சங்க இலக்கியத்தின் சரிவுகள்!
ஒரு நாட்டிலே அதிக மருத்துவ மனைகள் தென்படுமானால் அங்கு நோயாளிகளும் அதிகமானவர்களாக இருக்க வேண்டும். அது போல ஒரு மொழியிலே அளவுக்கு அதிகமான நீதி நூல்கள் தோன்றுமானால் அந்த மொழியைப் பேசும் சமுதாயத்திலே நீதி தவறிய செயல்களும் அதிமாக இடம்பெற்று இருக்க வேண்டும்.
சங்க காலம் நிறைவுற்று சங்கத்தை மருவிய காலம் அரும்பிய போது தமிழிலே ஏராளமான அற நூல்களும் தோற்றம் பெற்றன. இயற்கையோடு ஒன்று பட்டு உள்ளும் புறமும் தூய்மையான நெஞ்சோடும் உண்மையோடும் வாழ்ந்த சங்க மக்களின் பிற்காலம் எண்ணற்ற குற்றங்களுக்கு இடமளித்துச் சீர்குலையத் தொடங்கிய போது அதைச் சீர் செய்ய திருக்குறள் நாலடியார் போன்ற பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் தோன்றின.
சங்க மக்கள் இறுதியில் என்ன குற்றம் செய்தார்கள் என்பதற்கு குறுந்தொகைப் பாடலொன்று சிறந்த உதாரணமாகும். அது கடலும் கடல் சார்ந்த மீனவக் குடியிருப்புகளையும் உள்ளடக்கிய நெய்தல் நிலம். அதிலே ஒரு குடியானவனும் அவன் மனைவியும் அவர்கள் பெற்ற ஒரு இளம் வயது மகளும் ஒரு வீட்டில் வாழ்கின்றார்கள்.
ஒரு முறை அந்த மீனவன் மீன்பிடிக்க வள்ளம் எடுத்துச் சென்ற போது கடலிலே வாழ்ந்த சுறா மீன் ஒன்று அவனைத் தாக்கிக் கடித்துப் புண்ணாக்கி விட்டது. அன்று முதல் அவன் புண் ஆறும் வரை வீட்டில் இருந்து வருகின்றான். அவனுக்கு தொண்டு செய்து கொண்டு அவன் மனைவியும் வீட்டில் இருந்து விடுகின்றாள்.
பெற்றோர் இப்படித் துன்பத்தில் கிடக்கின்றார்களே என்று மகளுக்கு இயல்பான ஒரு கவலையும் வீட்டின் வறுமை நிலையும் நெஞ்சத்தில் எழுந்திருக்க வேண்டும். ஆனால் அவளுக்கு பெற்றார் வீட்டில் இருப்பது அவள் காதல் வாழ்வுக்கு தடையாகத் தோன்றுகின்றது.
அப்பன் கடலுக்கு செல்லவும் அம்மா உப்பு விற்று வர வெளியே செல்வதுமாக இருந்த தனிமைப் பொழுதில் தன் காதலனை அழைத்துத் தன் வீட்டிலேயே வைத்திருந்து அனுப்பி வந்த அந்தப் பெண்ணுக்கு இப்போது அந்த வசதி கிடைக்கவில்லை.
இன்று அவள் தந்தை புண் ஆறி; கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று விட்டான். தாயோ சமைப்பதற்கு அரிசி வாங்குவதற்காக உப்பை எடுத்துக் கொண்டு சந்தைக்கு வியாபாரம் செய்யப் போய்விட்டாள். உடனே அந்தப் பெண் தோழியிடம் ஓடிச் சென்று சொல்கிறாள்.
என் பெற்றவர்கள் வீட்டில் இல்லை. வருவதற்கு அதிக நேரமாகும். நீ அதிக தூரம் என்று மறுக்காமல் என் காதலனின் இருப்பிடத்துக்குச் சென்று எங்கள் வீட்டிலே யாருமில்லை. உடனே வந்தால் மிகவும் எளிதாக நாங்கள் சேர்ந்திருக்கலாம் என்று சொல்லு என்று கெஞ்சுகின்றாள்.
இந்தப் பாடல் குறுந்தொகையிலே 269 வது செய்யுளாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றது. கல்லாடனார் என்ற புலவர் பாடியிருக்கின்றார்.
சேயாறு சென்று துனைபரி யசாவா
துசாவுநர்ப் பெறினே நன்றுமற் றில்ல
வயச்சுறா எறிந்த புண்தணிந் தெந்தையும்
நீனிறப் பெருங்கடல் புக்கனன் யாயும்
உப்பை மாறி வெண்ணெல் தரீஇய
உப்புவிளை கழனிச் சென்றனள் அதனால்
பனியிரும் பரப்பிற் சேர்ப்பற்
கினிவரி னெளியள் என்னும் தூதே.
எது நடைமுறையில் இருந்ததோ அதைப் பாடிவைத்து வருங்காலச் சமுதாயத்திம் ஒப்படைக்க வேண்டும் என்று நினைத்து கல்லாடன் பாடிய பாடலை சங்க இலக்கியத்துக்கு இழுக்கு என்று நினைத்துப் புறக்கணித்து விடாமல் குறுந்தொகை சுமந்து நிற்கின்றது.
ஆண்கள் காம சுகத்துக்கு பொதுவாக முன் நிப்பார்கள் என்ற கருத்தைப் பின்தள்ளி ஒரு பெண்ணே அந்தச் சுகத்தைத் தேடி அலையும் காட்சியை சங்க இலக்கியம் எடுத்துப் பேசுகின்றது.
உண்மையில் பெற்றவர்கள் வீழ்ச்சி நிலையில் இருக்கும் போது வளர்ந்த இளம் பெண் அந்தத் துயரத்தை நீக்குவது எப்படி என்று சிந்தித்திருக்க வேண்டும். ஆனால் சேலை எங்கே காயும் நடையை எங்கே நிறுத்தலாம் என்ற இழிநிலை பற்றி இந்தப் பாடல் பேசுகின்றது. பெற்றாரை மகள் ஏமாற்றும் செய்தியைச் சொல்கின்றது அது.
எத்தனையோ உயர்ந்த ஒழுக்க விழுமியங்களைப் பேசும் சங்கப் பாடல்களுக்கு இடையிலே இப்படியான பாடல்களும் ஆங்காங்கே காணப்படுகின்றன.
இப்படியான பாடல்கள் தான் திருக்குறள் போன்ற தீப்பிழம்புகள் தோன்றி தமிழர் வாழ்வியல் மாசுகளைப் பின் நாளில் சுட்டெரிக்க வழிவகுத்திருக்கின்றன. குறுந்தொகையின் இந்தப் பாடலுக்கு எதிராக திருக்குறள் நிகழ்த்திய தாக்குதல்கள் பல உண்டு. குறிப்பாக ஒன்றைச் சொல்லலாம்.
காதலனைப் பிரிந்து வீட்டிலே தனியாக இருக்கும் ஒரு பெண் தன் மனத்திடம் கேட்கின்றாள். வாழ்விலே வசதி இழந்து தாழ்நிலை ஒருவருக்கு வந்தால் நண்பர்களும் உறவினர்களும் விலகிப் போய் விடுவார்கள் என்று சொல்லுவார்கள்.
நானும் காதலனைப் பிரிந்து தாழ்ந்து எப்போதும் கவலையோடு இருப்பதால் இதுவரை காலமும் என்னோடு இருந்த என் மனமே நீயும் என்னை விட்டு என் காதலன் கூட ஓடிப் போகின்றாயா. சரி நீ வேண்டும் என்றால் போ. நான் அப்படியெல்லாம் செய்ய மாட்டேன்.
கெட்டார்க்கு நட்டாரில் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங்கு அவர்பின் செலல்
(திருக்குறள் – நெஞ்சொடு புலத்தல் – குறள் 1293)
நான் காதலனைச் சந்திக்க வரமாட்டேன் என்றாலும் ஒன்றுதான். காதலனை என்னிடம் வா என்று கூப்பிட மாட்டேன் என்றாலும் ஒன்றுதான். இது குறுந்தொகை தாழ்த்திய ஒரு பெண்ணை திருக்குறள் உயரத்தில் தூக்கி வைத்த செயலாகும்.
கனடா தமிழர் தகவல் இதழில் 5.6.2025 வெளிவந்த எனது கட்டுரை இது.