|

முழுவதும் கற்ற முட்டாள் மனிதர்கள்!

அப்பா நீ வீட்டிலே இரு. நான் சண்டைக்குப் போகின்றேன் என்று சொல்லிக் களத்துக்குப் போன இந்திரசித்து. கடுமையாகப் போராடி இறுதியில் இறந்தும் போனான். மகன் இறந்துவிட்டான் என்ற தகவல் கிடைத்ததும் துடித்துப் போனான் இராவணன்.

போர்க் களத்துக்கு வந்து தலை அறுக்கப்பட்ட மகனின் உடலைக் கட்டிப்பிடித்துக் கதறினான். மகனே உன் அப்பன் வீரனடா. இந்திரன் உலகத்தை போரிலே கைப்பற்றியவனடா. எதையெல்லாம் செய்து முடிக்க வேண்டும் என்று மனம் எண்ணியதோ அதையெல்லாம் தடையின்றி வீரத்தினாலே முடித்துக் கொண்ட உன் அப்பன் ஒரு பெண்ணிலே ஆசைப்பட்டு அதன் காரணமாக உன்னைப் பறிகொடுத்துவிட்டு நிற்கின்றேனே.

எனக்கு நீ செய்ய வேண்டிய இறுதிக் கடன்களை எல்லாம் ஏங்கி ஏங்கி உனக்கு நான் செய்ய வேண்டியதாகப் போய்விட்டதே. என்னைவிட பாக்கியசாலிகள் உலகத்தில் வேறு யார் இருக்கின்றார்கள் என்று அழுதான் இராவணன்.

சினத்தொடும் கொற்றம் முற்றி இந்திரன் செல்வம் மேவி

நினைத்தது முடித்து நின்றேன் நேரிழை ஒருத்தி நீரால்

எனக்கு நீ செய்யத் தக்க கடன் எலாம் ஏங்கி ஏங்கி

உனக்கு நான் செய்வது ஆனேன் என்னின் யார் உலகத்து உள்ளார்.

(இராமாயணம் – யுத்த காணடம் – இந்திரசித்து வதைப்படலம்)

இது இராமாயண சம்பவம். அதைத் தெரிந்து கொண்டு கனடாவில் நடந்த ஒரு நிகழ்வுக்கு வருகின்றோம். அவர் ஒரு ஆசிரியர். அவரின் மகன் புற்று நோயினால் இறந்து விடுகின்றான். ஏற்கனவே மனைவியையும் இழந்து பாதி வாழ்வைப் பறிகொடுத்த ஆசிரியர் இன்று மகனையும் இழந்து மிகுந்த துன்பத்தில் அமர்ந்திருக்கின்றார் அஞ்சலி மண்டபத்தில்.

ஆசிரியர் அல்லவா? மிகப் படித்த பலர் அங்கே வருகின்றார்கள். ஆசிரியர் தன் துக்கத்தைக் கட்டுப் படுத்திக் கொண்டு வந்தவர்களுடன் உரையாடுகின்றார். அதிலே இந்தியாவில் படித்துப் புலவர் பட்டம் வென்ற நம்மவரும் ஒருவர்.

அப்போது தான் அந்தத் தமிழ்ப் புலவர் சென்று ஒலி பெருக்கியைப் பிடிக்கின்றார். மேலே சொல்லப்பட்ட இராமாணச் செய்தியை சுவைபட இரசித்துப் பேசிக் கொண்டு போகின்றார். எனக்கு நீ செய்யத்தக்க கடன் எலாம் ஏங்கி ஏங்கி உனக்கு நான் செய்வது ஆனேன் என்ற வரியை இசையோடு பாடிவிட்டு பெருமிதத்தோடு மகனை இழந்த ஆசிரியரைப் பார்க்கின்றார்.

இது வரை தன் கவலைகளை எல்லாம் நெஞ்சுக்குள் பொத்தி வைத்துக் கொண்டு வந்தவர்களோடு உரையாடிய ஆசிரியர் தன் சால்வையால் முகத்தைப் பொத்திக் கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுகின்றார். ஏதோ உலக சாதனை செய்த திருப்தியில் புலவர் வந்து அமர்கின்றார். பக்கத்தில் இருந்த சில அறிவாளிகள் அருமையான பேச்சு என்று பாராட்டியும் விடுகின்றார்கள்.

இலக்கியம் இனிமையானது. புலவரின் பேச்சு அருமையானது. ஆனால் அதைப் பேசிய இடம் தவறானது.

புலவருக்கு எத்தனையோ ஆறுதல் வார்த்தைகள் தெரியும். சமய தத்துவங்கள் தெரியும். தேறுதல் பாடலகள் நிறைத்த சங்க இலக்கியம் தெரியும். பக்தி இலக்கியங்கள் தெரியும். அதில் ஏதாவது எடுத்துச் சொல்லி ஆசிரியரின் மனத்துக்கு ஆறுதல் வழங்கும் உரையை ஆற்றாமல் சூழ்நிலைக்கு ஒவ்வாத தவறான பேச்சைப் பேசி வெந்த புண்ணிலே வேல் ஏற்றினார் புலவர் என்றால் அதுக்கு என்ன காரணம்?

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும் தன்

உண்மை அறிவே மிகும்

என்று திருவள்ளுவர் சொன்னது தான் காரணம்.

இரா.சம்பந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.