முற்றத்து மல்லிகை!
எனது யாழ்ப்பாணப் பயனத்தின் நோக்கமே
அவளைப் பார்த்துவிட வேண்டும் என்பது தான்
வீட்டைப் பார்க்கவேண்டும் பெற்றாரைக் காணவேண்டும்
பள்ளித்தோழிகள் இந்தக் கனவுகளே என் மனைவிக்கு
அவளைப் பார்த்துவிட வேண்டும் எனக்கோ அதுதான்
காதலைச் சொன்னபோது ஏளனமாகச் சிரித்து
உமக்கும் ஒரு எண்ணந்தான் என்றாளே
அவளைத்தான் பார்க்க வேண்டும்
பதினொரு ஆண்டுகளின் பின்னால்
தொண்டைக்குள் குற்றிய மீன்முள்ளுப் போல
அவள் சொன்ன ஒற்றை வார்த்தை
தட்டுப்படும் போதெல்லாம் வலிக்கிறது இன்றும்
நான் கல்யாணம் செய்து விட்டேன்
அவளும்தான் கட்டிக்கொண்டாள் ஒருவனை
இன்று பிரச்சனை காதல் அல்ல
வா எப்படியிருக்கிறாய் என்று அவள்
ஒருவார்த்தை கேட்டால் போதும்
குற்றிய முள் அகற்றப்பட்டு விடுமே
அவமானம் துடைக்கப்பட்டு விடுமே
அவளைக் காண்கிறேன் யாழ்ப்பாணத்தில்
அவள்தான் என்கிறேன் மனைவியைக் கிள்ளி
இதையா என்கிறாள் எந்தனின் மனைவி
ஏளனப் புன்னகை இதழ்களில் நெளிய
தொண்டையில் சிக்கிய முள்ளினைக் காணேன்
என்னவள் வார்த்தையில் கரைந்தது முள்ளும்
முற்றத்து மல்லிகை மணத்தது எனக்கும்
தோளிலே மெதுவாய்த் தலையினைச் சாய்த்தேன்!