முருங்கை மரத்துக் கோழிகள்!
எனது அப்பா முதற்கொண்டு எங்கள் உறவினர்களில் பலர் ஆசிரியர்களாக பணிபுரிந்தாலும் தம் முன்னோர்கள் செய்துவந்த தோட்ட வேலைகளை அவர்கள் கைவிடவில்லை. புகையிலை உற்பத்தி அவர்கள் குலத்தொழில். அதையும் அவர்கள் பாடசாலைக்குப் போகும் முன்னர் அதிகாலையிலும் பாடசாலை முடிந்து வந்த பின்னர் மாலை வேளைகளிலும் செய்து வந்தனர்.
எங்களுக்குத் தோட்டம் கிடையாது. எனவே கெட்டு எனப்படும் புகையிலையின் இரண்டாம் தர உற்பத்தியை விலைக்கு வாங்கி எங்கள் மாமா புகையிலை உணர்த்தும் கிடங்கு குடில் போன்றவற்றில் நாங்களும் தொழில் செய்து வந்தோம்.
மாலை வேளையில் குடிலிலே புகைப் போட்டுவிட்டு ஊமல் எனப்படும் பனம் விதைகள் நெருப்பிலே வெடித்து புகையிலை குடில் என்பவற்றை எரித்து சேதம் செய்யாவண்ணம் காவல் இருந்து நெருப்பு தணிய வீட்டுக்கு செய்வது அன்றைய நடைமுறையாக இருந்தது.
தேங்காயின் வெளிப்புறக் கொச்சி அதிக புகைக்கும் உலர்ந்த பனம் விதை ஆகிய ஊமல் அதிக வெப்பத்துக்கும் பயன்படுத்துவது கிராமப்புற வழக்கம். இவை இரண்டும் புகையிலை கரிய நிறமடைய மிகவும் உதவும் என்பது முன்னோர் முடிபு.
அப்படிப் பெரியவர்கள் குடிலைக் காவல் காக்கும் போது சிறுவனாகிய நான் அங்கிருந்து கொண்டு ஒரு முருங்கை மரத்தைக் பார்ப்பேன்.
அது கோழிகளின் வீடு. பொழுது இருட்டும் மைமல் நேரத்திலே மேயச் சென்ற கோழிகளும் சேவல்களும் ஒவ்வொன்றாக வந்து அந்த முருங்கை மரத்திலே தாவி ஏறும் காட்சியும் தவறி விழும் போது கொக்கரிப்பதும் மீண்டும் சிறகடித்து ஏறுவதும் வாழ்வில் காணக் கிடைக்காத அற்புதக் காட்சி.
முருங்கையின் ஒவ்வொரு கிளையிலும் உறவுகளாகவும் நண்பர்களாகவும் அவைக் பிரிந்து சென்று அமரும் காட்சியை புறநாட்டில் பிறந்த எங்கள் குழந்தைகள் காணக் கொடுத்து வைக்கவில்லை. அது மட்டுமல்ல.
கிராமத்திலே இயற்கையோடு இணைந்த தொழிலும் விலங்குகள் பறவைக்கள் மனிதர்கள் என்ற வேறுபாடு இன்றிக் கலந்து வாழ்ந்த வாழ்வையும் அனுபவிக்க எங்களையும் விதி விடவில்லை.
இன்று அங்கு உள்ளவர்களும் அந்த வாழ்வை விட்டு வெளியேறிப் புதிய கலாச்சாரம் ஒன்றில் புகுந்து விட்டார்கள்.
இரா.சம்பந்தன்.