புத்தாண்டு பிறக்கிறது

புத்தாண்டு பிறக்கிறது கால ஏட்டில்
புதுப்பக்கம் திறக்கிறது போன ஆண்டு
கொத்தோடு போனவர்கள் பலபேர் நெஞ்சில்
குறையோடு போனவரும் பலபேர் சொத்தை
வித்தோடிப் போனவரும் பலபேர் வீட்டை
விட்டோடிப் போனவரும் பலபேர் கண்ணில்
முத்தான நீரோடு பலபேர் என்று
முடிவுற்றுப் போனதது புதிதாய் ஒன்று!
வங்கத்துக் கடல்கடந்து துணைக்கு வந்து
வளைத்தெம்மைச் செல்லடித்த கவலை உண்டு
சிங்கத்தின் கர்ஜனைபோல் உணர்ச்சி ஊட்டி
சீரழித்த தலைவர்களின் நினைவும் உண்டு
சங்கத்துத் தமிழிதென்று பழமை காட்டிச்
சாகடித்த கவிதைகளும் கதையும் உண்டு
அங்கத்தை அருங்கற்பை அணியை என்று
அனைத்தையுமே பறிகொடுத்த அவலம் உண்டு
பள்ளிகளில் ஆலயத்தில் பங்கர் பொந்தில்
பயந்தொழிந்து வாழ்ந்திட்ட சோகம் உண்டு
நள்ளிரவில் நடுவழியில் நாயைப் போல
நம்மவரின் பிணம்கிடந்த நாட்கள் உண்டு
கொள்ளியிடும் மக்களினைத் தமக்கு முன்னே
கொள்ளியிட்டுப் புலம்பியவர் பலபேர் உண்டு
வெள்ளிவரும் வான்வெளியை உணவுக் காக
வேதனையாய்ப் பார்த்தழுத சிறார்கள் உண்டு
ஊர்முழுதும் படைதிரட்டி யுத்தம் செய்து
உள்ளதையும் பறிகொடுத்த கவலை உண்டு
ஏர்முனைக்கு உரியதமிழ் நிலங்கள் எல்லாம்
எதிரிகளே குடியிருக்கும் அவலம் உண்டு
பார்முழுதும் சேர்ந்தடித்துக் கொல்லா வண்ணம்
பக்குவமாய் நடக்காத காலம் உண்டு
கூர்நிறைத்த முள்வேலிக் கம்பி பின்னால்
குடும்பமெலாம் வாழ்கின்ற கொடுமை உண்டு
தென்னகத்து மூன்றுதமிழ்த் தலையை நம்பி
திரும்பவுமே போராட்டம் என்பார் உண்டு
என்னகத்துத் தலைமையெலாம் திரும்பும் என்று
ஏமாற்றும் பேச்சுகளும் நிறைய உண்டு
தின்னவென்று ஒன்றுமில்லை தருவார் இல்லை
தீரமுடன் போர்செய்த தமிழர்க் கங்கே
என்னசெய்ய என்னசெய்ய என்றே ஏங்கும்
இந்தநிலை ஒன்றேதான் அங்கே உண்டு
போகட்டும் போய்த்தொலைக அந்த வாழ்வு
புத்தாண்டே நீயெமக்குக் கருணை காட்டு
வேகட்டும் பானைகளில் பொங்கல் சோறு
வேடிக்கட்டும் புன்சிரிப்பு முகங்கள் தோறும்
ஆகட்டும் மீண்டுமொரு புதிய வாழ்வு
ஆனத்தம்! ஆனந்தம்! அமைதி ஈழத்
தாகத்தை தணித்திடுவோம் பின்னால் பசியின்
தாக்கத்தை புத்தாண்டே முதலில் நீக்கு!!