|

முக்கூடல் பள்ளும் முன்னோர்கள் தமிழும்!



தமிழ் தோன்றிய காலம் தெரியாது. பல தமிழ் இலக்கியங்கள் தோன்றிய காலம் தெரியாது. இதையெல்லாம் நாம் பெருமையாகச் சொல்லிக் கொள்ள முடியும். அது குற்றமல்ல. ஆனால் ஒரு தமிழ் நூலின் ஆசிரியர் யாரென்று தெரியவில்லை என்று சொல்லிக் கொள்ள நாமும் எமது முன்னோர்களும் வெட்கப்பட வேண்டும். அப்படி ஒரு அவல நிலையில் கிடைத்திருக்கும் மிகச்சிறந்த தமிழ்க் கவிதை இலக்கியம் முக்கூடல் பள்ளு என்ற நூலாகும்
பொருநை நதியோடு சித்திரா ஆறு கோதண்டராமன் ஆறு ஆகிய இரண்டும் கூடுகின்ற முக்கூடல் நகரிலே ஒரு விவசாயப் பண்ணையில் வேலை செய்யும் குடும்பன் என்னும் பள்ளன் அந்த முக்கூடல் நகரத்து பள்ளி ஒருத்தியை மணம் புரிந்து குடும்பம் நடத்தி வந்த காலத்தில் தன்னோடு வயலில் வேலை செய்த மருதூர்ப் பள்ளி ஒருத்தியையும் சின்ன வீடு ஆக்கிக் கொள்கின்றான்.
ஒரு முறை அந்த இரு பள்ளிகளும் சந்தித்துக் கொண்ட போது பள்ளன் யாருக்குச் சொந்தம் என்ற சண்டை வந்துவிடுகின்றது. அந்தச் சண்டையிலே இருவரும் தங்கள் ஊர்ப்பெருமை பற்றிப் பேசிக் கொள்கிறார்கள். முக்கூடல் பள்ளிலே நாட்டுவளம் என்ற பகுதியில் அவர்கள் உரையாடல் காணப்படுகின்றது. தமிழ்ச்சுவை தமிழ்ச்சுவை என்று பேசிக் கொள்கின்றோமே அந்தத் தமிழ்ச்சுவையை சாறு பிழிந்து தருகின்ற இரண்டு கவிதைகளை அதிலே காணலாம்.
மூத்த பள்ளி தனது சக்களத்தியான இளைய பள்ளிக்குச் சொல்கின்றாள். எங்கள் ஊரிலே வானத்து நிலவுதான் கறையோடு இருக்குமே தவிர மக்கள் உள்ளங்களில் எந்தக் குற்றக் கறையும் இருப்பதில்லை. மதங்கொண்ட யானைகள் தான் கம்பங்களிலே கயிற்றினால் கட்டப்பட்டு மீள முடியாமல் இருக்குமே அல்லாமல் மனிதர்கள் யாரும் கடன் தொல்லைகளில் சிக்கி மீள முடியாமல் எங்கள் ஊரில் இருப்பதில்லை.
வானத்திலே பறக்கின்ற பறவைகள் தான் சிறை எனப்படும் சிறகுகளோடு இருக்கின்றனவே அன்றி மக்கள் யாரும் குற்றம் செய்து சிறைப்பட்டு இருப்பதில்லை. திரிக்கப்பட்டு தீபங்களுக்கு நாம் திரி போடுவோமே அல்லாமல் அறிவு திரிக்கப்பட்ட கதைகளைப் பேசிக் கொள்ளும் நிலையில் யாரும் இங்கு வாழ்வதில்லை. அதுபோல கம்மியர் உளி படுவதால் அம்மிக்கல்லு அழகிழந்து கிடக்குமே ஒழிய நாங்கள் யாரும் அழகு குறைந்து போய்விடுவதில்லை.
வலிய மரங்களைச் சுற்றிக் கொண்டு கொடிகள் தான் குழைந்து வளருமே அல்லாமல் எந்தப் பெண்களுமே குழைந்து வருந்தக்கூடியதாக ஆண்கள் நடந்து கொள்வதில்லை. எங்கள் ஊரிலே ஏதாவது மறைத்து வைக்கப்படுமேயானால் அது பாட்டுக்களிலே நுண்ணிய கருத்துக்களாக மட்டுமே இருக்க முடியும். மற்றப்படி நாங்கள் தானியங்கள் முதற்கொண்டு எதையும் பிறருக்குக் கொடுக்காமல் மறைத்து வைப்பதில்லை.
கறைபட் டுள்ளது வெண்கலைத் திங்கள்
கடம்பட் டுள்ளது கம்பத்து வேழம்
சிறைபட் டுள்ளது விண்ணெழும் புள்ளு
திரிபட் டுள்ளது நெய்படுந் தீபம்
குறைபட் டுள்ளது கம்மியர் அம்மி
குழைபட் டுள்ளது வல்லியங் கொம்பு
மறைபட் டுள்ளது அரும்பொருட் செய்யுள்
வளமை ஆசூர் வடகரை நாடே.
இவ்வாறு மூத்த பள்ளி தன் ஊரின் பெருமையை எடுத்துச் சொல்ல இளைய பள்ளியும் விடாமல் தன் ஊர்ப் பெருமைகளை எடுத்துச் சொல்கிறாள். எங்கள் ஊரிலே சூரியனுடைய காந்தக் கதிகர்கள் தான் பயிர்களைச் சுடுமே அல்லாமல் எங்கள் வார்த்தைகள் யாரையும் சுட்டுக் காயப்படுத்துவதில்லை. பானைகளிலே தயிர்க் கட்டிகள் தான் மத்துக்கு கலங்குமே ஒழிய மக்கள் யாரும் துன்பம் என்று கலங்குவதில்லை.
தினமும் செத்துக் கடந்து கொண்டிருப்பது மாதமும் வாரமும் மணித்துளிகளும் தான். மனிதர்கள் யாரும் இப்படித் தினமும் எங்கள் ஊரில் செத்துப் போவதில்லை. ஆறுகளிலே வெள்ளம் மட்டும் தான் சுழிபோட்டுப் புரளுமே ஒழிய போர் என்ற ஒன்று வந்து என்றும் எங்களைச் சுழன்றடிப்பதில்லை. எங்கள் ஊரிலே வயல்களில் கதிர் முற்றிய நெல்லுத் தான் தலை சாயுமே ஒழிய மனிதர்கள் யாருக்கும் அஞ்சித் தலை வணங்குவது கிடையாது.
தவஞ் செய்பவர்கள் எங்கள் ஊரில் சமுதாயத்தை விட்டுப் பிரிந்து தனித்திருப்பார்களே அல்லாமல் இல்லறத்தவர்கள் யாரும் யாரைவிட்டும் உள்ளத்தால் பிரிந்திருப்பதில்லை. சந்தனக் கட்டைதான் எமது ஊரியே தினமும் அரைக்கப்படுவதால் தேயுமே ஒழிய எங்கள் பண்பாடு ஒருபொழுதும் தேய்ந்து ஒழிந்து போவதில்லை என்றாள் இளைய பள்ளி.
காயக் கண்டது சூரிய காந்தி
கலங்கக் கண்டது வெண்தயிர்க் கண்டம்
மாயக் கண்டது நாழிகை வாரம்
மறுகக் கண்டது வான்சுழி வெள்ளம்
சாயக் கண்டது காய்குலைச் செந்நெல்
தனிப்பக் கண்டது தாபதர் உள்ளம்
தேயக் கண்டது உரைத்திடுஞ் சந்தனம்
சீவல மங்கைத் தென்கரை நாடே.
புலித்தோல் போர்த்த பசுப் போல ஆற்றல் இல்லாத எத்தனையோ எழுதுகோல் மனிதர்கள் கவிஞர் புலவர் பாவரசர் கவிக்கோ என்றெல்லாம் பட்டங்களைச் சுமந்து கொண்டு அலையும் இன்றைய எழுத்துலகில் தான் யாரென்றே அடையாளம் காட்டிக் கொள்ளாத ஒரு தமிழ் தெரிந்த கவிஞன் எழுதி வைத்துவிட்டுப் போன இந்த இரு பாடல்களையும் திரும்பத் திரும்பச் சொல்லிப்பாருங்கள். எதுகை மோனை ஓசை சீர் எல்லாம் இயல்பாகவே பொருளோடு பொருந்தித் தமிழின் சுவையை உங்கள் மனத்தில் விதைத்து நெஞ்சங்களை தமிழ்சோலை ஆக்கிவிடும் அவைகள்.
இரா.சம்பந்தன்

கனடா தமிழர் தகவல் சஞ்சிகையின் 5. 12. 2025 இதழுக்கு நான் எழுதிய கட்டுரை இது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.