புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள்
இறகுகொடு மயிலென்றால் கொடுத்தி டாது
இழுத்துவைத்து அறுத்திடணும் என்ற எண்ணம்
பிறகுவந்த தமிழினத்தில் இருந்த தாலே
பிரபாவே எங்களுக்குத் தலைவன் ஆனாய்!
உறவுகொண்ட தென்னகமும் ஈழ நாடும்
உதிக்கிறது தமிழீழம் என்று நின்றோம்
துறவுகொண்டு ஓடியவர் போக மீதித்
துணிந்தவர்கள் உன்பின்னால் நின்றார் தம்பி!
இனவுணர்வு மிகுந்தவர்கள் இருந்த மட்டும்
எத்தனையோ வெற்றிகளை நீயும் கண்டாய்!
கனவுகளை மென்மேலும் வளர்த்த நாங்கள்
களங்களிலே அஞ்சாமல் வென்றும் வந்தோம்!
மனவுணர்வில் வாழ்வியலில் புலிகள் ஒன்றே
மானத்தின் உறைவிடமாய்த் தமிழர் கண்டார்!
தனவரவில் ஆயுதத்தில் தமிழர் தேசம்
தலைசிறந்து விளங்கியதே தலைவன் உன்னால்!
ஏற்றபெரும் பொறுப்பினுக்கு இயன்ற மட்டும்
எல்லாமே செய்தவன்நீ ஆனால் தம்பி
காற்றடிக்கும் திசையிலே மட்டும் தானே
காற்றாடி திரும்பிவிடும் அதனால் தானே
நாற்றெனநீ வளர்த்தசில பயிர்கள் கூட
நரியாகி உனைவிட்டு ஓடி இன்றோ
கூற்றுவனின் கைகளிலே நீயும் சிக்க
கொண்டாட்டம் செய்கிறது ஈழ நாட்டில்!
பிள்ளைகளும் மனைவியுடன் வெளிநா டொன்றில்
பெரும்பணத்தில் இருக்கின்றார் என்றே சொன்னார்
கள்ளரவர் நீகூடக் கடைசி நேரம்
களம்விட்டு ஓடிவிட்டாய் என்றும் சொன்னார்
முள்நடுவே உறங்கியவுன் வாழ்வை அந்த
முள்ளிவயல் வாய்காலில் முடித்துக் கொண்டு
எள்ளிநகை யாடுகின்றாய் அவரைப் பார்த்து
எங்கொளிந்தும் போவில்லை என்று வீழ்ந்தே!
தோன்றியதும் வாழ்ந்ததுவும் வீழ்ச்சி கண்டு
துடைத்தெறியப் பட்டதுவும் புறத்தில் ஆமாமாம்
ஆன்றமன உணர்வுகளில் ஐயா உன்னை
அழித்தெறிய முடியாதே தமிழர் வாழ்வில்
ஊன்றியவுன் நினைவுகளை உணர்வை இன்றும்
உள்ளத்தில் சுமக்கின்ற இனத்துக் கென்றும்
நான்பிறந்து வருகின்றேன் விரைவில் என்றே
நவம்பரிலே வீசுகின்றாய் காற்றாய் நின்றே!