இராவணனின் நடிப்புத் திறன்.
எல்லா மொழிகளிலும் இலக்கிய கருத்தாக்கள் தாம் படைக்கும் பாத்திரங்களுக்கு சில இயல்புகளைக் கொடுத்து அந்த இயல்புகள் கதை முடியும் வரை மாறாமல் பார்த்துக் கொள்வாhகள். அந்த வகையில் தமிழிலும் இராமன் சத்திய புருஷன் வாலி வீரன் அநுமான் பக்தன் இராவணன் காமுகன் என்று கம்பனும் தன் இதிகாச பாத்திரங்களுக்குக் குணவியல்புகளைக் கொடுத்தான்.
எவ்வளவு தான் கவனமாகப் பாத்திரங்கள் படைக்கப்பட்டாலும் கதைப் போக்கில் சில இடங்களில் பல பாத்திரங்களுக்கு வகுக்கப்பட்ட குணாதியங்கள் பின் தள்ளப்பட்டு வேறு சிறப்புகளோ சிறுமைகளோ தலை தூக்கி விடுவதுண்டு.
அவ்வாறு கம்பனால் முரண்பட்ட குணத்தோடு படைக்கப்பட்ட ஒரு பாத்திரம் இராவணன். அவன் வீரனா ஆம் சிவ பக்தனா ஆம். பெண்ணாசை பிடித்தவனா ஆம் என்று எல்லாவற்றுக்குமே ஆம் என்று சொல்லக் கூடிய பாத்திரப் படைப்பு அவனுடையது. அந்தப் பாத்திரத்துக்குள் ஒரு நடிப்பத் திறமை இருந்ததையும் கம்பன் ஒரு இடத்தில் எடுத்துக் காட்டுகின்றான்.
சீதையைக் கவர்வது என்று முடிவு செய்த இராவணன் வயது முதிர்ந்த சன்னியாசி வேடத்தை தன் மந்திர பலத்தால் எடுத்துக் கொள்கின்றான். உருவத்தை எடுத்தது மட்டுமல்ல அந்த உருவத்தை எப்படி இராவணன் பயன்படுத்திக் கொள்கிறான் என்பதில் தான் அவன் நடிப்பு அடங்கியிருக்கின்றது.
முதலில் அவன் எடுத்த மாறு வேடத்தை முளைவரித் தண்டொடு மூன்றும் முப்பகை தளையரி தவத்தவர் வடிவம் தாங்கினான் என்று அடையாளப்படுத்துகின்றான் கம்பன். காமம் வெகுளி மயக்கம் மூன்றையும் தவிர்த்த கோலத்தை அந்த மூன்றுக்குமாகவே பயன்படுத்திக் கொள்கின்றான் இராவணன்.
இராமன் வைணவச் சார்புடையவன். சீதை அந்த இராமனை நேசிப்பவள். ஆதனால் வைணவச் சின்னங்கள் அவளுக்குப் பிடிக்கும் என்பதற்காகவே மூன்று இலை போன்ற திரிதண்டத்தை கையில் வைத்துக் கொண்டான் இராவணன்.
அவனுடைய உடல் பலநாட்களாக உணவு உண்ணாமல் வற்றி உலர்ந்து போய் இருக்கின்றது. மிகவும் தொலை தூரத்தில் இருந்து நடந்து வந்த தேகம் எப்படிக் களைத்துத் துன்பமுறுமோ அத்தகைய துன்பத்தை அவன் அடைந்துவிட்டதாகக் காட்டிக் கொள்கின்றான். அந்தத் துன்பத்திலும் கூட நாட்டிய அபிநயங்களை செய்து பழகுபவர்கள் போன்ற தன்மையுடன் வீணையின் நாதம் தோற்றுப் போகும் படி வேதங்களை அவன் வாய் இனிமையாகப் பாடிக் கொண்டிருக்கின்றது.
ஊனிலனாம் என உலர்ந்த மேனியான்
சேண்நெறி வந்ததோர் வருத்தச் செய்கையான்
புhணியின் நடத்திடைப் படிக்கின் றானென
வீணையின் இசைபட வேதம் பாடுவான்.
இராவணனின் நடையைச் சொல்ல வந்த கம்பன் அழகான ஒரு உவமை காட்டுவான். பூமியிலே நெருப்புத் துண்டங்கள் பரவிக் கிடந்தால் அதைக் கண்டு பயந்து கவனமாக அடி எடுத்து வைப்பவர் போல கால்களும் கைகளும் நடுங்க அவன் சீதையின் ஆச்சிரமம் நோக்கி நடந்தான் என்பார் கம்பர். வெள்ளைப் பூக்கள் நிறைந்த மூட்டையை அவிட்டு விட்டால் அது எப்படி இருக்குமோ இது போல அப்போது அவன் எடுத்த கிழக் கோலத்தின் சடாமுடி இருந்தது. இதற்கு மேலும் இராவணன் கோலத்தை வர்ணிக்க முடியாத கம்பன் கிழப்பருவத்தையே தன் நடிப்பால் தோற்கடித்து விட்டான் இராவணன் என்பார்.
பூப்பொதி அவிழ்ந்தன்ன தலையன் பூதலம்
தீப்பொதிந் தாமென மிதிக்கும் செய்கையன்
காப்பரும் நடுக்குறும் காலன் கையினன்
மூப்பெனும் பருவமும் முனிய முற்றினான்
சீதையின் வீட்டுக்குக் கிட்டப் போய்விட்டான் இராவணன். அப்போது அவன் செய்கையில் சில மாறுதல்கள் தோன்றுகின்றன. அவன் உடலிலே தாமரை மணிகளால் செய்யப்பட்ட மாலை தோன்றுகின்றது. ஆமை போல கை கால்கள் எல்லாம் ஒடுங்கிக் கொள்கின்றன. கூன் விழுந்த தேகமும் பூனூலும் வந்து விடுகின்றது.
ஆச்சிரம வாசலிலே நின்று நாக்கு நடுங்க இந்த வீட்டினுள்ளே யார் இருக்கின்றீர்கள் என்று பணிவோடு கேட்டான். அவனின் மாறு வேடத்தின் திறமையைக் கண்டு தேவர்களே அதிசயித்த நின்றார்கள் என்று எழுதினான் கம்பன்.
தோமறு சாலையின் சாயில் துன்னினான்
நாமுதல் குழறிட நடுங்கும் சொல்லினான்
யாவர் இவ்விருக்கையுள் இருந்துள்ளீர் என்றான்
தேவரும் மருள்கொளத் தெரிந்த மேனியான்.
ஆச்சிரமத்திலே மாயமான் பின்னே சென்ற இராமரை நினைத்து அழுது கொண்டிருந்த சீதை கண்களைத் துடைத்துக் கொண்டு வெளியே வந்து இங்கே வாருங்கள் பெரியவரே என்று அன்போடு அழைத்தாள்.
ஏகுமின் ஈண்டென எதிர்வந்து எய்தினாள்.
சீதை வீட்டுக்குள்ளே வாருங்கள் என்று அழைத்ததோடு இராவணனின் நடிப்பின் வெற்றி முடிந்து விடுகின்றது. எந்த சீதை தன் வாயாலே தன்னை வீட்டினுள்ளே அழைத்து உபசரிக் வேண்டும் என்று நினைத்து இவன் இத்தனை முயற்சி செய்தானோ அதன் பலனை சீதையின் அழைப்பினால் அடைந்து விடுகின்றான் அவன்.
பல பேருக்கு இராவணன் சீதையைப் புஷ;பக விமானத்தில் தூக்கிக் கொண்டு போனான் என்று மட்டும் தான் தெரியும். அவளைத் தூக்கிக் கொண்டு போவற்கு இவன் பட்ட கஸ்டங்கள் நடித்த முதுமை நடிப்பு எல்லாம் தெரிவதில்லை. இராவணன் தவறு செய்து விட்டான் என்ற அளவிலே தான் பலருக்குத் தெரியும்.
காட்டுக்கு வரும் போது எனது கணவருக்கு இருபத்தைந்து வயது. எனக்கு பதினெட்டு வயது. பன்னிரன்டு வருடங்கள் தான் சந்தோசமாக வாழ்ந்தேன். சில காலம் தான் கணவரோடு குடும்ப சுகங்களை அனுபவித்தேன் என்று தன் குடும்ப இரகசியங்களை எல்லாம் இராவண சன்னியாசியிடம் சீதை மனம் விட்டுப் பேசிய கதையெல்லாம் இன்னும் பலருக்குத் தெரியாது.