நத்தை சுட்ட நண்பர்கள் வாழ்வு!
நெல் விளையும் வயல்களும் அவற்றிடையே கொக்கின் உடல் போன்று கூம்பிய தாமரை மொட்டுக்கள் நிறைந்த குளங்களும் அவற்றிள் ஓரம் கனிதரும் மரங்களும் நிறைந்த மருத நிலக் கிராமம் அது. அங்கே பொருள் வளம் மிக்க ஒரு வீடு. எப்போது பார்த்தாலும் அந்த வீட்டுக்கு விருந்தினர்கள் வந்துகொண்டே இருப்பார்கள்.
தினமும் தன்னைத் தேடி வரும் உறவினருக்கும் நண்பர்களுக்கும் இனிய உணவு பரிமாறி அன்பாக உபசரிப்பாள் அந்தப் பெண். அவர்கள் உரையாடும் போது அவள் கணவனைப் பற்றி ஏதாவது கேட்டால் அவருக்கு என்ன என்னை நன்றாகப் பார்த்துக் கொள்கின்றார். இப்போ அயல் ஊரில் வயல் வேலை என்பதால் வீட்டுக்கு அதிகம் வருவதில்லை என்று சொல்லித் தப்பித்துக் கொள்வாள்.
உண்மை அதுவல்ல. அவள் கணவன் பரத்தை என்று சொல்லப்படுகின்ற விலைமாது ஒருத்தி வீடே கதியென்று அங்கேயே தங்கிவிட்டான். அவன் இப்போது திரும்பவும் தன் மனைவியுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற விருப்பில் தன் மனைவிக்கு நெருக்கமான தோழி ஒருத்தி மூலமாக இடைவிடாது முயற்சி செய்துகொண்டிருந்தான்.
தோழியோ அது பற்றி அந்தப் பெண்ணிடம் பேசுவதற்கு சந்தர்ப்பம் பார்த்திருந்தாள். ஆனாலும் அந்த வீட்டுக்குத் தொடர்ந்து விருந்தினர்கள் வந்துகொண்டே இருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் கணவனின் குற்றத்தை மறைத்து குணங்களை மட்டும் எடுத்துக் கூறுகின்ற அந்தப் பெண்ணின் மனத்திலே கணவன் மீது மிகுந்த பற்று இருக்கும் என்று எண்ணிக் கொண்டாள் அந்தத் தோழி.
விருந்தினர்கள் வராத ஒருநாள் அந்தப் பெண்ணிடம் குற்றம் புரிந்த எத்தனையோ மனிதர்கள் தங்கள் தவறை உணர்ந்து திருந்தி வரும் போது உன்னைப் போன்ற பெண்கள் சரி போவுது என்று மன்னித்து ஏற்றுக் கொண்டிருக்கிறார்களே அது போல நீயும் உன் கணவன் விடயத்தில் நடந்து கொண்டால் என்ன என்று மெதுவாகப் பேச்சைத் தொடங்கினாள். அந்தப் பெண் சிரித்தாள்.
நான் என் கணவனைத் திருமணம் செய்து கொண்டு அவன் ஊருக்குச் சென்று அவன் வீட்டில் வாழந்த காலத்தில் அந்த ஊரிலே கண்ணால் கண்ட நிகழ்ச்சி ஒன்றைச் சொல்கின்றேன் முதலில் அதைக் கேள்
மாலை வேளைகளில் அங்கே கொக்குகள் கூட்டமாகப் பறந்து வந்து மாமரத்துக் கிளைகளில் அமரும். அந்த அதிர்வினால் கிளைகள் அசைந்து கனிகள் கீழே வீழும். அப்படி விழும் கனிகள் தரையில் வீழ்ந்து எங்கள் பசிக்கு உதவாமல் குளத்து நீரிலே துடும் என வீழ்ந்து ஆழ்ந்து போகும்.
அப்படி மரமே நன்றி இல்லாமல் நடந்து கொள்ளும் ஊர் எனது கணவனின் ஊர். அப்படி இருக்கும் போது அங்கே பிறந்த மனிதர்களுக்கு எப்படித் தன்னைச் சார்ந்தவர்களை பாதுகாக்க வேண்டும் என்ற நல்ல குணங்கள் இருக்கும். இதை நீ யோசித்துப் பார். இன்னும் ஒரு விடயம் சொல்கின்றேன் கேள். வயல் நிலங்களைக் காட்டு விலங்குகள் வந்து மேய்ந்து விடாமல் அந்த நிலங்களுக்கு காவல் இருப்போர்க்கு மனைவிமார்கள் சுவைமிக்க நல்ல உணவைச் சமைத்து வந்து கொடுப்பார்கள்.
அப்படி நல்ல உணவை உண்டாலும் அவர்கள் சென்றதும் அந்தக் காவல்காரர்கள் வயலிலே ஊருகின்ற அருவருக்கத்தக்க நத்தைகளைப் பிடித்து நெருப்பிலே சுட்டு வயல் நீரிலே அதிக காலம் கிடந்து பச்சை நிறமான பாசி படந்த கல்லுப் போன்ற கடினமான ஓட்டினை உடைய ஆமையின் முதுகிலே அந்த நத்தைகளை தட்டி உடைத்து விருப்பத்தோடு உண்பார்கள்.
அது போல நான் நல்ல சுகத்தைக் கொடுத்துப் பாதுகாத்து வைத்திருந்தாலும் எனது கணவன் நல்லவர்கள் தொடவே அஞ்சும் அருவருக்கத் தக்க நத்தை போன்ற விலைமாதர்களின் சுகத்தை விரும்பி ஆமை ஓடு போன்ற நண்பர்களின் உதவியோடு சுவைத்து மகிழ்கின்றானே அவனுக்காகவா என்னிடம் நீ வந்து பரிந்து பேசுகின்றாய்
அவன் விடயத்தில் இவ்வளவு தூரம் நான் அமைதியாக இருப்பதற்கு காரணம் என் வீட்டுக்கு வரும் விருந்தினர்கள். நல்ல பெற்றவர்களுக்கு பிறந்த பெண் அவளிடம் போக வேண்டும் என்று எண்ணி வரும் விருந்திரையும் நல்ல மனிதர்கள் பெற்ற பிள்ளையை மணம் முடித்து சிறப்பாக வாழ்கின்றாள் எங்கள் பெண் என்று நினைத்து வரும் விருந்திரையும் ஏமாற்ற எனக்கு விருப்பம் இல்லை அது மட்டும் தான் காரணம். அவனோடு வாக்குவாதம் செய்து கொண்டிருக்க எனக்கு நேரம் இல்லை.
ஒருவேளை எனது அமைதியைப் பார்த்து ஏதாவது பேசினால் முழுமையாக என் கணவன் என்னை வெறுத்து விடுவானோ என்று நான் அஞ்சுவதாக நீ எண்ணிவிட்டாயோ தெரியாது. அப்படி நீ நினைத்தால் ஏமாற்றம் உனக்குத்தான் என்றாள் அந்தப் பெண்.
இந்த உணர்ச்சி மிக்க உரையாடல் சங்க இலக்கியங்களுள் ஒன்றான நற்றிணையில் மருதத் திணயில் 280 வது பாடலிலே காணப்படுகின்றது. பரணர் என்ற புலவர் பாடியிருக்கின்றார். இயற்கை நிகழ்வுகளோடு மானுடக் குற்றங்களை இணைத்து ஒரு பெண் கூறுவது போல அமைக்கப்பட்ட இந்தப் பாடல் அக்கால மக்களின் குடும்பப் பிரச்சனைகளை படம்பிடித்துக் காட்டும் இன்னுமோர் ஆவணமாகி நிற்கின்றது.
கொக்கினுக் கொழிந்த தீம்பழங் கொக்கின்
கூம்புநிலை யன்ன முகைய ஆம்பல்
தூங்குநீர்க் குட்டத்துத் துடுமென வீழும்
தண்துறை யூரன் தண்டாப் பரத்தமை
புலவாய் என்றி தோழி!—புலவேன்
பழன யாமைப் பாசறைப் புறத்துக்
கழனி காவலர் சுடுநந்து உடைக்கும்
தொன்றுமுதிர் வேளிர் குன்றூர் அன்னவென்
நன்மனை நனிவிருந் தயரும்
கைதூ வின்மையின் எய்தா மாறே!
இரா.சம்பந்தன்
கனடா தமிழர் தகவல் (5.11.2026) இதழுக்கு நான் எழுதிய இலக்கியக் கட்டுரை இது.
See less