மரண பயம்
ஒருநாள் என் மூச்சு நின்றுவிடும்.
மனைவி பிள்ளைகள் நண்பர்கள்
உறவுகள் என்று யாராலும்
தடுக்க முடியாமல் போகும்
நான் எழுதிய புத்தகங்கள்
நான் எடுத்தக்கொண்ட படங்கள்
நான் அணிந்திருந்த மோதிரங்கள்
கட்டிய மணிக்கூடு என்று
எவற்றுக்கும் மரணமில்லை
மரணம் எனக்கு மட்டும் தான்.
ஏன் இந்த வஞ்சகம்
இறைவனே என்கிறேன் நான்
பலமுறை காப்பாற்றி இருக்கிறேன்
மரணத்திலிருந்து உன்னை
என்கிறான் இறைவன்
எப்போது எப்போது என்று
வியந்து கேட்கின்றேன் நான்
தினமும் தினமும் என்கிறான்
இறைவன் சிரித்துக் கொண்டு
எனக்குப் புரியவில்லை
என்கின்றேன் நான்
இறைவன் சொன்னான்
தினமும் நீ
உறங்குகின்றாய் அல்லவா
அந்த உறக்கங்கள் தான்
நீ அடைந்த மரணங்கள்
நீ கற்ற கல்வி நீ வாழும் நாடு
நீ பெற்ற உடல் சுகம் துக்கம்
என்று எதுவுமே தெரியாமல்
உறங்குகின்றாய் அல்லவா
மனிதனே
அது தான் மரணத்தின்
மாதிரி வடிவங்கள்.
உறக்கம் தான் மரணம்
விழிப்புத்தான் பிறப்பு
இது தான் திருக்குறள் தத்துவம்
உறங்குவது போலும் சாக்காடு !
உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு!
இரா.சம்பந்தன்