|

முதலையும் குரங்கும்!

முற்றிப் பழுத்ததோர் நாவல் – அதில்
முன்பொரு காலத்தில் வாழ்ந்ததோர் குரங்கு
சற்றுப் பருத்ததோர் மனைவி –அவள்
சண்டைப் பிடித்தாலும் கேளாமல் ஆற்றில்

குற்றி மரத்துண்டு போலத் – தேகம்
குளிரக் கிடந்ததோர் முதலையின் நட்பை
பெற்று மகிழ்ந்தது வாழ்வில் – கறுத்த
பெரிய பழங்களாய்க் கொடுத்தது வாயில்

நாவல் குரங்கது தந்த – அந்த
நாவல் பழங்களை முதலையும் ஆற்றில்;
காதல் மனைவிக்கு நீட்ட – அன்பு
கனிந்த மனைவியும் வாங்கியே உண்டு

இனிய பழங்களை உண்ணும் – இந்த
இளைய குரங்கதன் ஈரலும் சுவைக்கும்
கனியக் கதைபல பேசி – அந்தக்
கரிய குரங்கினைக் கொண்டுவா தின்போம்

ஆசை மனைவியும் கெஞ்ச – தனது
ஆருயிர் நண்பனாம் குரங்கிடம் முதலை
மீசையும் தாடியும் வைத்த – உந்தன்
மேனியைப் பார்த்திட விரும்பினாள் மனைவி

ஏறிக்கொள் முதுகிலே நண்பா – உன்னை
எங்களின் வீட்டுக்குக் கொண்டுபோய் மீண்டும்
ஊறிக் கிடக்கும் கரையில் – இருக்கும்
உந்தனின் நாவல் வீட்டிலே சேர்ப்பேன்

வஞ்சக முதலையின் வார்த்தை – காதில்
வந்து வீழுந்ததும் முதுகிலே ஏறி
கெஞ்சிய முதலைப்பெண் பார்க்க – குரங்கும்
கெட்ட முதலையின் வீட்டுக்குப் போகும்

வழியிலே சொன்னது முதலை – இனி
வருந்திப் பயனில்லை நண்பனே உன்னை
கிழியவே பற்களால் பற்றி – ஈரல்
கிழித்து எடுத்துண்ண அழைக்கிறோம் நாங்கள்

ஏங்கித் தவித்தது குரங்கு – நண்பா
என்னதான் செய்கிறாய் கொண்டுபோ கரைக்கு
தூங்கிக் கிடக்குதென் ஈரல் – அந்தத்
தூரத்து நாவலின் பொந்திலே மறைவாய்

எடுத்துத் தருகிறேன் என்ன – முதலை
எடுத்துவா எனச்சொல்லி கரைவரக் குரங்கும்
அடுத்த கணமதில் தாவி – முதலை
அண்ட முடியாத தூரத்தில் ஓடி

நல்லதைச் செய்தவென் வாழ்வில் – ஐயோ
நன்மைதான் வருமென்று நம்பியே இருந்தேன்
நல்லது போட்டுவா முதலாய் – உன்னை
நம்பிய பாவத்துக்கு எனக்கிது வேண்டும்

சிரித்து மறைந்தது குரங்கும் – அந்தச்
சேற்று முதலையின் நட்பினைத் துறந்தே
பிரித்துக் கொள்ளடா தம்பி – உன்னைப்
பிரச்சனை முதலைகள் கூட்டத்தில் இருந்தே!

இரா.சம்பந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.