யாரும் சொல்லாத உவமை!
பெண்களின் கண்களை கயல் மீன் என்றும் குவளை மலர் என்றும் கரு வண்டு என்றும் பல்வேறு உவமைகள் சொன்ன கவிதைகளையும் கவிஞர்களையும் எமக்குத் தெரியும். ஆனால் யாரும் சொல்லாத ஒரு உவமையை பெண்களின் கண்களுக்கு சொன்னவர் திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர்.
ஒரு மாம்பழத்தின் விதையை எடுத்து அதை கத்தியால் இரண்டாக வகிர்ந்து பக்கத்திலே வைத்தால் எப்படி இருக்குமோ அது போல கண் அமைப்பைக் கொண்ட பெண்கள் மாணிக்கவாசகர் காலத்தில் இருந்தார்களாம்.
இந்த உவமை திருவாசகத்திலே திருப்பொற்சுண்ணம் என்ற தலைப்பிலே பாடப்பட்ட இரண்டாவது பாடலிலே காணப்படுகின்றது. எனவே மாணிக்கவாசகர் போன்றவர்களை அடியார்கள் என்ற குறுகிய பக்தி வட்டத்திலே மட்டும் அடக்கி விடாமல் பெருங்கவிஞர்கள் என்று எடுத்துக் கொண்டு அவர்களின் பாடல்களை இலக்கியமாகவும் நாம் பார்க்க வேண்டும்.
மாவின் வடு வகிர் அன்ன கண்ணீர்
(மாம்பழத்தினுடைய வித்தை இரண்டு பாதியாக வகிர்ந்து பக்கத்திலே வைத்தது போன்ற கண்களை உடைய பெண்களே என்பது இதன் பொருள்)
பூவியல் வார்சடை எம்பிராற்குப்
பொற்றிருச் சுண்ணம் இடிக்கவேண்டும்
மாவின் வடுவகி ரன்னகண்ணீர்
வம்மின்கள் வந்துடன் பாடுமின்கள்
கூவுமின் தொண்டர் புறநிலாமே
குனிமின் தொழுமின்எங் கோன்எங்கூத்தன்
தேவியுந் தானும்வந் தெம்மையாளச்
செம்பொன்செய் சுண்ணம் இடித்துநாமே.
இரா.சம்பந்தன்