|

இராவணன் இராவணனாக இருந்த போது!

இராவணன் அரச சபையிலே வீற்றிருக்கின்றான். அரசியல் பகைவர்கள் மீது போர் தொடுத்து அவர்களுக்கு இம்சை செய்தது தவிர பெரிய குற்றங்கள் அவனிடம் அப்போது இருக்கவில்லை. சிவ பக்தன். அம்மா கோவிலுக்கு அதிக தூரம் நடக்கின்றாளே என்ற கவலையில் கயிலை மலையைத் தூக்கி வந்து அவளருகே வைக்கப் பார்த்தவன். வீணை வித்துவான். சிறந்த போர் வீரன். சீதை இவள் தான் என்று அனுமன் தவறாக நினைக்கும் அளவுக்கு அழகு வாய்ந்த மண்டோதரியை மனைவியாக அடைந்தவன். தம்பிமாரும் பிள்ளைகளும் படித்தவர்கள். வீரம் மிக்கவர்கள்.

அவன் முன்னே இராம இலக்குமணரால் மூக்கு அறுபட்ட தங்கை சூர்ப்பநகி இரத்தம் ஒழுக வந்து விழுந்தாள். சூர்ப்பம் என்றால் சுளகு. சூர்ப்பநகி என்றால் சுளகு போன்ற நகத்தை உடையவள் என்று பொருள்.

இராவணனின் முன்னால் வந்த சூர்ப்பநகி உனக்கும் எனக்கும் சகோரனாகப் பிறந்த கரனின் பாதுகாப்புக்கு உட்பட்ட காட்டுப் பகுதியில் இரண்டு மானுடர்கள் என்னை உதைத்து விழுத்தி நெஞ்சிலே மிதித்து நிலமெல்லாம் உருட்டி எடுத்து என் மூக்கையும் அறுத்து விட்டு தாங்கள் செய்த வீரச்செயலை எண்ணித் தங்கள் தோள்களைப் பெருமையாகப் பார்த்துக் கொண்டிருக்க நான் உனக்கு முன்னாலே வந்து இப்படி அழுகின்றேன். இதெல்லாம் எனக்குத் தேவையா? அரன் இருந்த மலையைத் தூக்கிய என்னுடைய அண்ணா அண்ணா என்று ஓலமிட்டு அழுதாள்.

உரன் நெரிந்து விழ என்னை உதைத்து உருட்டி மூக்கு அரிந்த

நரன் இருந்து தோள் பார்க்க நான் இருந்து புலம்புவதோ?

கரன் இருந்த வனம் அன்றோ? இவை படவும் கடவேனோ?

அரன் இருந்த மலை எடுத்த அண்ணாவோ! அண்ணாவோ!

முதலில் இராவணன் தங்கையின் கோலத்தைக் கண்டு திகைத்தான். மிகவும் துன்பப்பட்டான். ஒரு பெண்ணை இப்படிக் கொடுமைப் படுத்தியதை ஒரு மன்னனாக அவனால் ஏற்க முடியவில்லை. மிகுந்த ஆத்திரம் அடைந்தான். மறுகணமே உன்னை இப்படிச் செய்தவர்களை இந்தக் கணமே கொல்கின்றேன் என்று அவன் இராம இலட்சுமணரைத் தேடிப் புறப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவன் அப்படிச் செய்யவில்லை.

அவன் அப்போது மனத்தால் பழுது படாத இராவணன். நல்லது கெட்டதை எல்லாம் சீர்தூக்கி ஆராய்ந்து முடிவெடுக்கும் அன்றைய இலங்கையின் மன்னன். தங்கையாக இருந்தாலும் இப்படி அவமானம் அடையும் அளவுக்கு இவள் என்ன தப்பை அவர்களுக்குச் செய்தாளோ என்ற எண்ணம் அவன் தூய சிந்தையில் துளிர்விடுகின்றது. அதை வெளிப்படையாகவே கேட்டும் விடுகின்றான்.

தன் மனத்துள் எழுந்த கோபத்தை இராவணன் அடக்கிக் கொண்டு உன்னை இப்படி அவர்கள் கொடுமைப்படுத்தும் அளவுக்கு செய்ய நீ அவர்களுக்கு என்ன குற்றம் செய்தாய்? என்று தங்கையைப் பார்த்துக் கேட்டான். இங்கே சீரிய இராவணனை நாம் காண்கின்றோம். தங்கையின் இழி குணங்களை அவன் தெரிந்திருந்தான். எனக்கு இப்படி ஒரு கூடாத தங்கையா என்ற அவமானம் அவன் மனதில் நீண்ட காலமாக இருந்த காரணத்தினால் தான் தங்கையின் வேதனையைக் கண்டு இரக்கப்படாமல் நீ என்னடி செய்தாய் என்று வெறுப்போடு கேட்டான்.

ஆயிடை எழுந்த சீற்றத்து அழுந்திய துன்பம் மாறி

தீயிடை உகுத்த நெய்யின் சீற்றத்திற்கு ஊற்றம் செய்ய,

நீ இடை இழைத்த குற்றம் என்னைகொல் நின்னை இன்னே

வாயிடை இதழும் மூக்கும் வலிந்து அவர் கொய்ய? என்றான்.

அப்பொழுது தான் சூர்ப்பநகி பார்க்கின்றாள். அண்ணா சரியான வழியில் தான் போகின்றான். கொஞ்சம் விட்டுக் கொடுத்தால் என்னையே கொண்டு போய் இராமலட்சுமணரின் காலிலே விழுந்து மன்னிப்புக் கேள் என்று சொல்லி விடுவான் போல இருக்கே என்று பயந்து தான் இராமனிடம் ஆசைப்பட்ட கதையை மறைத்து உனக்காக சீதை என்ற பெண்ணைத் தூக்கிவரப் பார்த்த போது தான் என் நிலமை இப்படி ஆயிற்று என்று சொன்னாள்.

எனக்காக ஒரு பெண்ணைக் கொண்டுவரப் பார்த்தாயா? அது தான் உன் வேலையா? எங்களை மானத்தோடு வாழ விடமாட்டாயா? உன்னை அவர்கள் கொன்றிருந்தாலும் தப்பில்லை என்று தங்கைக்கு இராவணன் சொல்லியிருந்தால் இன்று இராமரின் இடத்திலே இராவணன் தான் இருந்து வழிபாட்டுக்கு உரியவனாகி இருப்பான். தாடகை வதத்தோடு இராமாயணம் நின்றிருக்கும். வாலி தப்பியிருப்பான். கும்பகர்ணன் செத்திருக்க மாட்டான். ஆனால் விதி யாரைத்தான் விட்டு வைத்தது.

தங்கையைப் பார்த்து இராவணன் யாரவள் சீதை என்று ஆவலோடு கேட்டான். அவளும் சீதையை அங்கம் அங்கமாக அண்ணாவுக்கு வருணிக்கத் தொடங்குகின்றாள். எல்லாம் முடிந்து போய்விட்டது. அது வரை இருந்த புகழை இராவணன் அந்தக் கணமே இழந்துவிட்டான். இதன் பின்பே இராமாயணத்தில் இராவணன் கொடியவனாகவும் காமுகனாகவும் நடமாடத் தொடங்குகின்றான்.

ஆர் அவள்? என்னலோடும் அரக்கியும் ஐய! ஆழ்ந்து

தேர் அவள் திரண்ட கொங்கை செம்பொன் செய் குலிகச் செப்பு

பார் அவள் பாதம் தீண்டப் பாக்கியம் படைத்தது அம்மா!

பேர் அவள் சீதை என்று வடிவு எலாம் பேசலுற்றாள்.

தங்கை வருவதற்கு முன்பிருந்த இராவணனையும் இராமனால் கொன்று வீழ்த்தப்பட்டுக் கிடந்த இராவணனையும் நினைக்கும் போது இலக்கிய இதயங்கள் இரத்தக் கண்ணீர் வடிக்கும்!

இரா.சம்பந்தன்.

தமிழர் தகவல் 5. 5. 17 இதழில் வெளியான எனது கட்டுரை!

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.