செண்பகத்தைப் பார்க்க வேண்டும்!
செண்பகத்தைக் காதலித்தேன் படிக்கும் போது
சென்றுவிட்டாள் லண்டனுக்கு கணவ னோடு
எண்ணவில்லை இப்படித்தான் செய்வாள் என்று
என்றாலும் கோபமில்லை எனக்கு ஆனால்
கண்ணிரண்டில் நிற்குதவள் அழகுக் கோலம்
காட்டுகிறேன் அவழகைக் கவிதை ஆக்கி
பெண்ணவளை நான்பாடும் கவிதை பார்த்து
பெருங்கவிஞன் இவனென்று வியந்து போவீர்!
நேருச்சி எப்போதும் கோடாப் போட்டு
நெகிழவைத்த காப்பிலையின் காம்பு கூந்தல்
சீருக்கு உவமைசொல்ல வேண்டும் என்றால்
சிக்குண்ட நெட்டிகளின் குவியல் ஆகும்
ஊருக்கு கதைபேசும் கண்கள் கோடா
ஊத்திவைக்கும் சட்டியைப்போல் கறுப்பு அந்த
ஆருக்கும் ஆசைவரும் தேகம் கூட
அடுக்கிவைத்த பத்துக்கட்டு என்பேன் நானும்
அஞ்சுவிரல் ஒவ்வொன்றும் வெட்டுக் கட்டை
அவள்மார்போ வெட்டுத்தூள் திராசுத் தட்டு
பிஞ்சுவிரல் கால்தனிலே கொலுசு கூட
பிடிசுருட்டு வால்கட்டும் நூலாய்த் தோன்றும்
நெஞ்சுகளில் இடம்பிடித்து என்னை மட்டும்
நெருங்காமல் தோற்கடித்த சுருட்டுப் பெட்டி
வஞ்சகத்தி செண்பகத்தை ஊரில் கண்டால்
வந்தென்னைக் கூப்பிடுங்கள் பார்க்க வேண்டும்!
இரா.சம்பந்தன்