எங்கள் ஊர்க் காதல்!
நெல்லியடி ஒடிசருகு போலத் தேகம்
இடைதரமும் தெரிவுமென உயர்ந்த சாதி
கெட்டொடித்த பழுத்தலைப்போல் நிற்கும் சேலை
சச்சினைப்போல் ஆங்காங்கே ஓட்டைச் சட்டை
கிடங்கவிந்த புகையிலையென மனத்தைச் சூடாய்
ஆக்கிவிட சீவலென கயிற்றில் தொங்கி
முடிச்சலெனும் சடங்கெல்லாம் முடித்துக் கொண்டு
கொடிக்காச்சல் என்னுமொரு துன்பம் தாங்கி
சேந்தையிலும் குடிலினிலும் கொச்சி மட்டை
ஊமலெரி புகைபட்டுக் கறுத்து மேலும்
பாடத்தில் பலகாலம் கிடந்து காம்பில்
கிருமாற்று பிடித்தெந்தன் அழகும் கெட்டு
தூவானம் நனைக்காமல் பாய்க்குள் வாழ்ந்து
கல்லுவைத்துக் காம்பவித்து வடித்த கோடாத்
தண்ணிபட்ட காப்பிலைபோல் வாடிச் சோர்ந்து
நெட்டிவார்ந்த வெளிப்பத்தி ஆகி நானும்
காதலெனும் நூலலே கட்டிப் போட்ட
கருஞ்சுருட்டு ஆகிவிட்டேன் இனிமேல் என்ன
பத்தாக்கி ஒருகட்டுக் கட்டிப் போட
தலைவாலை வெட்டிவிடும் வெட்டுக் கட்டை
வாழைமட்டை காயவைத்து மீண்டும் கோடா
தெளித்தென்னை பெட்டியிலே அடைத்து வைத்து
கயிறெடுத்து நாற்புறமும் வரிந்து கட்;டி
கருங்கலவை மையதனால்; விலாசம் இட்டு
வண்டிலிலே கொண்டுசென்று றையில் ஏற்றி
விற்பார்கள் நெருப்புவைத்துப் புகைத்துத் தள்ள
நான்பிறந்து வளந்துன்னைக் கண்டு செத்துப்
போனதற்கு வார்நாமம் மட்டுந்தான் சாட்சிகூறும்!