இரண்டாவது தோல்வி!
சுட்டபழப் பிரச்சனையால் முருகன் முன்பு
சொல்லவொண அவமானம் அடைந்த ஒளவை
பட்டதெலாம் சிவனிடத்தில் சென்று கூறிப்
பாலகனாம் முருகனையும் புகழ்ந்து சொன்னாள்
நெட்டநெடு நாவலிலே ஏறி நின்ற
நின்மகனால் நான்தோற்ற கதைதான் இன்று
எட்டுத்திசை ஊர்களிலும் சனங்கள் பேச்சு
என்றுரைத்தாள் ஒளவையவள் சிரித்தான் ஈசன்
தலைகவிழ்ந்து முகங்கறுத்து ஈசன் பக்கம்
தாயவளாம் உமையம்மை இருக்கக் கண்டு
நிலைகுலைந்த ஒளவையவள் பயந்து கேட்டாள்
நினக்கேதும் மனவருத்தம் உண்டா என்னில்
மலைமகளே ஏன்பேச மாட்டாய் என்ன
மாதரசி உமைநிமிர்ந்து பார்த்துக் கேட்டாள்
முலைசரிந்த முதுமையிலும் தமிழுக் காக
முன்னின்று உழைப்பவளே ஒன்று கேட்பேன்
நல்வழியும் வாக்குண்டாம் கொன்றை வேந்தன்
நல்லபல புத்திமதி சொன்ன நீதான்
இல்மறந்து நாவல்மரம் ஏறி நின்ற
என்மகனுக்கு என்னசொல்லி இருக்க வேண்டும்
நில்மகனே சுட்டபழம் எதுவும் வேண்டாம்
நீமுதலில் கீழிறங்கு விழவே போறாய்
கொல்லுயர மரமேறி வீழ்ந்தால் உன்னைக்
கொன்றபழி எனக்கும்தான் சொன்னாய் இல்லை
மண்விழுந்த கனிந்தபழம் உண்டு நீயும்
மனமகிழந்தாய் என்பதனை நினைக்கும் போது
புண்விழவே என்னவரை அடித்த காலம்
போலின்றும் துடிக்கின்றேன் வேடன் செத்தால்
எண்ணியழ ஒன்றுமிலை நினைத்தாய் பாரு
இங்கேதான் மறுமுறைநீ தோற்றுப் போனாய்
விண்ணுலகப் பார்வதியாள் சொல்லக் கேட்டு
வீழ்ந்தவளின் கால்கிடந்து அழுதாள் ஒளவை!
இரா.சம்பந்தன்