மணிமேகலையும் மானுட நீதியும்!
பூம்புகார்ப் பட்டிணத்திலே இருபத்தியெட்டு நாட்களுக்கு இந்திரவிழா வருகின்றது. பல ஊர்களில் இருந்தும் மக்கள் வந்து குவியப் போகின்றார்கள். பல்வேறு நாடுகளில் இருந்தும் பலதரப்பட்ட மக்களும் வந்து கவேரிக் கரையில் நிறையப் போகின்றார்கள்.
எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடைபெற்று விடாமல் விழாவை சிறந்த முறையில் நடத்தி முடிக்க அன்று ஆட்சியில் இருந்த தமிழ் அரசாங்கம் மக்களுக்கு மிக முக்கியமான அறிவுறுத்தல் ஒன்றை விடுக்கின்றது.
மக்களே இந்திரவிழாவைக் காணும் பொருட்டு பல்வேறு சமயக் கொள்கைகள் குணாதிசயங்கள் பண்பாடுகள் என்று பலவிதத்திலும் வேறுபட்ட மக்கள் வந்து எமது ஊரிலே கலக்கப்போகின்றார்கள். அவர்களின் செயற்பாடுகள் உங்கள் மனத்துக்குப் பிடிக்காமல் போகலாம்.
எனவே உங்களோடு அனுசரித்து நடக்காத பிறரைச் சந்திக்க நேர்ந்தால் அவர்களை எதிரியாக எண்ணி அவர்களிடம் கோபம் கொள்வதோ அல்லது வாக்குவாதம் செய்வதையோ தவிர்ந்து அந்த இடத்தைவிட்டு விலகிப்போய்விடுங்கள். அதுவே நல்லது.
பற்றா மாக்கள் தம்முடன் ஆயினும்
செற்றமும் கலாமுஞ் செய்யாது அகலுமின்
(மணிமேகலை – விழாவறை காதை)
மணிமேகலை கட்டளையாக இல்லாமல் வேண்டுகோள் போல விடுக்கும் இந்தப் புத்திமதி பூம்புகார் மக்களுக்கு மட்டுமல்ல எந்தக் காலத்துக்கும் எந்த நாட்டு மக்களுக்கும் மனிதநேயத்தை வளர்க்கும் மிகச்சிறந்த உபதேசமாகும்.
இந்த அறிவித்தலை விடுத்தது ஒரு காலத்தில் எங்களை ஆட்சி செய்த தமிழ் அரசாங்கம் என்று நினைக்கும் போது தமிழரின் அரசியல் அறம் எவ்வளவு உயர் நிலையில் இருந்து இன்று குட்டிச்சுவராகி இருக்கின்றது என்பது புலப்படும்.
இரா.சம்பந்தன்