|

அழுகின்றேன் உனக்காக!

காலையிலே பூத்தமலர் போல நிற்பாய்
மாலையிலே வாடியபின் விரும்பிப் பார்ப்பேன்
வாரமது ஒவ்வொன்றும் வேறுவேறாய்
வடிவத்தில் தலைபின்னிக் கொள்வாய் நீயும்
ஓரமது உடைந்திட்ட நெற்றிப் பொட்டை
ஓயாமல் நான்பார்த்து காதல் கொண்டேன்
தொட்டவிரல் நிறந்தீட்டிக் கொள்வாய் நீயும்
திட்டான முகப்பருவில் காதல் கொண்டேன்
புன்னகையில் சிரிக்கின்ற இதழ்கள் விட்டுப்
மென்னகத்தைக் கடிக்கின்ற பற்கள் பார்ப்பேன்
அன்புமொழி உன்பேச்சு ஆசை ஆனால்
ஆத்திரத்தில் கத்துவதைக் கேட்க நிற்பேன்
மடித்துத்தந்த கடிதத்தால் வளர்ந்த தல்ல
கடித்துத்தந்த கண்டோசால் வளர்ந்த காதல்
எடுத்துக்கொண்டு ஓடிவிட்டாய் என்ன செய்ய
கடித்துக்கொடு இதயத்தில் பாதி ஏனும்
முடித்துக் கொள்வோம் காதலினை முழுமையாக
குடித்துவிட்டுக் கிடக்கின்ற கணவன் கூட
குடித்தனத்தில் அனுசரித்து வாழும் நீதான்
படித்துவிட்டு வேலையின்றி இருந்த என்னை
பாவமென்று அனுசரிக்க மறுத்தே விட்டாய்
எழுதிவைத்த சாதகமும் ஏற்றத் தாழ்வும்
எழுந்துநின்ற சாதிகளும் பணமும் காசும்
உழுகலப்பை நுகத்திலே உன்னைப் பூட்டி
உருக்குலைய வைப்பதனைப் பார்த்துப் பார்த்து
அழுகின்றேன் உனக்காக அக்கம் பக்கம்
ஆருமிலா நேரமதைப் பார்த்துப் பார்த்தே!

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.