கீரியும் பாம்பும்!
காட்டிலே விறகினை வெட்ட – கமலம்
வாட்டிடும் வெய்யிலில் கிடந்து – அங்கே
கத்தியும் கையுமாய் சென்றிட்டாள் ஒருநாள்
வருந்திய கீரியின் குட்டியைக் கண்டாள்
வீட்டுக்கு அதைக்கொண்டு வந்தே – அதுக்கு
வேண்டிய உதவிகள் அனைத்துமே செய்தாள்
கூட்டுக்குள் அடையாது அதனைத் – தனது
குழந்தையைப் போலவே வளர்த்திட்டாள் கமலம்
அன்னையைப் போலவே அவளை – என்றும்
அன்புடன் கீரியும் எண்ணியே வாழும்
முன்னுக்கு குதித்து ஓடும் – வந்து
முதுகிலே ஏறிப்பின் தோளிலே சாயும்
பின்னிய கூந்தலில் தொங்கும் – பாய்ந்து
பெட்டிகள் கடகங்கள் அவற்றிலே ஏறும்
இன்நிலை தன்னிலே கமலம் – வாழ்வில்
இன்னொரு குழந்தைக்கும் தாயென ஆனாள்
தொட்டிலில் குழந்தையைப் போட்டு – கமலம்
தூங்கவே ஆட்டிப்பின் கீரிக்குச் சொன்னாள்
கட்டிலில் கிடந்துமே நீயும் – குழந்தைக்கு
காவலாய் இருந்திடு குளிக்கநான் போறேன்
தட்டிய செப்பினில் செய்த – குடத்தில்
தண்ணீரும் தேவைதான் என்றவள் சொல்லி
முட்டியே கீரியார் தலையில் – ஒரு
முத்தமும் இட்டபின் குளித்திடப் போக
பொல்லாத பாம்பொன்று வந்தே – கூரைப்
பொட்டினால் தொட்டிலின் கயிற்றினில் ஆடும்
நல்லாகப் போராடி அதனை – கீரி
நாலாகக் கடித்துப்பின் நடந்ததைக் கூற
நில்லாமல் ஓடியே சென்று – கமலம்
நீராடும் கிணற்றுக்கு அருகிலே செல்லும்
இல்லாத கற்பனை செய்து – கீரி
இரத்தமும் வாயுமாய் வந்ததைப் பார்த்து
பிள்ளையாய் வளர்த்த இக்கீரி – என்
பிள்ளையைக் கடித்ததே எண்றெண்ணி அழுது
அள்ளிய நீர்நிறை குடத்தை – தூக்கி
ஆத்திரதோடு கீரியின் தலையிலே போட்டாள்
வெள்ளமாய் இரத்தமும் பாய – கீரி
விடுதலை பெற்றது உலகத்தை விட்டே
தள்ளியே நில்லுங்கள் மக்காள் – நன்றி
தவறுவார் இவரென இனங்கண்டு வாழ்வில்!