|

புறப்பொருள் வெண்பா மாலையும் போரிட்டு மடிந்த புலிகளும்!



ஈழ வரலாற்றிலே கண்களைக் கலங்க வைக்கும் ஒரு காலப்பகுதி கார்த்திகை மாதம். ஆனால் இந்தத் துயரம் உங்கள் காலத்துக்கு மட்டும் சொந்தமானதல்ல. நாமும் அதை அனுபவித்திருக்கின்றோம். அதை இப்படித்தான் வாழ்கையில் கடந்து சென்றோம் என்று எம் முன்னோர்கள் எழுதிய செய்திகளைத் தாங்கி நின்று எமது கைகளில் தருகின்ற ஒரு தமிழ் இலக்கியம் ஐயனாரிதன் என்னும் சேரநாட்டுப் புலவன் இயற்றிய புறப்பொருள் வெண்பா மாலையாகும்.


போர்க்களத்திலே வீழ்ந்த மாவீரன் ஒருவனுக்கு நடுகல் அமைத்து மரியாதை செலுத்திய முன்னோர் வாழ்வியலை மிக விரிவாக புறப்பொருள் வெண்பா மாலை எடுத்துக் கூறுகின்றது. கற்காண்டல் கற்கோள் நிலை கல்நீர்ப்படுத்தல் கல்நடுதல் கல்முறைப் பழிச்சல் இல்கொண்டு புகுதல் என்று ஆறு பகுதிகளாக மாவீரர்களுக்கான செய்திகளை வகுத்து அவையெல்லாம் எப்படி நிகழ்தேறின என்பதற்குச் சான்றாக வெண்பாக்களையும் பாடிவைத்தான் அந்தப் புலவன் ஒன்பதாம் நூற்றாண்டில்.


எதிரிகளோடு மிகவும் கடுமையாகப் போராடி இறுதியில் காற்றில் இரைந்து கொண்டு வந்த அவர்களின் அம்புகளுக்கு இரையாகி மாண்டுவிடுகிறான் ஒரு வீர மறவன். அவனின் நினைவாக நட்டு வைப்பதற்கு நல்ல கல்லைத் தேடத் தொடங்கினார்கள் அக்காலத்து மக்கள். மண்ணிலே புதைந்து கிடந்த ஒரு கல்லை இது நல்லது என்று தெரிவு செய்து பூப்போட்டு வணங்கி பெயர்த்துக் கொண்டு வந்தார்கள்.


மிகை அணங்கு மெய் நிறீஇ மீளி மறவர்
புகை அணங்கப் பூ மாரி சிந்திப் – பகை அணங்கும்
வீளைக் கடும் கணையால் வேறு ஆகு விண் படர்ந்த
காளைக்குக் கண்டு அமைந்தார் கல்.


அந்தக் கல்லுக்கு தண்ணீர் தெளித்து மணி அடித்து நறுமணம் வீசும் புகை காட்டிப் பூசை செய்தார்கள். பகைவரை எதிர்த்து அந்த வீரன் எப்படியெல்லாம் போராடித் தன் உயிரை விட்டான் என்பதையும் கூடியிருந்த மற்றவர்களுக்கு எடுத்துக் கூறினார்கள்.


பூவொடு நீர் தூவிப் பெங்க விரை புகைத்து
நாவுடை நன்மணி நன்கு இயம்ப – மேவார்
அழல் மறம் காற்றி அவிந்தாற்கு என்று ஏத்திக்
கழல் மறவர் கைக்கொண்டார் கல்.


மறைந்த மாவீரன் காலமெல்லாம் அமைதியாக உறங்கப்போகின்ற கல் இது. சூரிய வெப்பத்தினால் அது கொதிநிலையில் இருப்பது நல்லதல்ல என்று நினைத்து அக் கல்லுக்கு குளிரும் வித்துக்களை அரைத்துச் சாத்தி அதனை நீர் நிறைந்த குளத்தின் அடியிலே போட்டுக் குளிர வைத்தனர்.


காடு கனலக் கழலோன் சினம் சொரியக்
கூடிய வெம்மை குளிர் கொள்ளப் – பாடி
நயத்தக மண்ணி நறு விரை கொண்டு ஆட்டிக்
கயத்து அகத்து உய்த்திட்டார் கல்.


போரிலே இறந்து கிடக்கும் பிணங்களை உவகையோடு உண்டு திரியும் பேய்கள் நிறைந்த போர்க்களத்தில் இருந்து இரத்தமும் சதைகளும் ஒட்டிக் கொண்டிருக்கும் வேல் முதலிய ஆயுதங்களோடு வெளியேறிய வீர மறவர்கள் குளத்தில் போடப்பட்டிருந்த கல்லை ஒருவர் மாறி ஒருவர் சுமந்து கொண்டு நட வேண்டிய இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.


கணன் ஆர்ந்து உவப்பக் கடுங்கண் மறவர்
பிணன் ஆர்ந்து பேய் வழங்கு ஞாட்பின் – நிணன் ஆர்
விழுக்கினால் வேய்ந்த விறல் வேலோர் கல்லை
ஒழுக்கினார் ஒன்று ஒருவர் முன்.


வேல் கொண்டு செய்யும் போரிலே தன் மண்ணுக்காக தன் வீரத்தை முழுவதுமாகப் பயன்படுத்தி விட்டு இந்த வீரன் இங்கே உறங்குகின்றான் என்ற வாசக்தை அவன் பெயரோடு சேர்த்து அக் கல்லிலே கூரிய ஆயுதத்தால் எழுதி நட்டு வைத்து அதற்கு மயிலின் தொகையால் அழகு செய்து தாங்கள் உண்ணும் கள்ளையும் அதன்மீது தெளித்து மணி அடித்து அந்த நிகழ்வைப் பெரிய விழாவாக அவர்கள் கொண்டாடினார்கள்.


மாலை துயல மணி எறிந்து மட்டு உகுத்துப்
பீலி அணிந்து பெயர் பொறித்து – வேல் அமருள்
ஆண் தக நின்ற அமர் வெய்யோற்கு ஆகு என்று
காண் தக நாட்டினார் கல்.


அப்படி விழா நடக்கும் போது அவனைப் பெற்றவர்களும் உறவினர்களும் அழுது சோர்வார்கள். அப்படித் துன்புறுவோர் வீரம் மிக்க தம் மகனை நினைத்து வருந்தாமல் மகிழ்ந்து எழுச்சி பெற அவன் புகழையும் வீரத்தையும் பாணர்கள் இசையோடு பாடி அவன் விண்ணுக்குச் சென்ற தென்திசை நோக்கித் தொழுவார்கள்.


அடும் புகழ் பாடி அழுது அழுது நோனாது
இடும்பையுள் வைகி இருந்த – கடும்பொடு
கை வண் குரிசில் கல் கை தொழூஉச் செல் பாண
தெய்வமாய் நின்றான் திசைக்கு.


புலி போன்ற அந்த வீரனுக்கும் அவன் பயன்படுத்திய வாளுக்கும் புரால் உணவு சமைத்துப் படைத்து வணங்கி மணி ஒலி எழுப்பியபின் அந்த நடுகல் விழா முற்றுப் பெறும். விழா முடிந்ததும் வில்லையும் அம்பையும் ஏந்திய போராளிகள் எல்லோரும் அணிவகுந்து நின்று அந்த வீரனைப் பெற்றவர்களையும் உறவினர்களையும் அழைத்துச் சென்று அவர்களின் இல்லங்களில் சேர்த்துவிட்டுத் தாமும் கலைந்து செல்வார்கள் என்று ஒரு சமுதாயத்தின் கதையை முழுமையாகச் சொல்லிவிட்டுப் போனது புறப்பொருள் வெண்பா மாலை.


வாட்புகா ஊட்டி வடி மணி நின்று இயம்பக்
கோட்புலி அன்ன குரிசில் கல் – ஆட் கடிந்து
விற்கொண்ட வென்றி விறல் மறவர் எல்லோரும்
இற்கொண்டு புக்கார் இயைந்து.


புலவனே இத்தனையும் செய்ய உனக்கென்று ஒரு நிலம் இருந்தது. ஆட்சி அதிகாரம் உங்கள் கைகளில் இருந்தது. தமிழனைத் தமிழனே ஆண்ட காலத்தில் வாழ்ந்த புண்ணியப் பிறவி நீ. மாவீரர் குடும்பங்களை போராளிகள் அணிவகுத்து சென்று அவர்களின் வீட்டில் விடும் செயலை அனுமதித்தது உனது அரசாங்கம். அதனால் நீ எழுதி வைத்த உண்மைகள் காலம் காலமாகப் பாதுகாக்கப்பட்டு எங்களிடம் இலக்கியமாகத் தரப்பட்டிருக்கின்றது இன்று.


இந்த வசதிகள் எமக்கு இல்லை. ஆம் எமக்கு நாடும் இல்லை அரசும் இல்லை என்று நாம் சொன்னால் உங்களுக்குள் ஒற்றுமையும் இல்லை என்ற வரியையும் இதனோடு சேர்த்துக் கொள்ளுங்கள் என்று வானத்திலே இருந்து சொல்கின்றாயா நீ!
இரா.சம்பந்தன்

கனடா தமிழர் தகவல் இதழில் இன்று 5.11.2025 நான் எழுதிய கட்டுரை இது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.