இணுவைக் கந்தன் திருப்புகழ்!
ஆடுமயில் கோபுரத்தில் அலகுரசி முருகபதம்
அதைநினைந்து அன்புருகக் கூவ – அங்கு
கூடுகட்டி மருதமரக் கிளையிருந்து பறவையினம்
குறத்திமண வாளனெனப் பாட – நிலம்
மூடுபயிர் தோட்டமெலாம் முருகுபுகழ் போற்றுபழ
மூத்தகுடி மானுடர்கள் வாழும் – இணுவில்
தேடிவந்து குடியிருந்து திருவருளைத் பொழியுமெங்கள்
தேவியவள் பார்வதியின் குமரா – நூறு
கோடிகொட்டிக் கொடுத்தாலும் செய்யவினி முடியாத
கோலமிகு மஞ்சவுலாப் பிரியா – மேயும்
ஆடுவந்து வில்வமரம் அதனிழலில் படுத்திருக்க
அருகிருந்து காக்கையினம் கரையும் – விளாத்தி
ஓடுகண்ட இனியபழம் இருக்குமொரு மரம்விரும்பி
உறையுமொரு வைரவரின் அருகில் – முருகா
காடுகண்ட வள்ளிதெய்வ யானையெனும் தேவியர்கள்
காலமெலாம் துணையிருக்க மகிழ்வாய் – ஒரு
வீடுகொண்ட உன்கருணை வெள்ளமதில் இணுவைநகர்
வேண்டுவன பெற்றுயுயிர் வாழும்! – என்றும்
வாடுகின்ற நெஞ்சமெலாம் வள்ளலுந்தன் கோவிலடி
வாசல்வந்தால் துன்பமெலாம் ஓடும்! – அங்கு
பாடுகின்ற திருமுறையில் பத்திலொன்று கேட்டாலும்
பாவவினைத் தொடர்புவலி ஆறும் – இலங்கை
நாடுகண்ட இணுவையுறை நாயகனாம் கந்தனுனை
நாடியென்றும் போற்றிடுவோம் வாழி!
இரா. சம்பந்தன்