மனித வாழ்வும் – தாமரை மலரும்!
குளத்திலே தாமரைக் கொடி இருக்கின்றது. அதிலே சங்கு போல வெண்மையான மொட்டு அரும்பும் போது அதற்கு சூரியன் தந்தையாக இருந்து ஒளி கொடுத்து மலரச் செய்கின்றான். குளத்து நீரோ தாயாக இருந்து அந்த மலரை ஏந்தித் தாலாட்டுகின்றது.
அந்தத் தாமரை மலர் கொடியை விட்டு நீங்கித் தண்ணீரிலே விழுந்து விடுமானால் தாயாக இருந்து தாலாட்டிய தண்ணீரே அதனை அழுக வைத்து அழித்து விடும். அந்த மலர் தரையிலே வீழ்ந்து கிடந்தால் தந்தையாக இருந்து மலர்வதற்கு உதவிய சூரியனே அதைத் தன் வெப்பத்தினால் கருக வைத்து அழித்து விடுவான்.
அது போல மனிதர்களாகிய நாங்களும் இருக்க வேண்டிய இடம் தவறிப் பிழையான இடத்துக்குப் போய்விட்டால் அதுவரை யாரால் போற்றிப் பாதுகாக்கப்பட்டோமோ அவர்களாலேயே அவமானப்படுத்தப்பட்டு அழிந்து ஒழிகின்ற நிலையை அடைய நேரிடும்.
சங்குவெண் தாமரைக்குத் தந்தைதாய் இரவிதண்ணீர்
ஆங்கதைக் கொய்துவிட்டால் அழுகச்செய்து அந்நீர் கொல்லும்
துங்கவெண் கரையில்போட்டால் சூரியன் காய்ந்து கொல்வான்
தங்களின் நிலைமைகெட்டால் இப்படித் தயங்குவாரே
(விவேக சிந்தாமணி – பாடல் 13)
இரா.சம்பந்தன்