மெல்லத் தமிழ்ப்பண்பு சாகும்
காலையிலே கூவவிங்கே சேவல் இல்லை
கருங்காக்கை குந்திடவும் வேலி இல்லை
ஓலையிலே தோரணமா தென்னை இல்லை
ஓடிப்பதற்கு மாவிலையும் இல்லை இல்லை
மூலையிலே கோலமிட உலக்கை இல்லை
முற்றத்தில் பொங்கிவைக்க வெய்யில் இல்லை
சேலைவேட்டி கட்டிக்கொள்ள நேரம் இல்லை
செய்கின்றோம் ஆனாலும் பொங்கல் இங்கே
ஏர்வீட்டின் தாழ்வாரம் கிடக்க ஊரில்
என்வீட்டில் பனியள்ளும் சவல்தான் உண்டு
கார்பூட்டி ஓடுகின்ற ரயர்கள் உண்டு
கதிர்போன்ற புல்லறுக்கும் மிசினும் உண்டு
நீரூட்டி தெளிக்கின்ற சாணம் ஊரில்
நிலமூட்டி நாமிங்கே தெளிப்போம் உப்பை
பேரூட்டி உள்வீட்டு அடுப்பில் பொங்கிப்
பிரச்சனையை முடிக்கின்றோம் தையில் இங்கே!
மண்படிந்த முற்றத்தை மெழுகிக் கூட்டி
மாக்கோலம் நாற்புறமும் போட்டு ஓலைக்
கண்படிந்த பெட்டியிலே அரிசி வார்ந்து
கரிபடிந்த பானையிலே பயறு போட்டு
விண்படிந்த கிழக்கினிலே காலை தோன்ற
வீட்டிலுள்ள அனைவருமே வந்து கூடிப்
பண்ணிறைந்த தேவாரம் வெடிகள் என்றே
பார்த்தவொரு பொங்ககலது இனிமேல் இல்லை.
பூக்களிலே தேனெடுத்துக் கூட்டில் சேர்க்கும்
பூச்சியினம் போல்தமிழர் இயன்ற மட்டும்
வாக்குகளால் மனங்களினால் காயத் தாலே
வரலாற்று நிகழ்வுகளைத் தேடிச் சேர்த்து
தேக்கிவைக்க வெளிநாட்டில் தவறு வாரேல்
கயானாவும் மொறீசியஸ்சும் பிஜியும் போல
பாக்களிலே வரலாற்றுக் கதையில் வாழ்ந்து
பண்பாட்டால் தமிழினமும் செத்துப் போகும்!