கனேடிய தினம்!
உண்மையே பேசினேன் என்றுநீ நினைத்தே
மண்ணையே தந்தனை வாழநான் இங்கே
புண்ணிலே புகுந்தவேல் போலொரு துன்பம்
கண்ணிலே கண்டவன் யான் அதனாலே
திண்ணையே போதும் குந்திட நினைத்தேன்;
தண்ணியே குடித்துயிர் தாங்கியே வாழ
எண்ணியே வந்தவென் வாழ்க்கையில் அம்மே
பண்ணிய செய்தவம் பலித்தது போல
பணமும் வேலையும் வீடொடு காரும்
நண்ணிய மனைவியும் மக்களும் உறவும்
விண்ணிலே முட்டுமோர் மகிழ்ச்சியும் தந்தாய்
செண்பகம் வாகையும் கார்த்திகைப் பூவும்
சண்டைசெய் பூமியும் போற்றினேன் அன்றி
தண்ணளி காட்டிய தாயெனும் உன்னை
எண்ணியே போற்றிய நாளென்றும் இல்லை
கண்மணி யேயென் கனேடியத் தாயே
புண்ணிய பூமியைப் புரந்திருப் பவளே
திண்ணிய மனபல மங்கையே ஓர்நாள்
விண்ணிலே போய்விடும் என்னுயிர் ஆனால்
மண்ணிலே நீசெய்த உதவியை மறவேன்!
இரா.சம்பந்தன்