சங்க இலக்கியத்தில் சமுதாய அவலங்கள்!
Shared with Public
ஊரிலே நீர் நிலைகள் எல்லாம் வற்றித் தண்ணீர் இல்லாது போய்விட அதன் காரணமாக வயற்புறத்திலே வாடிக் கிடந்த நெற்பயிருக்கு ஒரு இரவிலே மழை கொட்டினால் அந்தப் பயிர் எவ்வளவு மகிழ்ச்சி அடையுமோ அந்தளவுக்கு நான் இன்று மன நிறைவோடு இருக்கின்றேன்.
இடம் தவறிக் காதலித்து விட்டாள் இந்தக் காதல் கல்யாணம் வரை நிலைக்குமா இருவரும் ஒன்று சேர்ந்து வாழ்வார்களா என்று இந்த ஊரே ஒன்று கூடிப் பேசியது. அவர்களின் சொல்லை மெய்யாக்குவது போல என் காதலனும் நீண்ட காலம் என்னைச் சந்திக்காமலே இருந்துவிட்டான்.
அவனிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை ஊர் சொன்னபடிதான் என் வாழ்க்கை முடிந்து விடுமோ என்று நான் கலங்காத நாள் கிடையாது. ஆனாலும் என் மனத்திலே அவன் வந்து என்னைக் கட்டுவான் என்ற நம்பிக்கை மட்டும் இருந்தது. நான் நினைத்தது போல அவன் வந்து எங்கள் வீட்டிலே பெண் கேட்டு விட்டான்.
இனி இந்த ஊர் தன் முகத்தைக் கொண்டு போய் எங்கே வைக்கும். அந்தப் பெண் சொல்லிக் கொண்டே போக அனைத்தையும் கேட்டுக் கொண்டு தலை குனிந்து இருந்தாள் தோழி. அவள் முகத்தில் சந்தோசமில்லை. அவள் சொன்னாள்.
எங்கள் நெல்வயலின் எல்லையாக விளங்கும் மலைத் தொடரின் உச்சியிலே நிறையக் காடுகள் உண்டு. அந்தக் காட்டிலே ஒரு பெண் குரங்கு தன் காதலனோடு வாழ்ந்து வந்தது. மாலை வேளைகளில் அந்தப் பெண் குரங்கு பயத்தோடு மெதுவாக எங்கள் வயலுக்கு வரும். முற்றிய நெற்கதிர்களை எல்லாம் நான் பார்க்கவில்லை என்று நினைத்துக் கைநிறைய ஒடித்து எடுக்கும்.
நானும் அதை விரட்டுவதில்லை. அந்த நெல்லை எல்லாம் அது என்ன செய்கின்றது என்று ஒருமுறை பின்தொடர்ந்து சென்று பார்த்தேன். மலைப் பாறை ஒன்றில் அதன் காதலன் இருந்தது. அந்தப் பெண் குரங்கு நெல்மணிகளை இரண்டு கைகளாலும் பிரித்து எடுத்துத் தன் துணைவனுக்கும் ஊட்டித் தானும் தன் கன்னம் வீங்கும் படியாக வாய்க்குள் நிறைத்து உண்டது.
அப்போது மழையும் வந்து விட்டது. தைத் திங்களிலே நோன்பு இருப்பவர்கள் தண்ணீரிலே மூழ்கி எழும் போது அவர்களின் முதுகுகள் எப்படி வளைந்து இருக்குமோ அது போல அந்தக் குரங்குகள் முதுகுகளும் இருந்தன. காதலி உணவு தந்த மகிழ்ச்சியில் அந்த ஆண் குரங்கும் அதைக் கட்டியணைத்து முத்தமிட்டு விட்டு தன் வீரத்தைக் காட்ட மலை உச்சிகளில் தாவி விளையாடியது. அந்தச் செயல் பெண் குரங்குக்கு மகிழ்ச்சியாக அமையவில்லை. ஆண் குரங்கின் அட்டகாசத்தை சோகமாகப் பார்த்துக் கொண்டிருந்தது.
அதன் எண்ணமெல்லாம் ஒரு ஆண் மகனாக நடந்து நெல்லையும் காட்டு மரங்களின் பழங்களையும் பறித்து வந்து எனக்குத் தந்து என்னை மகிழ்விக்காமல் நான் உணவு தேடிக் கொடுக்கும் நிலையில் என் காதலன் இருக்கின்றானே ஒரு ஆணுக்கு காதலும் காமமும் மட்டும் இருந்தால் போதுமா வேறு கடமைகள் இல்லையா என்ற கவலை அதை வாட்டியிருக்க வேண்டும். தன் தலையைப் பாறையிலே சாய்த்துக் கொண்டு அது உறங்கி விட்டது.
உன் வாழ்க்கையிலும் இந்தப் பெண் குரங்கின் நிலை ஏற்பட்டு விடுமோ என்று எனக்குப் பயமாக இருக்கின்றது. காதலன் திரும்பவும் கிடைத்துவிட்டான் என்ற மகிழ்ச்சியில் நீ குதிக்கின்றாய். அன்பும் காதலும் மட்டும் தான் வாழ்க்கையல்ல. வாழ்க்கை பொருளையும் அடிப்படையாகக் கொண்டது. நான் அறிந்த அளவில் உன் காதலன் நல்லவன் தான். ஆனால் வாழ்க்கையைக் கொண்டு நடத்தும் வல்லவனா என்றால் இல்லை.
திருமணத்துக்குப் பின்பு நீ தான் வயல் வேலைக்குப் போய் உன் காதலனைக் காப்பாற்ற வேண்டும். அவனுக்கு எதுவுமே தெரியாது. வாழ்க்கையில் நீ இந்தப் பெண் குரங்கு போல மிகுந்த துன்பத்தை அடையப் போகின்றாய். அதுதான் எனக்குக் கவலை என்றாள் அந்தத் தோழி.
கொடிச்சி காக்கும் அடுக்கல் பைந்தினை
முந்து விளை பெருங்குரல் கொண்ட மந்தி
கல்லாக் கடுவனொடு நல் வரை ஏறி
அங்கை நிறைய ஞெமிடிக் கொண்டு தன்
திரை அணல் கொடுங்கவுள் நிறைய முக்கி
வான் பெயல் நனைந்த புறத்த நோன்பியர்
தை ஊண் இருக்கையின் தோன்றும் நாடன்
வந்தனன், வாழி தோழி உலகம்
கயம் கண் அற்ற பைது அறு காலைப்
பீளொடு திரங்கிய நெல்லிற்கு
நள்ளென் யாமத்து மழை பொழிந்தாங்கே.
தோழி! நீ நீடு வாழ்வாயாக குறமகள் காவல் காக்கும் மலைப்பக்கத்தில் விளைந்த பசுமையான தினைப்பயிரில் முற்பட விளைந்த பெரும் கதிர்க்கொத்துக்களைக் கொய்த பெண் குரங்கு ஒன்று பாய்ந்து செல்லும் தொழிலைத் தவிர வேறு எதுவும் கற்காத தன் ஆண் குரங்குடன் நல்ல மலையின் மீது ஏறி உள்ளங்கை நிறைய அக்கதிர்களைக் கசக்கிக் கொண்டு கடுவனுக்கு அளித்துத் தன்னுடைய திரைத்த அணலையுடைய வளைந்த கன்னம் நிறையத் தானும் உண்டு மழை விழுந்ததால் இரு குரங்குகளின் முதுகுப்புறம் நனைந்து அதனால் தைத் திங்களில் நீரில் மூழ்கி எழுந்து, அதன் பின் உணவை உண்ணும் நோன்பியர்போல் தோன்றும் மலைநாடன் வரைவுடன் வந்துள்ளான், உலகத்தில் உள்ள குளங்கள் எல்லாம் நீர் வற்றி உலர்ந்த வேளை சூலொடு வாடிய நெற்பயிர்களுக்கு நள்ளிரவுப்பொழுதில் மழை பொழிந்தாற்போல என்பது இப்பாடலின் பொருள்.
இந்தப் பாடல் சங்க இலக்கியமான நற்றிணையிலே காணப்படுகின்றது. ஆனால் இதை எழுதியவன் பெயர் யாருக்குமே தெரியவில்லை. காதலுக்காக கையாலாகாத துணைவனை எல்லாம் காதலித்து விட்டோமே என்று மனதுள் அழுது கொண்டு வெளியே மகிழ்வோடு தூக்கிச் சுமக்கும் பாவப்பட்ட பெண்களை இன்றைய சமுதாயம் மட்டுமல்ல சங்க மக்களும் கண்டிருக்கின்றார்கள்.
இரா.சம்பந்தன்
கனடா தமிழர் தகவல் 5.9.2026 இதழுக்கு நான் எழுதிய கட்டுரை இது!