திருக்குறளும் ஒரு உரைத் தவறும்!
கொல்லான் புராலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்
(திருக்குறள் – புரான் மறுத்தல் – குறள் 260)
இந்தக் குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர் முதற்கொண்டு கருணாநிதி வரை அனைவருமே கொலை செய்தலைத் தவிர்த்தவனும் புரால் உணவை உண்ண மறுத்தவனுமாகிய ஒருவனை எல்லா உயிர்களும் கைகூப்பித் தொழும் என்ற பொருட்படத்தான் உரை எழுதி வந்திருக்கின்றார்கள்.
எல்லா உயிர்களுக்கும் கை கிடையாது. எனவே எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும் என்று இவர்கள் உரை காண்பது தவறு.
உண்மையில் இக்குறளை இப்படித்தான் படிக்க வேண்டும்.
கொல்லான் புராலை கைகூப்பி மறுத்தானை
எல்லா உயிரும் தொழும்.
புரால் உணவை உண்ணும்படி நிர்ப்பந்திக்கப்படும் போது கூட அப்படி வற்புறுத்துபவரைக் கும்பிட்டு என்னை விட்டுவிடுங்கள் என்று அதை உண்ண மறுத்தவனை எல்லா உயிரும் தொழும் என்று உரை காணும் போது கையில்லாத உயிர்களும் மனத்தால் வணங்கும் என்று நல்ல பொருள் கிடைக்கும் என்பது எனது கருத்தாகும்.
இரா.சம்பந்தன்