புத்தாண்டு பிறக்கிறது 2021!
புத்தாண்டு பிறக்கிறது கால ஏட்டில்
புதுப்பக்கம் திறக்கிறது போன ஆண்டு
கொத்தோடு போனவர்கள் பலபேர் கொரணா
கொன்றழித்த மானுடரும் பலபேர் குடும்பக்
குறையோடு போனவரும் பலபேர் வீட்டை
வித்தோடிப் போனவரும் பலபேர் தொழிலை
விட்டோடிப் போனவரும் பலபேர் கண்ணில்
முத்தான நீரோடு பலபேர் என்று
முடிவுற்றுப் போனதது புதிதாய் ஒன்று!
கணணியிலே முன்னிருந்து மட்டும் கற்றுக்
காலத்தை வீணடிக்கும் கவலை உண்டு
தணல்நெருப்பைக் கண்டதுபோல் சனங்கள் எல்லாம்
தள்ளிமெல்ல ஓடுகின்ற நிலையும் உண்டு
குணநலமும் குற்றமற்ற மனத்தா ரோடும்
கூடிநின்று கதைக்கவொணாச் சட்டம் உண்டு
பிணநிலையை அடைந்தவரைப் பார்க்கச் சென்றும்
பின்னாலே பத்தடியில் நின்ற துண்டு
ஆண்டவனின் கோவிலும் பூட்டுத் தொங்க
அதைப்பார்த்து வருந்துகின்ற நிலையே உண்டு
கூண்டிருக்கும் பறவையென வீடு வாழ்ந்து
குறைகேட்டு மனம்வாடும் முதியோர் உண்டு
தீண்டுகின்ற பொருளையெலாம் அச்சத் தோடு
திரும்பவுமே கைகழுவும் கொடுமை உண்டு
பூண்டுமிளகு இஞ்சிமஞ்சள் அதிகம் சேர்த்து
புதுவிதமாய் சமைத்துண்டு பார்த்தார் உண்டு
முடியவில்லை அரசுகளால் எதுவும் செய்ய
முடிச்சவிழ்த்து பணங்கொடுக்கும் நிலையே உண்டு
கொடியகொள்ளை பொய்விபரம் கொடுத்து காசைத்
கூட்டியள்ளிக் கொண்டவர்கள் பலபேர் உண்டு
பிடியரிசி அதுகூடக் கிடைக்காக் காலம்
பின்னாலே வருமெனவோர் ஆய்வும் உண்டு
வடிவிழந்து பொலிவிழந்து உலகம் எல்லாம்
வறுமையிலே போய்முடியும் என்பார் உண்டு!
பிறக்குமொரு புத்தாண்டில் உலகம் இன்று
பேசுவது இறைவனையா அல்ல அல்ல
மறக்கவொணாப் பெற்றாரை மனைவி பிள்ளை
மனமிருக்கும் நட்புகளா அவரும் அல்ல
சிறக்குமொரு விஞ்ஞான முடிவு நீட்டும்
சின்னவொரு தடுப்பூசி போட்டுத் தப்பும்
புறத்துதவி பற்றித்தான் எங்கும் பேச்சு
புத்தாண்டே அதுவெங்கே கைகள் இங்கே!
இரா.சம்பந்தன்