பொன்னாடை ஆசை!
பொன்னாடை போர்க்கின்றோம் உனக்கு என்றார்
பொல்லாத வேலையெலாம் வேண்டாம் என்றேன்
தின்னாமல் பலநாட்கள் கிடந்த நாய்க்குத்
திரண்டசதை எலும்பென்றால் விடுமா என்ன
தன்னார்வம் ஊற்றெடுக்க ஒத்துக் கொண்டேன்
தமிழுக்காய் தருகின்றோம் விருது என்றார்
மென்மேலும் எழுதுங்கள் என்றும் சொன்னார்
மீண்டுமவர் செய்வதற்கு நன்றி சொன்னேன்
என்னோடு படித்தார்கள் சொந்தம் நட்பு
எல்லோர்க்கும் பொன்னாடைச் செய்தி சொல்லி
நன்நாளில் கூடுங்கள் விழாவில் என்றேன்
நாட்களினை மகிழ்ச்சியுடன் எண்ணிக் கொண்டேன்
மென்மாலைப் பொழுதொன்றில் மேடை ஏறி
மிகமகிழ்ச்சி உணர்வுடன்நான் காத்து நிற்க
பொன்மஞ்சள் சால்வையினை உதறிப் போட்டுப்
போயிருங்கள் கீழென்றார் அடுத்தாள் பேச
பொன்னாடை போர்க்கவென்று மேடை ஏற்றிப்
பொன்னாடை இல்லையெனில் வருத்தம் இல்லை
பன்னாடை போர்த்துவிட்ட செயலே என்னைப்
பலநாட்கள் வாட்டியது கனடா மண்ணில்!
இரா.சம்பந்தன்