இரண்டு இலக்கியங்களும் இரண்டு கொக்குகளும்!
அது சங்கம் மருவிய காலத்து ஒரு இரவு. அகல் விளக்கு ஒளியில் தனது திருக்குறள் ஏட்டுச் சுவடியொன்றை கவலையோடு பார்த்துக்கொண்டிருந்தார் திருவள்ளுவர். அவர் அப்படிச் சோர்ந்து போய் இருந்ததை இதுவரை கண்டதில்லை அவர் மனைவி வாசுகி .
என்ன ஏதாவது பிரச்சனையா? சமுதாயத்தை திருத்தப் போகின்றேன் என்று சொல்லி திருக்குறள் எழுத ஆரம்பித்து நாலாபக்கத்திலும் எதிர்ப்புகளைச் சம்பாதித்துக் கொண்டது தான் மிச்சம்.
குடிமக்களுக்குப் புத்தி சொன்னால் பரவாயில்லை. மன்னனுக்கும் மந்திரிக்கும் சேனாதிபதிக்கும் ஏன் திருக்குறளிலே உபதேசம் செய்கிறீர்கள். பிடித்துச் சிறையிலல்லவோ போட்டுவிடப் போகின்றார்கள்.
வாசுகி அதுவல்ல பிரச்சனை. இன்று ஓளவை வந்து போனதில் இருந்து எனக்கு மனதே சரியில்லை ஒளவை மாதிரிச் சிந்தித்துப் பாட்டெழுத ஒரு கொடுப்பனவு வேண்டும்.
அவளோடு இன்று முழுவதும் உரையாடிய பின்பு திருக்குறளை அள்ளித் தெளித்த அவசர கோலத்தில் எழுதி வருகின்றேனோ என்ற கவலை என்னை வாட்டுகின்றது. என்றார் திருவள்ளுவர்.
இங்கே பாருங்கோ உங்கள் கூடப்பிறந்த அக்கா ஒளவை. அவர்களுடைய திறமை உங்களுக்கு மகிழ்வு தர வேண்டுமே ஒழியக் கவலை தரக்கூடாது. அது போல ஒளவை சொல்லும் ஆலோசனைகளையும் மறுப்பின்றி ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் உங்களுக்குத் தேவை.
உண்மைதான் வாசுகி. திருக்குறளிலே காலம் அறிதல் என்ற அதிகாரத்திலே கடைசியாக நான் எழுதிய குறள் கொக்கு என்னும் பறவையோடு தொடர்புடையது.
ஆற்றங்கரையிலே பல பறவைகள் சிறகடித்துக் கத்திக் கூச்சல் போட்டு ஆரவாரம் செய்ய கொக்கு மட்டும் இறந்தது போல அமைதியாக இருந்து விட்டு மீனைக் கண்டதும் நீரிலே குதித்து வேகமாகவும் மீன் தப்பிப் போக விடாமலும் வேட்டை ஆடிக் கொண்டு வருகின்றதே என்ன புத்திசாலித்தனம்.
ஒரு செயலைச் செய்யும் முன்பு மனிதர்களும் இந்தக் கொக்குப் போல அமைதியாகவும் பொறுமையுடனும் இருக்க வேண்டும். காலம் கனிந்து வருவதற்கு முன்பு பரபரத்து காரியத்தைச் சிதறடித்து விடக்கூடாது. அந்தச் செயலைச் செய்யும் காலம் வந்துவிட்டால் பின்பு தாமதிக்காமலும் தவறிப்போக விடாமலும் செய்து முடிக்க வேண்டும்.
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து
(திருக்குறள் -காலம் அறிதல் – குறள் 490)
எனது இந்தக் குறளை ஒளவையிடம் காட்டினேன். படித்து விட்டு நன்றாக இருக்கின்றது. நீ இன்னுமொரு முறை என்னுடைய வாக்குண்டாம் நூலைப் படிக்க வேண்டுமப்பா என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.
அவள் ஏதாவது சொன்னால் மிகப்பெரிய செய்தி அந்த வார்த்தைகளுக்குள் அடங்கியிருக்கும் வாசுகி
ஒளவை சொன்னது போல பலமுறை இன்று அவளின் வாக்குண்டாமைப் படித்துப் பார்த்தேன். அப்போது தான் எனது அறிவு இவ்வளவு தானா என்ற வேதனை எனக்கு ஏற்பட்டது.
ஒளவை ஒருபோதும் உங்கள் கருத்துக்கு எதிராக எதுவும் பாடுவதில்லையே என்றாள் வாசுகி
இல்லை வாசுகி. கொக்கை வைத்து வாக்குண்டாமில் ஒளவையும் பாடியிருக்கின்றாள். குளத்திலே சிறிய மீன்கள் நீந்தி ஓடும் போது அவற்றைத் தப்ப விட்டு பெரிய மீன் வந்து சிக்கும் போது அதைப் பிடிப்பதற்காக கரையில் கொக்கு வாடியது போல இருக்கும்.
அது போல அடக்கத்துடன் இருக்கும் பெரியவர்களும் பிற மனிதர்கள் செய்யும் சிறிய குற்றங்களைப் போகட்டும் என்று விட்டு அவர்கள் பெரிய குற்றம் செய்யும் போது கோபம் கொண்டு தண்டித்து அழித்து விடுவார்கள். இது ஒளவையின் பாடல்
அடக்கம் உடையார் அறிவிலர் என்று எண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா-மடைத் தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வரும் அளவும்
வாடி இருக்குமாம் கொக்கு.
( ஒளவையின் வாக்குண்டாம் – பாடல் 16)
நீங்கள் காலத்துக்கு கொக்கை உவமை சொல்லியிருக்கிறீர்கள். ஒளவை அடக்கம் உடையவர்களின் செயலுக்கு உவமையாகக் காட்டியிருக்கின்றாள் . உங்கள் இருவருடைய பாட்டுக்களும் வேறுபட்டவை அல்லவா அப்படி இருந்தும் வாக்குண்டாமைப் படி என்று ஏன் ஒளவை சொல்ல வேண்டும்.
அதில் தான் மிகவும் நுண்ணிய செய்தி இருக்கின்றது வாசுகி. எனது திருக்குறளிலே நான் கொக்கின் செயலைப் பெருமையாகக் குறிப்பிட்டுள்ளேன். கொக்கு தகுந்த காலம் வரும்வரை இறந்தது போல இருந்து ஏமாற்றி மீன் பிடிக்கும் கொடிய செயலை என் திருக்குறள் அங்கீகரித்து பிறருக்கு அறிவுரை சொல்கின்றது. எனது உவமையில் கொக்குப் போல நடந்து கொள்ளுங்கள் மனிதர்களே என்கிறேன் நான்.
ஒளவையின் பாடல் அப்படியல்ல. கொக்கு ஏமாற்றி மீனைப் பிடிப்பதை அவள் ஏற்றுக் கொள்ளவில்லை. கொக்கு மீனை ஏமாற்றி அழிப்பதைப் போல பெரியவர்கள் உங்களைப் பொறுத்திருந்து அழித்து விடுவார்கள் கவனம் என்கிறாள். இங்கே அவளின் ஜீவகாருண்யம் தெரிகிறது. கொக்கும் மீனும் சிறிய உயிரினங்கள் என்றாலும் இந்தச் செயல் அவளுக்குக் கவலை தருகின்றது.
மீன்களே உங்களைப் பிடிப்பதற்காக கொக்கு இறந்தது போல இருக்கின்றது. ஏமாந்து சிக்கிவிடாதீர்கள் என்ற அறிவுரை அவள் பாட்டிலே ஒளிந்திருக்கின்றது வாசுகி.
திருக்குறள் உவமையில் கொக்கு மீனிடம்செல்கிறது. வாக்குண்டாம் உவமையில் மீன் கொக்கிடம் செல்கின்றது. திருக்குறள் கொக்கின் அறிவுத் திறனையும் வாக்குண்டாம் மீன்களின் அறியாமையையும் பேசுகின்றன.
அவள் போல அனைத்து உயிர்களுக்கும் தாயாக இருந்து பாடுவதற்கு யாராலே முடியும் என்றார் திருவள்ளுவர்.
இரா.சம்பந்தன்.
கனடா தமிழர் தகவல் 5.10.2026 இதழுக்கு நான் எழுதிய கட்டுரை இது!
(திருக்குறளும் வாக்குண்டாமும் காலத்தால் வேறுபட்டவை. ஆனாலும் திருக்குறளையும் வாக்குண்டாமையும் படிப்போர் மனதில் பதிய வைப்பதற்காக ஒன்றாக இணைத்திருக்கின்றேன்.)