வாழ்க்கைப் பயணம்!
நீ என்னை மணந்து கொண்டதால்
எங்கள் தோட்டமும் வீடும்
உனக்குச் சீதனமாகி விட்டன!
எங்கள் காதலை எதிர்த்த அண்ணன்
உனக்கு நண்பனாகி விட்டான்
தங்கைநான் கவலைப்படக் கூடாதென்று!
என் தங்கைகூட உன் தங்கைகளுக்கு
சேவகி ஆகிவிட்டாள் கௌரவம் பார்க்காமல்!
முகம் கொடுத்துப் பேசாமல் இருந்த
எங்கள் குடும்பங்கள்கூட நெருங்கி வந்துவிட்டன
எங்கள் திருமணத்தால்!
அன்று என்னால் நீபட்ட காயங்களுக்கு
என் குடும்பத்தையே சாறுபிழிந்து
தடவியிருக்கிறேன் பலமுறை நான்
நன்றியே இல்லாமல்!
பெற்றவரிடம் நான் கொண்ட பாசத்தையும்
உன்னிடம் வைத்திருக்கும் அன்பையும்
தராசுத் தட்டொன்றில் வைத்துப்பார்
அதன் நாக்கு தடுமாற்றம் இல்லாமல்
உன்பக்கமே எப்போதும் சாய்ந்திருக்கும்
ஆனால் நீயோ என் அன்பைக்
காரணமில்லாக் கோபத்தில் கரைத்து விடுகிறாய்
விவாக ரத்தும் அடிக்கடி கேட்கின்றாய்
வாழ்க்கை என்பது பேருந்து பயணமா
மணிஅடித்து நிறுத்தி இறங்கிப் போவதற்கு?
அது விமானப் பயணம் அன்பே
ஏறும் இடமும் இறங்கும் இடமும் எங்கோ
ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு விட்டன இல்லையா
பொறுத்துக்கொள்
பயணம் நல்லபடியாக முடியவேண்டும் என்று
வேண்டிக் கொள் என்னைப் போல!