இளைய பாரதி (C.T.B.C)
தாய்வயிற்றுக் கருமுதிர்ந்து வெளியே வந்த
தருணந்தான் சிலருக்குப் பிறந்த நாளாம்!
தேய்வடைந்த சிந்தனையைத் தூரப் போட்டு
திடமான மனத்தோடு இதுதான் கொள்கை
மாய்வடைந்து போகும்வரை இதுவே வாழ்வு
மாறுதலும் மாற்றுதலும் அதுதான் இல்லை!
ஓய்வடைந்தும் போவதில்லை என்னும் நாளே
ஒருசிலர்க்குப் பிறந்தநாள் அன்றோ! ஆமாம்!
வாடாத தனிக்குரலும் வலிமை வாய்ந்த
வார்த்தைகளும் வானொலியும் தோற்று என்றும்
ஓடாத கருத்துகளும் ஒட்டார் கூட
ஒருகாது கொடுத்தேனும் கேட்க எண்ணும்
மூடாத களஞ்சியமாய் இருக்கும் உன்னைக்
மூக்காலே கொத்துகின்ற குருவிக் கூட்டம்
கூடாக நினைப்பதின்றும் உன்னைத் தானே
கூட்டாக வாழ்த்துகிறோம் வாழி! வாழி!!