ஆண்கள் வாழ்விலே பெண்களின் பங்கு!
ஒரு மனிதனிடத்திலே கருணை மனப்பான்மையை கொண்டுவருபவள் பெண். தெருவிலே ஒரு குடிகாரன் நின்று கொண்டு கத்தியைச் சுழற்றிக்காட்டி எல்லோரையும் வெட்டி எறிந்துவிடுவேன் என்று கூவும் போது எனக்கென்ன பெண்டாட்டியா பிள்ளையா என்று ஒரு வசனத்தையும் அதனோடு சேர்த்துக்கொள்கின்றான் இல்லையா. மனைவி இருந்தால் அதைச் செய்யமாட்டான் என்பது அதன் பொருள்.
அது போலக் கம்பராமாயணத்திலே இராமன் செய்த கொலைகள் பதினொன்று. அதில் எந்த ஒரு கொலை நடந்த போதும் சீதை இராமனுக்குப் பக்கத்தில் இல்லை.
இராவணனுக்கு முதலே தன் மனைவியாகிய சீதையின் அழகில் மயங்கி காக வடிவத்தில் வந்து அவள் மார்பில் இருந்த இந்திரன் மகனான சயந்தனை இராமன் கொல்ல முற்பட்ட போது அருகே இருந்த சீதை அந்தக் கொலையைத் தடுத்து விட்டாள். இராமயண வரலாற்றிலே தடுக்கப்பட்ட ஒரு கொலை இது மட்டும் தான்.
சயந்தன் காக வடிவாக மாற முடியுமா இராமாயணமே பொய் என்று பகுத்தறிவை இங்கே தூக்கிப்பிடிக்கக்கூடாது. ஒரு மனிதனுக்கு மனைவி இருந்தால் சரியோ தவறோ கொலை என்ற அளவுக்கு அவனைப் போக விடாமல் தடுத்துவிடுவாள் என்பது இதன் பொருள்.
இதைத்தான் வாலி வதைப்படலத்திலே தன்னை மறைந்திருந்து தாக்கிய இராமனிடம் வாலி கேட்டான்
இராமா அரச தருமங்கள் நல்ல குணங்கள் எல்லாம் நீ பிறந்த சூரிய குலத்து மன்னர்களுக்கு கற்காமலே பிறவியோடு ஒட்டிவருவது. அப்படி இருக்கும் போது நீ இப்படி மறைந்து நின்று என்னைத் தாக்கும் தருமமில்லாத செயலைச் செய்திருக்கின்றாய்.
உன்னுடைய புத்தி இப்படிப் பிழையான பாதையில் போனதற்கு உன் மனைவி சீதை உனக்குப் பக்த்தில் இருந்து தருமமில்லாத செயலைச் செய்ய வேண்டாம் என்று உன்னைத் தடுக்காமல் போனது தான் காரணமா என்று கேட்டான் வாலி.
கோ இயல் தருமம் உங்கள் குலத்து உதித்தோர்கட்கு எல்லாம்
ஓவியத்து எழுத ஒண்ணா உருவத்தாய்! உடைமை அன்றோ?
ஆவியை சனகன் பெற்ற அன்னத்தை அமிழ்தின் வந்த
தேவியை பிரிந்த பின்னை திகைத்தனை போலும் செய்கை!
(கம்பராமாயணம் – வாலி வதைப்படலம்)
இங்கேயும் கம்பன் மனைவி பக்கத்தில் இருந்தால் பாவ காரியங்கள் தடுக்கப்பட்டுவிடும் என்ற கருத்தை வலியுறுத்த இந்தப் பாடலைக் கொண்டுவந்து வாலி வதத்திலே வைத்தான். ஆனால் இதைப் புரிந்து கொள்ளாமலோ அல்லது புரிந்து கொண்டும் தன்னை இலக்கிய மேதாவி என்று காட்ட வேண்டிய நிர்ப்பந்தத்தினாலோ இந்தப் பாட்டைக் கையில் எடுத்துக் கொண்டு இராமனைக் கிறுக்கன் என்று கம்பன் சொல்லியதாக வார்த்தையை விட்டு பிரபல திரைப்படப் பாடலாசிரியர் ஒருவர் தமிழ் தெரிந்தவர்களிடம் இருந்து மிகுந்த எதிர்ப்பை அண்மையில் சம்பாதித்துக் கொண்டார்.
இரா.சம்பந்தன்