|

கொள்கையும் கோபமும்!



சாதியும் குலமும் இல்லை. அவை இருக்கக் கூடாது. என்பது பாரதியாரின் உறுதியான கொள்கை முடிபு. அதனால் தான் தனது பாப்பாப் பாட்டிலே சாதிகள் இல்லையடி பாப்பா குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்று எழுதினார் அவர். மானுடத்தைப் பிஞ்சு வயதிலேயே சாதி குல ஏற்றத்தாழ்வில் இருந்து வெளியே கொண்டுவர வேண்டும் என்ற அவரின் நல்ல எண்ணம் அது.
அடுத்து தனது தாக்குதலை சாதி குல வேற்றுமையை சமுதாயத்தில் விதைத்துக் கொண்டிருந்த பிராமண வர்க்கத்துக்கு எதிராகத் தொடங்கினார். இந்த நாட்டிலே பெறுதற்கு அரிய ஆறறிவு மானிட ஜென்மத்தை நாம் அடைந்துவிட்டால் பிராமணர்களும் ஒன்றுதான் வேறு குலத்தவர்களும் ஒன்றுதான் அதிலே ஏற்றத் தாழ்வு கிடையாது என்று உறுதிபடச் சொன்னார் அவர்.
ஜாதி மதங்களைப் பாரோம் – உயர்
ஜன்மம் இத் தேசத்தில் எய்தின ராயின்
வேதிய ராயினும் ஒன்றே – அன்றி
வேறு குலத்தின ராயினும் ஒன்றே
இவ்வாறு சாதியையும் குலத்தையும் துடைத்தெறியக் கவிதைகள் பாடிய பாரதியார் இலக்கியம் படைக்க வருகின்றார். ஒரு கவிஞன் இலக்கியம் பாடப் புகுந்து விட்டால் இலக்கியத்திலே பாத்திரங்கள் படைக்கப்பட வேண்டும். அந்தப் பாத்திரங்களுக்கு உணர்ச்சிகளை அள்ளிக் கொடுக்க வேண்டும். அதுமட்டுமல்ல தானே அந்தப் பாத்திரங்களாக மாறி வார்த்தைகளைப் பரிமாறிக் கொள்ள வேண்டும்.
பாரதியார் கண்ணன் பாட்டு என்று ஒரு இலக்கியத்தைப் படைக்கின்றார். அதிலே கண்ணனை தெய்வமாக காதலனலாக காதலியாக நண்பனாக சேவகனாக என்று பல வடிங்களில் கண்டு கவிதை வடிக்கிறார். அதிலே கண்ணனைக் காதலிக்கும் ஒரு பெண்ணுக்கு உன்னைத்தான் கைப்பிடிப்பேன் என்று வாக்குக் கொடுத்து விட்டு கண்ணன் போய்விடுகின்றான். பின்பு எந்தத் தொடர்பும் இல்லை.
கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்
கண்டுவர வேண்டுமடி தங்கமே தங்கம்
என்று அந்தப் பெண்ணாக நின்று கவிதை படைத்த பாரதியார் சோக உணர்வின் விளிம்புக்குப் போய் அதனால் ஏற்பட்ட கோபத்தின் காரணமாக பின்வருமாறு எழுதிவிடுவார்.
சோரம் இழைத்து இடையர் பெண்களுடனே — அவன்
சூழ்ச்சித் திறமைபல காட்டுவது எல்லாம்
வீர மறக்குலத்து மாதரிடத்தே
வேண்டியது இல்லையென்று சொல்லி விடடீ.
இங்கே இடையர் குலத்து பெண்களை ஏமாற்றிச் சுகம் அனுபவிக்கும் வேலைகளை அவர்களோடு வைத்திருக்கச் சொல்லு. நாங்கள் உயர்ந்த மறவர் குலத்துப் பெண்கள் எங்களை ஏமாற்றிக் கதை அளக்கிற வேலையெல்லாம் வேண்டாம் என்று கண்ணனுக்கு போய்ச் சொல்லடி என்கிறார் பாரதியார்.
இங்கே கோபத்தினால் குல உயர்வு தாழ்வு பற்றிப் பேச வேண்டிய நிலை பாரதியாருக்கு வந்து விடுகின்றது.
இனிப் பாரதியார் பாடிய பாஞ்சாலி சபத்துக்குப் போவோம். பாண்டவர்களின் மனைவியான பாஞ்சாலியைத் துரியோதனன் துகிலுரிந்து அவமானப் படுத்தியபோது விதுரன் அது தப்பு என்று துரியோதனனோடு வாக்குவாதம் செய்கின்றான்.
துரியோதனா நீ தீய வழியிலே செல்வதைத் தான் நான் வெறுக்கின்றேன் உன்னையல்ல. தவறான பாதையிலே செல்லுகின்ற போது தடுத்து நல்ல புத்தி சொல்லுகின்ற மனிதர்களை மதிக்காத கேடு கெட்ட அரசன் நீ. உன்னுடைய அமைச்சரவையிலே விலிமை மிக்க அரசர்களையும் பிராமணர்களையும் வைத்திருப்பது தாகாது. நீ தான் யார் பேச்சையும் கேட்பதில்லையே. ஒன்று செய் உன் மந்திரி சபையை இப்படி மாற்றிக் கொள்
பிறரின் கவனத்தை தம் பக்கம் திருப்பப் பொன்மயமான மார்புத் துணிகள் அணியும் விபச்சாரிகள் நீ செய்யும் இழி செயலுக்கு எல்லாம் துணை நிற்கக் கூடிய அடியாட்கள் குலம் தவறிப் பிறந்த கீழ்ச்சாதிப் பறையர்கள் நொண்டிகள் பைத்தியக்காரர்கள் இப்படியானவர்களைத் தேடிப் பிடித்து மந்திரிகள் ஆக்கிக் கொள். அந்த மந்திரி சபைதான் உனக்கு ஏற்றதாக இருக்கும்.
நலங்கூறி இடித்துரைப்பார் மொழிகள் கேளா
நரபதி நின் அவைக்களத்தே அமைச்ச ராக
வலங்கொண்ட மன்னரொடு பார்ப்பார் தம்மை
வைத்திருத்தல் சிறிதேனும் தகாது கண்டாய்.
சிலங்கைப்பொன் கச்சணிந்த வேசை மாதர்
சிறுமைக்குத் தலைகொடுத்த தொண்டர்; மற்றும்
குலங்கெட்ட புலைநீசர் முடவர் பித்தர்
கோமகனே நினக்குரிய அமைச்சர் கண்டாய்!
பாரதியார் மானுடக் கவிஞன். அவர் விதுரன் நிலையிலிருந்து துரியோதனையும் அவன் செய்யும் தவறுகளையும் பார்த்தார். கோபம் தலைக்கேறி விட்டது. என்ன பேசுகின்றோம் என்று அவருக்குத் தெரியவில்லை. அங்கே பாரதியார் இல்லை. பாரதியார் வடிவில் விதுரன் நிற்கின்றான். சமுதாயத்தில் இருந்து எந்ந அழுக்கைத் துடைக்க வேண்டும் என்று பாரதியார் நினைத்தாரோ அவரின் பேனாவே குலங்கெட்ட புலை நீசர் என்ற கொடிய வார்த்தைகளை எழுதிவிட்டது.
கோபம் எவ்வளவு பொல்லாதது?

கனடா தமிழர்தகவல் 5.7.2026 இதழுக்கு நான் எழுதிய கட்டுரை இது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.