வள்ளுவன் காட்டிய யானையும் புலியும்!
அயல் நாட்டு மன்னனின் மகளுக்குத் திருமணம். பகையற்ற ஆதரவு தரும் நாடு. சில நெடுந்தூரம் ஓடும் தேர்களையும் அதற்காகப் பயிற்றுவிக்கப்பட்ட குதிரைகளையும் அனுபவம் மிக்க பாதுகாவலர்கள் சிலரையும் ஏற்பாடு செய்து கொண்டு சிறு குழுவாக ஒருசில நாட்களிலேயே அங்கு போய்விடலாம். ஆனால் மன்னன் அப்படி முடிவெடுக்கவில்லை.
அவனுக்கு போகும் வழியெல்லாம் இயற்கையின் அழகைக் காணும் ஆவல் இருந்தது. அயல் நாட்டு மன்னனுக்கும் சனங்களுக்கும் தன் பெருமையை எடுத்துக்காட்ட வேண்டும் என்ற ஆசையும் இருந்தது.
இவற்றையெலாம் விட தன் நாட்டுக்கு வந்திருக்கும் திருவள்ளுவரையும் தன்னருகே வைத்துக்கொண்டு அவரது ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் கேட்டு தன் ஆட்சியை மேலும் வளம் மிக்கதாக ஆக்கிக் கொள்ள வேண்டும். அதற்கு இந்தப் பிரயாணப்பொழுதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் இருந்தது மன்னனுக்கு.
அதனால் தன் பிரயாணத்துக்கு யானைகளை ஒழுங்கு செய்வதே அமைதியான உரையாடலுக்கு சிறந்தது என்று முடிபு செய்து கொண்டான் மன்னன்.
அவனிடமிருந்த யானைகளில் உருவத்தால் பெரியனவும் உயரமானவையும் நடை தளர்ந்து சோராத இளம் வயதுடையனவுமாகிய சில யானைகள் தெரிவு செய்யப்பட்டு அவற்றின் மீது தொட்டில் போன்ற இருக்கைகளை அமைத்து அந்த இருக்கைகளை வெய்யில் மழை போன்றன தாக்காவண்ணம் மேலே கூடாரங்களும் அமைக்கப்பட்டன.
மன்னனும் மனைவியரும் மந்திரிகளும் பிற முக்கியமானவர்களும் யானைகளில் ஏறி அமர்ந்துவிட்டார்கள். இப்போது பாதுகாப்பு ஏற்பாடுகளில் கவனம் செலுத்தப்பட்டது.
போருக்குப் பழக்கப்பட்டட சில யானைகள் முன்னும் பின்னும் நிறுத்தப்பட்ன. அவற்றின் மீது வாட்களும் ஈட்டிகளும் தாங்கிய போர் விரர்கள் ஏறிக் கொண்டார்கள்.
முன்னே செல்ல இருந்த யானைகளுக்கு கவசங்கள் இடப்பட்டு அவற்றின் முதுகிலே இரும்பினால் செய்யப்பட்ட உலக்கைகள் ஏற்றப்பட்டன.
யாராவது பகைவர் வந்து இடைமறித்தால் அந்த உலக்கைகளை எடுத்து அவற்றின் துதிக்கையிலே கொடுத்துவிட்டால் போதும். அந்த உலக்கைகளால் எதிரிகளின் குதிரைகளையும் படை வீரர்களையும் தேர்களையும் அடித்து வீழ்தும் வேலையை அந்த யானைகள் பார்த்துக் கொள்ளும்.
பிரயாணத்துக்குத் தேவையான உணவுகள் வண்டுகளும் நுளம்புகளும் நெருங்காவண்ணம் இலுப்பை எண்ணெயில் ஊறவைக்கப்பட்ட தீப்பந்தங்கள் என்று தேவையான பொருட்களுடன் பணியாளர்களும் ஏறிக் கொண்டார்கள். பிரயாணம் தொடங்கியது.
மன்னனின் செவிக்குக் கேட்கும்பயாக இசைக்கருவிகளும் பாடல்களும் ஒலித்தன. தன் நாட்டின் இயற்கை வளங்களைக் கண்டுகொண்டே வந்த மன்னன் தன் நாட்டையும் அயல் நாட்டையும் பிரிக்கும் கொடிய காட்டுப்பகுதிக்கு வந்துவிட்டான்.
காட்டுப் பாதையில் பயணம் தொடர்ந்தது. பொழுதும் இருளாகி விட்டது. நடுக்காட்டிலே ஒரு புலியின் உறுமல் சத்தம். பரபரப்பும் பயமும் தொற்றிக் கொள்ள படைவீரர்கள் புலியைத் தேடினர்.
அது அவர்கள் தன்னைத் தாக்கப் போகின்றார்கள் என்பதை உணர்ந்து சினத்துடன் முன்னால் நின்றுகொண்டிருந்த போர் யானை ஒன்றின் முகத்திலே தாவி ஏறி அதன் பாகன் குரல்வளையை பற்றி இழுத்துக் கொண்டு நிலத்திலே குதித்தது.
எதிர்பாரா இந்தத் தாக்குதலால் யானைகள் மிரண்டு இங்கும் இங்குமாக திரும்பின. யானைகளில் இருந்த பலர் நிலத்திலே வீழ்ந்தனர். சிலர் அவற்றின் கால்களில் சிக்கி மிதிபட்டு உயிரிழந்தனர். சிலர் காயம் அடைந்தனர். மன்னன் ஊர்வலத்தின் கட்டமைப்பு சிதைந்தது. யார் எங்கு இருக்கின்றார்கள் என்று தெரியவில்லை.
நீண்ட நேரத்தின் பின்பு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு அனைவரும் ஒன்று சேர்க்கப்பட்டார்கள். ஆனால் புலி பாகன் என்ற இரையோடு ஓடி மறைந்துவிட்டது.
காட்டை விட்டு வெளியேறி விரைவாக அயல்நாட்டை அடைந்துவிட வேண்டும் என்ற எண்ணமே அனைவரது உள்ளத்திலும் வியாபித்திருந்தது. பிரயாணம் வேகமெடுத்தது.
பயனுள்ள பேச்சுத் துணைக்காக தான் வேண்டி அழைத்து வந்த திருவள்ளுவரிடம் மன்னன் கேட்டான். என் யானைகள் உருவத்தால் பெரியன. கூர்மையான நீண்ட தந்தங்களும் உடையன. அதைவிடப் பல போர்க்களங்களிலே எதிரிகளைக் கொண்று குவித்த அனுபவம் மிக்கன.
அப்படிப்பட்ட யானைகளால் ஏன் தன்னந்தனியாக வந்த ஒரு புலியை எதிர்த்து நிற்க முடியவில்லையே என்ன காரணம் என்றான் மன்னன்.
வள்ளுவர் சொன்னார். அரசனே புலியை விட உன் யானைகள் உருவத்தால் பல பெரியவைதான். புலியைவி பல மடங்கு பலமும் பொருந்தியவை தான். புலியிடம் இல்லாத எதையும் குத்திக் கிழிக்கக் கூடிய கூரிய தந்தங்கள் என்ற இன்னுமொரு ஆயுத வசதியும் உன்னுடைய யானைகளிடம் இருக்கின்றன.
அப்படி இருந்தும் புலியைக் கண்டதும் உன் யானைகள் வெருண்டு அங்குமிங்குமாக ஓடியதற்குக் காரணம் உன் யானைகளிடம் இல்லாத ஒன்று புலியிடம் இருப்பதே. அதுதான் மன வலிமை என்கின்ற ஊக்கம்.
முதுகிலே பெரும் பாரத்தைச் சுமந்தாலும் அதைப் பொருட்படுத்தாது சோம்பேறிகளாக ஆடி அசைந்து நடைபோட்டு வந்த யானைகளால் எப்படியாது ஒரு இரையைக்கூட அடையமல் போகக்கூடாது என்ற எண்ணமும் அதற்கான ஊக்கத்தோடும் தாவிப்பாய்ந்த புலியைத் தடுக்க முடியவில்லை. இதுவே உண்மை.
இந்த உண்மை யானை புலிக்கு மட்டுமல்ல. உங்களைப் போன்ற நாடாளும் மன்னர்களுக்கும் பொருந்தும். பகை அரசர்களை விடப் பலமடங்கு தேக பலமும். ஆயுத பலமும் இருந்தாலும் மனத்திலே இதை நான் முடித்தே ஆகவேண்டும் என்ற ஊக்கம் இல்லாமல் போனால் தன்னை விடச் சிறியவர்களிடமும் அஞ்சி நடுங்க வேண்டிய சூழ்நிலை தான் வந்து சேரும் என்றார் திருவள்ளுவர்.
பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலி தாக்குறின்
(திருக்குறள் – ஊக்கம் உடைமை – குறள் 599)
பரியது – உருவத்தால் பெரியதும்
கூர்ங்கோட்டது ஆயினும் – கூரிய தந்தங்களை உடையவை என்றாலும்
புலி தாக்குறின் – தங்களை விட சிறிய புலி தாக்க வரும்போது
வேரூஉம் – பயப்படும்
(சங்கத்தமிழ் – வெரூஉம் இடைக்காலத்தமிழ் – அஞ்சும் தற்காலத்தமிழ் – பயப்படும்)
கனடா தமிழர் தகவல் 5.5.2026 இதழில் நான் எழுதிய கட்டுரை இது.