது மனைவி கேட்டாலும் பிற சந்தர்ப்பங்களில் நண்பர்கள் கேட்டாலும் நீதியை மதிக்காத ஒரு நாட்டுக்கு போக எனக்கு விருப்பமில்லை அவ்வளவுதான் என்பதே கோபியிடம் இருந்து பதிலாக வரும் எப்போதும்.


அந்த எண்ணத்தை நடந்து முடிந்த யாழ்ப்பாணப் பயணம் புரட்டிப் போட்டுவிட்டது. நாடு மட்டுமல்ல மக்களும் நேர்மையற்றவர்கள் என்ற புது எண்ணத்தையும் அந்தப் பயணம் கோபிக்குத் தந்து விட்டது. அதிலும் அம்மாவும் தங்கச்சியும் நடந்து கொண்ட விதம் இருக்கே அது கோபி கனவிலும் எண்ணியிருக்காத ஒன்று.


போர் மரங்களையும் கட்டிடங்களையும் மட்டும் சிதைக்கவில்லை. மனித மனங்களையும் அது சிதைத்திருந்தது. சுற்றம் சூழ பெரியம்மா சுந்தரி மாமா என்று உறவுகள் குடியிருந்த இடங்கள் எல்லாம் இப்போது வந்தான் வரத்தான்களால் நிரப்பப்பட்டுவிட்டன. அவன் முன்பு இரவு போயிருந்து படிக்கும் பார்வதி மாமி வீட்டிலே யாரோ குடிவந்து எத்தனையோ வருடங்கள் ஓடிவிட்டன.


பக்கத்து வீட்டு பார்வதி மாமியின் கோழிகள் இப்போது வேலிப் பொட்டுக்களால் வருவதில்லை. கோபியின் சைக்கிள் சத்தத்தைக் கேட்டவுடன் வாலை ஆட்டிக்கொண்டு ஓடிவரும் வெள்ளைக் கடுவனும் வெடிச்சத்தத்துக்கு பயந்து எங்கோ ஓடிவிட்டதாம். ஆனால் இந்தக் கவலைகளை எல்லாம் மறக்க அந்த வீட்டிலிருந்து இன்று அம்மாவுக்கு புதிதாக சத்தியன் என்ற மகன் கிடைத்துவிட்டான். தங்கச்சி சாந்திக்கும் சத்தியன் என்ற புது அண்ணன் கிடைத்துவிட்டான்.


அந்தப் புது வரவுகள் செலுத்தும் ஆதிக்கத்தை கண்டு திகைப்பு மட்டுமல்ல லேசான பொறாமையும் எழுந்தது கோபிக்கு.


அம்மா! நேரம் போகுதம்மா. இன்னும் கோப்பி ஊத்தலையா? கேட்டான் கோபி.


தண்ணீர் கொதிக்குது. ஊத்துறேன் தம்பி என்ற அம்மா கையை விரித்து தங்கச்சிக்கு என்னவோ சொன்னதை தற்செயலாகக் கண்டு விட்டான் கோபி.


இங்கேயப்பா! அவையள் அந்தச் சத்தியன் பொடியனை கடைக்கு எங்கேயோ பால் வாங்க அனுப்பிப் போட்டுத் துடிக்கினம். நீங்கள் அவசரப்படுத்தாதையுங்கோ என்ன.


மனைவி வந்து காதில் சொன்னதும் என்னப்பா நான் பிள்ளை. பாலோ சீனியோ இல்லாவிட்டால் எனக்குச் சொல்லியிருக்கலாம். வெறும் கோப்பியாக குடிச்சிட்டுப் போயிருப்பேன். ஏன் எனக்கு மறைத்து வந்தான் வரத்தானைக் கொண்டு வாங்குவிக்கினம்?


அறைக்குள் மனைவியோடு சத்தம் போட்டான் கோபி. அவள் அதற்குப் பதில் சொல்லவில்லை. இன்னொரு பதிலை அழுத்தி ஆயிரம் அர்த்தங்களோடு சொன்னாள் அவள்
நீங்களல்லோ வந்தான் வரத்தான் என்று சொல்லுறியள். அவையள் அப்படி நினைக்கிறதாகத் தெரியவில்லை.


கோபி பேசவில்லை. குடிச்சிட்டு எழும்புங்கோப்பா நேரம் போவுது என்றாள் ரேவதி சற்றுக் கண்டிப்புக் கலந்த தொனியில். நீங்கள் ஒன்றும் கதைக்க வேண்டாம் என்ற தனது கட்டளையைத்தான் இப்படி மனைவி சொல்கின்றாள் என்று கோபிக்குத் தெரியும். அதனால் அவன் எதுவுமே பேசவில்லை.


அன்று கோவில் திருவிழாவிலும் அப்படித்தான் நடந்தது. வருடாவருடம் நடக்கும் கோவில் திருவிழாவில் ஒன்று கோபி குடும்பத்துக்கு உரியது. வேளிநாட்டில் இருந்து இந்த மாதம் கோபி ஊருக்கு வந்ததே திருவிழாவும் செய்து விட்டுப் போகத்தான்.


வாருங்கோ! தம்பி கோபி வலக்கை நடு விரலிலே தர்ப்பையைப் போட்டுக் கொண்டு பிள்ளையாரைக் குட்டிக் குப்பிடுங்கோ என்று அழைத்தார் குருக்கள். ஐயா! இந்தமுறை இரண்டு பேருக்கும் தர்ப்பையைப் போடுங்கோ என்றாள் அம்மா.


ஒவ்வொரு முறையும் சத்தியன் தம்பி போடுறது. இந்த முறை கோபித் தம்பிக்குப் போட்டிடலாம் என்று நினச்சேன். இரண்டு பேருக்குமே போட்டிடுவோம் என்றார் குருக்கள்.


ஐயா! இவர் வெளி நாட்டிலே துடக்கு வீடு ஒன்றிலே திருவிழா வாறதை மறந்து சாப்பிட்டுவிட்டார். அந்தத் தீட்டு இன்னும் கழியவில்லை. நீங்கள் சத்தியனுக்கே தர்ப்பையைப் போட்டுச் செய்யுங்கோ. மாமிக்குச் சத்தியனும் ஒரு மகன் தானே! யாருக்குப் போட்டால் என்ன?


தனது கோபத்தை இராஜ தந்திரமாக மனைவி கையாண்டதை ஏற்றுக் கொண்டு பின்னுக்குத் தள்ளி நின்றான் கோபி.

ஓ! எங்கள் ஊர்க் கோவிலிலே இவர்களை உபயகாரர் என்றும் ஆக்கி அவர்களின் இருப்பை இந்த ஊரிலே நிதந்தரமாக வேரூன்றி வளர வைத்திருக்கிறா அம்மா. நல்ல முன்னேற்றம் தான். திருவிழாவிலே கோபி பின்னுக்கே நின்று கொண்டான்.


தம்பி நீயும் மனுசி பிள்ளையளும் போறத்துக்கு முன்னாலே பாராசத்தி வீட்டுக்கும் போய் ஒருவாய் தண்ணி குடிச்சிட்டுப் போங்கோ.. சாப்பிடச் சொன்னால் சாப்பிடு. என்ன தம்பி


யார் பராசத்தி?


உவன் தம்பி சத்தியனின்ரை தாய் தான். நீங்கள் ஊருக்கு வரப்போறியள் என்றதைக் கேள்விப்பட்ட உடனே மனுசி தன்னுடைய பிள்ளையள் போல நினைச்சு பிலாப்பழம் சாப்பிடுவினமோ கருவாட்டுக் குழம்பு வைச்சால் சாப்பிவினமோ என்று சந்தோசத்திலே குதிச்சது. போகாமல் விடுறது சரியில்லை.


என்ன அம்மா உன்னைப் போல என்னையும் லூசு என்று நினைச்சியா யாரென்று தெரியாத வீடுகளில் எல்லாம் போய் சொந்தம் கொண்டாடி நக்க? அப்பா இருந்திருந்தால் உன்னை வெட்டிப் போட்டிருப்பார். உன்ரை நல்ல காலம் மனுசன் போய்ச் சேர்ந்திட்டுது. என்ன கதைக்கிறாய் நீ.


அண்ணா அண்ணா! மெதுவாக கதையுங்கோ. அவைக்குக் கேட்டாலும்.


அம்மா மட்டுமல்ல. உன்னையும் நான் வந்த நாளிலே இருந்து பார்த்துக்கொண்டு வாறன். மூச்சுக்கு முன்னூறு தடவை சத்தியண்ணா சத்தியண்ணா. நான் நேற்று கடையிலே உனக்கு ஆசையாக சட்டை வாங்கிக்தர முன்பக்கக் கழுத்து பெரிசாக இருக்குது. சாந்தி போடாது என்கிறான் அந்த நாய்.


உனக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது என்பதெல்லாம் அவன் சொல்லித்தான் நான் தெரிய வேண்டியாகப் போச்சு நிலைமை அப்படித்தானே தங்கையிடமும் சீறினான் கோபி.


அண்ணா நீங்கள் எண்பதுக்கு முந்திய யாழ்ப்பாணத்தில் நிக்கிறியள். யுத்த காலத்தில் நீங்கள் வெளிநாட்டிலே. நீங்கள் காசு அனுப்பினீர்கள் தான். ஆனால் காசை வைத்துக் கொண்டு எதுவுமே செய்ய முடியாத காலம் அது. குண்டு விழுந்தால் தப்புறதுக்கு பங்கர் வெட்டித் தந்தது உங்கள் காசல்ல. சத்தியண்ணாவின் கையும் மண்வெட்டியும் தான்.


இந்தியன் ஆமிப் பிரச்சனைக்குள்ளே சைக்கிளிலும் தோளிலும் எங்களை மழை வெள்ளத்துக்குள்ளே தூக்கிச் சுமந்த நன்றிக்காக சத்தியனை அண்ணா என்கின்றேன் நான். நீங்கள் செய்ய வேண்டிய கடமைகளைத்தான் சத்தியன் எங்கள் குடும்பத்துக்குச் செய்தது.

சத்தியன் இல்லையென்றால் கனடாக் காசை கையிலே வைச்சுக் கொண்டு பட்டினியாலே நாங்கள் செத்திருப்போம். எல்லாவற்றையும் விளங்கிக் கொண்டு கதையுங்கோ.


சாந்தி சாந்தி இவர் இப்படிக் கதைக்கத் தெரியாமல் கதைச்சுத் தான் எல்லாரிடமும் கெட்ட பெயர் கேட்கிறவர். இது சின்னப் பிரச்சனை. விடுங்கோ. நாளைக்கு பின்னேரம் தன்னோடு படிச்ச நண்பர்களோடு அண்ணா சாப்பிட வெளியே போகிறார். நானும் பிள்ளையளும் நீங்களும் பக்கத்து வீட்டுக்கு போவோம். பிரச்சனை முடிஞ்சுது.


இப்படி ஒரு அண்ணி எங்களுக்கு இருக்கிறதாலே தான் இந்த முட்டாள் அண்ணாவை கட்டியவிழ்க்க முடியுது. சாந்தி சிரித்தாள்.


சத்தியனால் ஏற்பட்ட சத்திய சோதனைகளை அப்பாவின் ஒன்றுவிட்ட தங்கை கோமதி மாமி வீட்டில் சாப்பிடப் போனபோது தான் கோபியால் கொட்டித் தீர்க்க முடிந்தது.


நீ உதைச் சொல்லுறாய் கோபி. இதைக் கேளடா. உன்ரை தங்கச்சியைப் பார்த்து என்னுடைய மகன் சிரித்துப் போட்டான் என்று சத்தியன் என்ரை பொடியனுக்கு அடிக்கப் போச்சுதாம் கோபி.

கோமதியின்ரை பொடியனுக்கு கை நீட்ட நீ யார் என்று கொம்மா ஒரு சொல்லுக் கேட்கவில்லை. எல்லாம் என்ரை மனத்துக்குள்ளே கிடந்து வேகுதடா கோபி.


கோமதி மாமி சாப்பாடு போடும் போது கண் கலங்கியதும் தான் கோபி வாய் திறந்தான். மாமி! நான் வந்த நாள் தொடங்கி எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் வாறன். எனக்கு ஒன்றும் பிடிப்பில்லை.

அந்தப் பொடியன் சத்தியன் கேட்டுக் கேள்வி இல்லாமல் வீட்டிலே எல்லா இடமும் நுழையுது. எல்லாத்தையும் என்னாலே பொறுக்க முடியுது. ஆனால் உங்களின்ரை மகன் குஞ்சனுக்கு அடிக்கப் போனது பற்றி அம்மாட்டைக் கட்டாயம் கேட்பேன்.


நல்ல காலம் இன்றைக்குக் குஞ்சன் வீட்டிலே இல்லை. என்னடா கோபி வீட்டிலே அடியாளை வைச்சு வளர்க்குறியா என்று கேட்டால் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாக வேண்டியதுதான் மாமி.


நீ கேளாதையடா. உனக்குள்ளே வைச்சிரு. நான் போட்டுக் குடுத்திட்டேன் என்று கொம்மா சொல்லுவா. இன்னொன்று உனக்குத் தெரியுமே. அப்புத்துரைக் குஞ்சியப்புவின் சேகர் இருக்கிறானல்லோ. அவன்தான்ரா கொலன்னாவ பெற்றோலியம் கோப்பரேசனிலே வேலை செய்கிறான். அவனுக்கும் உனது தங்கச்சி சாந்திக்கும் குறிப்பு பார்த்தவையள். நல்ல பொருத்தம். மாப்பிள்ளை வடிவில்லை முன் தலை கொஞ்சம் மொட்டை என்று சத்தியன் குழப்பிப் போட்டான்.


அன்று கோபியின் பயண நாள். அம்மாவுக்கும் தங்கச்சிக்கும் விடை சொல்லிப் புறப்படும் போது அம்மா கேட்டாள்.


தம்பி அப்பாவின் திவசம் வருகிறது. இன்னும் கொஞ்ச நாள் லீவு எடுத்துக்கொண்டு வந்திருந்தால் அடுத்த கிழமை உன்னுடைய கையாலே அரிசி குடுத்துப்போட்டு போயிருக்கலாம். எத்தனை வருசம் நீ திவசம் கொடுத்து?


சத்தியனைக் கொண்டு கொடுங்கோ அம்மா சொல்லிவிட்டுத் திரும்பிப் பார்க்காமலே நடந்தான் கோபி. ரேவதியும் பிள்ளைகளும் விடைபெற்று நடந்தார்கள்.


அம்மா சத்தியன் மாமா எனக்கு ஒரு சின்ன அட்டியலும் தம்பிக்கு ஒரு கைச்சங்கிலியும் தந்தவரம்மா.


ஐயோ பிள்ளைகள் இது எல்லாம் எப்ப? அப்பாவுக்கு இன்றைக்குச் சொல்லாதையுங்கோ. பிறகு நாங்கள் கனடா போனபாடில்லை என்றாள் ரேவதி மெதுவாக.


ரேவதி நான் சொன்னது உனக்குக் கேட்குதா என்றான் கோபி.
கேட்குது நானும் உங்களை ஒன்று கேட்கட்டுமா என்றாள் ரேவதி.


கேளும்!


நாங்கள் விமானநிலையத்தில் இறங்கி எப்படி வீட்டுக்குப் போகப் போகின்றோம்
ராஜன் வரும்.
ஏன் ராஜனுக்கு வேலை இல்லையா?


அவன் எங்களுக்காக லீவு போட்டு நிக்கிறான். வருவான்.


சரி நாங்கள் ஊரிலே நின்ற பத்து நாளும் ஏதாவது முக்கிய பில் ஏதாவது கட்டச் சொல்லி வந்திருந்தால்?


அப்படி வராது. அப்படியிருந்தும் என்னுடைய விசா காட்டும் பின் நம்பரும் ராஜனிட்டைக் கொடுத்துப் போட்டு வந்தனான். அதுக்கு என்னுடைய கொம்பியூட்டர் பாஸ்வேட் தெரியும் பார்த்து ஏதாவது செய்திருக்கும்.


இவ்வளவு இரகசிய நம்பர்களையும் ராஜனிட்டை குடுத்துப்போட்டு வந்திருக்கிறியளே அவன் என்ன உங்களுடைய அண்ணனா தம்பியா? எங்கள் வீட்டிலே ஒரு அறையில் வாடகைக்கு இருக்கின்ற ஊர்பேர் தெரியாத ஆள்தானே.


என்ன இப்படிக் கதைக்கிறீர். எனக்கு அண்ணன் தம்பி இருந்தாலும் அவர்களை விட ராஜன் மேல்தான் எனக்கு நம்பிக்கை


இப்பதான் நீங்கள் சரியான இடத்துக்கு வாறியளப்பா


முன்னேற்றமடைந்த கனடாவிலேயே ராஜன் போல ஒரு உதவியாளை நாங்கள் பக்கத்தில் வைத்துக் கொள்ளும் போது ஒரு முன்னேற்றமும் இல்லாத அந்த நாட்டிலே சத்தியன் போல ஒரு துணை உங்கள் அம்மாவுக்கும் தங்கச்சிக்கும் தேவைப்படுவதில் என்ன தப்பு?


இங்கே பாருங்கோ என்றைக்கு நாங்கள் குடும்பங்களை விட்டு வெளி நாடுகளுக்குப் புலம் பெயர்ந்தோமோ அன்றே எங்கள் இரத்த உறவுகளின் சிதைவுகளும் ஆரம்பித்துவிட்டன.

அந்தச் சிதைவுகள் எங்கள் உறவுகளை அபகரித்துக் கொண்டு இல்லாமல் ஆக்கிவிட அந்த வெற்றிடங்களில் எல்லாம் ராஜன்களையும் சத்தியன்களையும் பயிரிட்டுக் கொள்கின்றோம் அவ்வளவுதான்.


ரேவதி நாங்கள் ஊரிலே நின்ற ஒன்பது நாளும் அந்தப் பொடியன் எப்படியெல்லாம் உதவி செய்தது. நான் தப்புப் பண்ணியிட்டேன் ரேவதி. முகம் கொடுத்து ஒரு வார்த்தை கதைக்கவில்லை என்ன நினைச்சுதோ தெரியாது.


அது ஒன்றும் நினைக்காதப்பா. உங்களின்ரை இரண்டு பிள்ளைகளுக்கும் என்ன கொடுத்திருக்கு என்று கேளுங்கோ என்றாள் ரேவதி.


விமானம் கனடாவின் தரையை மெதுவாகத் தொட்டது. ஆனால் கோபியின் உள்ளம் யாழ்ப்பாணத்தில் சத்தியனின் கால்களைத் தான் மெதுவாகப் பற்றிக் கொண்டு திரும்பவும் உன்னைக் காண வருவேன் தம்பி என்றது.


இரா.சம்பந்தன்

கனடா தமிழ்க் கவிஞர் கழகம் 26.7.2026 ஆகிய இன்று வெளியிட்ட கவிச்சரம் நூலில் இடம்பெற்றுள்ள எனது சிறுகதை

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.