Dr. நந்தா ராஜன்
மகளே வாழி!
பண்பிழந்து எழுதுகின்ற முகநூல் மாந்தர்
பதிவுகளைக் கண்டுமனம் வருந்தி இந்தக்
கண்ணிழந்த மானுடரின் தொடர்பு வேண்டாம்
கண்ணியத்தைக் காவாத முகநூல் வேண்டாம்
எண்ணமுடன் எழுந்துசெல்ல முயன்ற வேளை
என்கவிதை இதைப்பார்நீ என்றால் போல
பெண்ணொருத்தி தமிழிச்சி யாழ்ப்பா ணத்தின்
பிள்ளையவள் கவிதைகளால் தடுத்தாள் என்னை
எதுகைகளும் மோனைகளும் ஏற்றிக் கொண்டு
எருதுகளாய் உணர்ச்சிகளே இழுத்துச் செல்லும்
புதுமைமிகும் கவிதைநிறை வண்டி ஒன்று
போவதனை முகநூலில் நானும் பார்த்தேன்
இதுகவிதை இதுகவிதை என்று நெஞ்சம்
எழுந்துநின்று துள்ளியது ஓடிச் சென்று
அதுவரைக்கும் வந்தகவிச் சுவடு பார்த்தே
அதிசயித்து முகநூலில் தேடிப் பார்த்தேன்
கழுத்துமுனை மேலுள்ள பாகந் தன்னில்
கவிஞரெனத் தமையெண்ணித் திரிவார் விட்டு
எழுத்துகளைச் சக்கரையில் எழுதிப் போட்டு
எடுத்துவைத்த சுவையுணர்வு அதிலும் கூட
கொழுத்தநிலா ஒளிவீசும் சுகத்தைப் போல
கூறிநிற்கும் கருத்துக்களை; கனடா வாழும்
பழுத்ததமிழ்ப் பாவையவள் நந்தா ராஜன்
பதிவுகளில் காண்கின்றேன் மகளே வாழி!
அலையொதுங்கும் சருகெனவே ஆடி ஓய்ந்து
அதன்பின்பே தமிழ்ப்பணியில் பொழுது போக்கும்
நிலையெடுக்க நினைப்பவர்கள் வாழும் நாட்டில்
நேர்வழியில் தமிழ்மொழியைக் கொண்டு செல்ல
தலையெடுத்த இளவயதார் சிலர்தான் உள்ளார்
தமிழ்ப்பணிகள் செய்துவரும் அவருக் குள்ளே
கலைநிறைந்த தழிழுணர்ந்த நெஞ்சத் தோடு
கனபணிகள் ஆற்றிவரும் நந்தா வாழி!