முதுமையிலா என்வாழ்வு!
ஆறுபத்து வயதுகளைக் கடந்தும் இன்றும்
அப்படியே இருக்கின்றாய் மர்மம் என்ன
கூறுஎன்பார் நண்பரெனைக் காணும் போது
கோலமது குறையாமல் அன்று போல
வேறுபாடு இல்லாத உடலைப் பேண
வேண்டுவதோ இவைதானே சொல்லக் கேளும்
ஊறுபட்டு உயிர்துறந்த எதையும் நீங்கள்
உண்ணாத விரதமது முதலில் வேண்டும்
யார்மீதும் பொறாமையிலா உள்ளம் வேண்டும்
யாதேனும் கவலையிலா எண்ணம் வேண்டும்
ஊர்மேயும் புறக்கதைகள் எதுவும் வந்து
உள்ளத்தைச் சேராத வேலி வேண்டும்
கூர்ஊசித் துளைவழியே நூல்கள் செல்லும்
கோலமென விதிவழியே வாழ்வு செல்லும்
சீர்கேடும் சிறப்புகளும் அதனால் அன்றி
சேராது பிறராலென்று அறிதல் வேண்டும்
இறையுணர்வு இருந்திடனும் ஆனால் அந்த
இறைக்கஞ்சா மனப்பான்மை என்றும் வேண்டும்.
குறையுரைத்து வரம்கேட்டு வெறுத்தும் ஏற்றும்
கும்பிட்டும் வாழுமுறை ஒழிக்க வேண்டும்.
நிறைவுடைய மகிழ்வெனக்கு எதுவோ என்றால்
நெடுநேரம் இசைகேட்பேன் இல்லை யானால்
அறைமுழுதும் பரந்திருக்கும் நூலில் ஏதும்
அக்காலத் தமிழ்படிப்பேன் சுவைத்துக் கொள்வேன்
கூன்முதுகு ஒளவையவள் வருவாள் காண
குறள்படைத்த வள்ளுவனைக் காண்பேன் சிலநாள்
தேன்கவிதைக் கம்பனிடம் ஓடிப் போவேன்
திரும்பியந்த இளங்கோவை விரும்பிப் பார்ப்பேன்
ஊன்உருக்கும் சங்கமக்கள் செய்யுள் பார்ப்பேன்
உண்மையில்நான் தேவாரம் அதிகம் சொல்வேன்
கான்பிறந்த வேட்டுவனும் பறையன் பார்ப்பான்
கடவுளுக்குச் சமமென்ற புராணம் கேட்பேன்
முதுமைதொடா வாழ்விதுதான் அதனால் என்னை
முழுவதுமாய் விட்டுவிடும் முதுமை அல்ல
அதுபிறரைத் தொடுவதுபோல் விரைந்து வந்து
அணுகாமல் தயங்கிநிற்க வாழ்வேன் நானும்
இதுஎனது நானென்ற கர்வம் நீங்கக்
இன்றுவரை முயன்றுழன்று தோற்றேன் ஆனால்
எதுவாழ்க்கை ஏன்வாழ்க்கை எங்கே துன்பம்
என்றுணர்ந்த மானுடன்யான் இதுவே உண்மை!
இரா.சம்பந்தன்.