|

தமிழும் – பொருளும்!



அன்றைய காவிரிப்பூம் பட்டிணத்திலே இந்திரவிழா ஆரம்பமாகி மிகவும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலம். இருபத்தியெட்டு நாட்கள் தொடர்ந்து நடைபெறும் விழாவிலே கலந்து கொள்வதற்காக உள்ளுர் மக்களும் நாட்டின் பிறபாகத்து மக்களும் மடடுமல்ல வெளிநாடுகளில் இருந்தும் ஆண்களும் பெண்களுமாகப் பலர் வந்து காவேரிக் கரையிலே கூடாரம் அமைத்துத் தங்கியிருக்கின்றார்கள். அங்கு இடம்பெறும் கலை நிகழ்ச்சிகளைக் காண்பதற்காக .
அதிக மக்கள் கூடும் இடத்தில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற கவலையில் அன்று ஆட்சியில் இருந்த தமிழ் அரசாங்கம் முன்னெச்சரிக்கையாக சில அறிவுறுத்தல்களை விழாத் தொடர்பான கட்டுப்பாடுகளாக வெளியிடுகின்றது.
இந்திரவிழாவிலே பல்வேறு தேசங்கள் பல்வேறு ஊர்கள் பல்வேறு மதக் கொள்கைகள் வாழ்வியல் பண்பாடுகள் சார்ந்த மக்கள் வந்து கூட இருக்கின்றார்கள். எனவே அந்த வேறுபாடுகளால் அவர்கள் செய்யும் சில செயல்கள் உள்ளுர் வாசிகளுக்குப் பிடிக்காமல் போகலாம் அப்படி மனதுக்கு வெறுப்புத் தரக்கூடிய பிடிக்காத மனிதர்களைக் கண்டால் அவர்கள் மீது கோபமோ அவர்களுடன் வாதிட்டுக் கலகம் செய்து குழப்பம் விளைவிக்கும் செயல்களையோ தவிர்த்து நீங்களாகவே அவர்களையும் அந்த இடத்தையும் விட்டு விலகிச் சென்றுவிடுங்கள்.
இது அரசாங்கம் வெளிட்ட ஒரு முக்கிய அறிவிப்புகளில் ஒன்றாக இருந்தது.
பற்றா மாக்கள் தங்களோடு ஆயினும்
செற்றமும் கலாமும் செய்யாது அகலுமின்
(மணிமேகலை – விழாவறை காதை)
இத்தகைய சாத்வீகமான ஒரு அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டு இருந்தும் ஒரு யவணதேச இளம் தம்பதிகளுக்கும் உள்ளுர் பிரமுகர் ஒருவருக்கும் வாக்குவாதம் வந்துவிடுகின்றது. மதுவுண்டு களித்த அத்தம்பதிகள் அறைகுறை ஆடையுடன் காவிரி நீரில் இறங்கி தமிழ்க் காலாச்சாரத்துக்கு ஊறு விளைவித்தார்கள் என்பது உள்ளுர் பிரமுகரின் கோபம். பிரச்சனை பெரிதாகும் முன்பே காவல் துறையினர் பிரமுகரை மட்டும் கைது செய்துகொண்டு அரண்னைக்குக் கொண்டுசென்று விட்டார்கள்.
இன்றுபோல அன்று நீதிமன்றங்கள் கிடையாது. அரண்மனையே நீதிமன்றம். அரசனே நீதிபதி. வழக்கு அரசன் முன்பு வந்தது. அரச கட்டளையை மதிக்காமல் பிற நாட்டவர்களுடன் கலகத்தில் ஈடுபட்டது குற்றச்சாட்டு.
பெரியவரே ஏன் நீங்கள் அரசாணையை மீறி வெளிநாட்டவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டீர்கள். அது குற்றமல்லவா இது அரசனின் கேள்வி.
அரசே காவிரியில் எனது மனைவியும் வயது வந்த என் பெண் பிள்ளைகளும் பிற பெண்களும் நீராடிக் கொண்டிருந்தார்கள். அங்கே அந்த ஆடவனும் அந்தப் பெண்ணும் நடந்துகொண்ட விதம் எனது கோபத்தைத் தூண்டிவிட்டது. அரச கட்டளையையும் மீறித் தமிழ்ப் பண்பாடு உணர்வு எனக்கு அதிகமானதால் அப்படி ஆயிற்று. அது என் தப்புத்தான்.
நீங்கள் என்ன தொழில் செய்கின்றீர்கள். ஆசிரியர் தொழில்.
ஆசிரியராக இருந்தும் நீங்கள் தவறு செய்யலாமா.
அரசே இத்தகைய கலாச்சாரக் குற்றங்களை நாம் விழா அமைதி கருதிப் பொறுத்துக் கொண்டால் நாளைக்கு அதுவே முன்னுதாரணமாகி எங்கள் வாழ்விலும் நுளைந்துவிடக்கூடுமோ என்ற அச்சம் தான் எனது கோபத்துக்கக் காரணமாகியது. அரசாங்கத்தின் இந்தக் கட்டளை உள்ளுர் வாசிகளின் வாயைக் கட்டி வெளிநாட்டவர்களின் தவறுகளை அதிகப்படுத்தும் என்பது எனது எண்ணம்.
ஆசிரியராக இருந்தும் எமது அறிவிப்பில் இருக்கும் ஒரு சொல்லைப் புரிந்து கொள்ளாமலே இருந்துவிட்டீர்களே. உங்களுக்கு தொல்காப்பியத்தின் மரபியல் இலக்கணம் பற்றித் தெரியுமா
தெரியும் அரசே.
நல்லது அதிலே உயிர்களின் அறிவுத்திறன் பற்றித் தொல்காப்பியர் என்ன சொல்கின்றார்.
தொட்டால் உணர்ந்து கொள்ளும் உயிர்கள் ஓறறிவு உடையவை. அதனோடு சுவையையும் உணர முடிந்தால் இரண்டறிவு. மூக்கு மூன்றறிவு கண் நான்கறிவு காதும் இருந்தால் ஐந்தறிவு உயிர் இந்த ஐந்துடன் மனம் என்ற ஒன்றும் இருந்தால் அது ஆறறிவு உயிர்.
ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனொடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
ஆறறி வதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே
அதற்கு தொல்காப்பியம் காட்டும் உதாரணங்கள் எவை? அவை இந்த வழக்கிற்குத் தேவைப்படுகின்றது
புல்லும் மரனும் ஓரறி வினவே
நந்தும் முரளும் ஈரறி வினவே
சிதலும் எறும்பும் மூவறி வினவே
நண்டும் தும்பியும் நான்கறி வினவே
மாவும் மாக்களும் ஐயறி வினவே
மக்கள் தாமே ஆறறி வுயிரே
(தொல்காப்பியம் – பொருள் அதிகாரம் – மரபியல்)
அதாவது விலங்குகளுக்கும் மாக்கள் எனப்படும் சில மனிதர்களுக்கும் ஐந்து அறிவு இல்லையா?
உண்மைதான் அரசே
எமது கட்டளையிலும் பற்றா மனிதர்கள் என்று நாம் குறிப்பிடாமல் பற்றா மாக்கள் என்று நாம் குறிப்பிட்டோம் அதைக் கவனத்தில் கொள்ளாமல் வெளிநாட்டிலிருந்து வந்த ஐந்தறிவு மாக்கள் சிலருடன் ஆறறிவு படைத்த மனிதர்களான நீங்கள் வாக்குவாதம் செய்யலாமா?
புறநாடுகளில் இருந்து பண்பாடு மிக்கவனும் வருவான். அதை இழந்தவனும் வருவான். நாங்கள் தான் பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
சரி இனியாவது தமிழின் பொருள் உணர்ந்து நடந்து கொள்ளுங்கள். சென்று குடும்பத்துடன் விழா நிகழ்ச்சிகளைக் மீண்டும் கண்டு களியுங்கள் என்றான் அரசன்.
இரா.சம்பந்தன்

கனடா தமிழர் தகவல் 5.2.2026 இதழுக்கு நான் எழுதிய கட்டுரை இது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.