புத்தாண்டு பிறக்கிறது!
பணம்படைத்தோர் வாசலிலே காத்து நின்று
பக்குவமாய்க் பணிந்தெழுந்து உதவி கேட்க
கணப்பொழுது தலைசொறிந்து கேட்ட காசில்
கால்வாசி தந்துவிட்டு உள்ளே போகும்
குணம்படைத்த மானுடர்போல் சென்ற ஆண்டு
குறைகேட்டும் உதவாமல் முடிந்து போக
மணம்பரப்ப வருவதுபோல் பிலவ ஆண்டு
மலர்கிறது நண்பர்களே ஒன்றைக் கேளீர்!
தாய்நாட்டில் கல்வியினைப் போரால் எங்கள்
தமிழ்க்குலங்கள் இழந்ததுபோல் இன்று எங்கும்
நோய்காட்டி முடக்கிவிடும் காலம் நீண்டு
முன்னுரிமை பெறப்போகும் முட்டாள் கூட்டம்
வாய்காட்டிப் பண்பிழந்து போகா வண்ணம்
வடிவாகப் படிப்பியுங்கள் வீட்டில் நாங்கள்
பேய்போன்ற கூட்டத்துடன் முதுமைக் காலம்
பிரச்சனைகள் இல்லாமல் வாழ வேண்டும்!
கோயிலிலே கூடாதீர் என்ற சட்டம்
கொண்டுவந்த அரசுகளா? இல்லை இல்லை!
வாயிலுக்கு வாராதீர் என்று தெய்வம்
வழிமறித்துத் தடுக்கிறது அரசின் பேரால்!
பாவியர்கள் தன்பெயரால் செய்யும் கேட்டுப்
பண்பாட்டை முடித்துவிட நினைத்த ஈசன்
கூவுகிறான் வீடுகளில் இருங்கள் என்றே
கும்பிடுவோம் அறைகளிலே படத்தின் முன்னால்!
அடுத்தவனைக் கெடுக்குமொரு எண்ணம் இல்லை!
அயலவரில் பொறாமையிலை! தெருவில் போவார்
நடுத்தரத்தார் பணக்காரன் ஏழை என்றே
நாம்பிரித்துப் பார்ப்பதில்லை இப்போ வாழ்வில்!
தடுத்துவைத்துக் கதைகேட்பார் முகத்துக் கஞ்சித்
தப்பிவிட நினைக்கின்றோம் நோயால் நாங்கள்
கொடுத்துவைத்த சமூகமிது இல்லை யானால்
கூடாத கதையெல்லாம் கதைப்போம் நின்றே!
நோய்வடிவில் மறைவாகத் தெய்வம் நின்று
நுண்கிருமித் துடைப்பத்தால் உலகைக் கூட்டிக்
பாய்படுக்கும் ஏழைக்கும் பஞ்சு மெத்தைப்
பணம்படைத்த நாடுகட்கும் ஒன்றாய்ப் பாடம்
வாய்திறக்கா தெடுக்கிறது விளங்கிக் கொண்டு
வாழ்க்கையைநாம் மாற்றிடுவோம் இல்லை யானால்
காய்நகர்த்தும் தெய்வமது கடுமை யாக்கும்
காலத்தை ஊசியெலாம் அங்கே செல்லா
ஆதலினால் நண்பர்களே பிலவ ஆண்டை
அன்புடனே வரவேற்க எங்கள் நெஞ்சைக்
காதலினால் கண்ணியத்தால் அன்பு நீரில்
கழுவிவிட்டுக் காத்திருப்போம் அதனை விட்டு
மாதமொரு மருந்தென்று மாற்றி மாற்றிக்
மானுடர்கள் கைகழுவிக் கொண்டால் வான
மீதிலுறை தெய்வமது சிரித்துக் கொள்ளும்
மீளவழி காட்டாமல் மறைந்தும் போகும்!