பிரிவுக்கு காரணம் என்ன?
கனடா தமிழர் தகவல் இதழில் இன்று (5.9.2024) வெளிவந்த எனது கட்டுரை இது
கலைத் துறையிலே அனைத்தையும் கற்றுக்கொண்டவள் மாதவி. பரதநாட்டியம் தெரியும் யாழ் வாசிக்கத் தெரியும். இனிமையாகப் பாடவும் தெரியும் அவளுக்கு. அதைவிடத் தமிழ் இலக்கியம் தெரியும். அகத்திணை புறத்திணை ஒழுக்கங்கள் பற்றி அவள் நன்றாகத் தெரிந்து வைத்திருந்தாள்.
தன் கலைத் திறமையால் அரசாங்க உயர்விருதையும் தன் நாட்டியத்துக்காக வாங்கி வைத்துக் கொண்டு புகழின் உச்சியிலே இருந்த அவளை விதி விடவில்லை. ஏற்கனவே இன்னொருத்தியை மணம் முடித்து இருந்தவனும் தன்னை விட வயது அதிகமானவனும் வியாயாரத் துறையிலே புத்தியைச் செலுத்தி அதன் மூலம் செல்வத்தைத் தேடிக்கொண்ட குடும்பத்தில் பிறந்தவனுமாகிய கோவலனோடு அவளுக்குத் தொடர்பு ஏற்பட்டது.
கோவலன் எந்த வாழ்வை எதிர்பார்த்து தன்னிடம் வந்தானோ அந்த வாழ்வை வெட்கப்படாமல் வழங்கினாள் மாதவி. நிலவு வெளிச்சம் முழுமையாக விழும் மொட்டை மாடியிலே தன் சேலை குலைந்து போவதையும் தன் அழகுக்காக செய்து கொண்ட ஒப்பனைகள் எல்லாம் அழிந்து போவதையும் பொருட்படுத்தாமல் கோவலனோடு கூடியும் பின்பு ஊடல் கொண்டு விலகியும் பின்பு பெரு விருப்பத்தோடு தானாகவே அவனுக்கு முன்னால் ஓடிச் சென்று இறுகத் தழுவிக் கூடியும் இரவு முழுவதும் கிடந்தாள் மாதவி என்று எழுதினார் இளங்கோவடிகள்.
அமதுகில் மேகலை அசைந்தன வருந்த
நிலவுப்பயன் கொள்ளும் நெடுநிலா முற்றத்து
கலவியும் புலவியும் காதலர்க்கு அளித்து ஆங்கு
ஆர்வ நெஞ்சமொடு கோவலர்க்கு எதிரிக்
கோலம் கொண்ட மாதவி
(சிலப்பதிகாரம் – அந்திமாலைச் சிறப்புச்செய் காதை)
அத்தகைய காதல் வாழ்வை கோவலனுக்குக் காட்டிய மாதவி புகார் நகரிலே தொடங்கிய இந்திர விழாவுக்கு அவனையும் அழைத்துக்கொண்டு வந்தாள். அந்த விழாவின் நிகழ்ச்சி நிரலிலே மாதவியின் நாட்டியமும் இருந்தது. மாதவி மேடையேறி பதினொரு ஆடல்களை ஆடிக் காட்டினாள்.
பல்வேறு நாட்டினர் பல்வேறு ஊரினர் உள்ளூர் சனங்கள் என்று எல்லோரும் காமக் களியாட்டங்களில் தங்கள் துணைகளோடு சேர்ந்து கொண்டும் துணை பெறாதார் ஏக்கத்தோடு அடுத்தவரைப் பார்த்துக் கொண்டும் அலைந்து திரிந்த ஒரு கேளிக்கை விழாவிலே தன் உயிருக்கு உயிரான காதலி மேடை ஏறி பலரும் காண ஆடியதும் அவள் உடல் அசைவை காமத்தோடு பலரும் பார்த்ததும் கோவலன் மனத்தை என்னவோ செய்தது. அவளிடம் அவனுக்கு வெறுப்பு ஏற்பட்டது.
தான் ஆடியது கோவலனுக்கு பிடிக்கவில்லை என்பதை உணர்ந்து கொண்ட மாதவி அவனை மகிழ்விப்பதற்காக தன்னை மீண்டும் அழகு படுத்திக்கொண்டு கடற்கரைக்கு சென்றுவர எண்ணினாள்.
ஆந்தரத்து உள்ளோர் அறியா மரபின்
வுந்து காண்குறூஉம் வானவன் விழாவும்
ஆடலும் கோலமும் அணியும் கடைக்கொள
ஊடல் கோலமொடு இருந்தோன் உவப்ப
(சிலப்பதிகாரம் – கடல் ஆடு காதை)
கடற்கரையிலே தான் தற்காலிகமாக அமைத்துக் கொண்ட கூடார வீட்டிலே வைத்து கோவலனுக்கு காம விருந்து படைத்த மாதவி கோவலனுக்கு தன் யாழை எடுத்து மீட்டிக் காட.;டியதோடு காவிரி ஆற்றை நோக்கியும் இனிமையாகப் பாடி நீங்களும் பாடுங்கள் என்றாற் போல யாழைக் கோவலனிடமும் கொடுத்தாள்.
காதலி கேட்டு விட்டாளே என்று கோவலனும் காவிரியை நோக்கி திங்கள் மாலை வெண்குடையான் என்று தொடங்கிப் பாடினான்.
அவன் பாடியதை மகிழ்வோடு கேட்ட மாதவியின் கெட்டகாலம். தன் கல்வித் தகமையைக் கோவலனுக்கக் காட்டுவதற்காக அவள் தான் கற்ற சங்க இலக்கிய இலக்கண மரபுகளுக்குள் புகுந்து சுவையான பாடல் ஒன்றைத் தெரிவு செய்தாள;. அவளுக்கு அந்தச் சங்க இலக்கியச் செய்யுள் பிடித்து இருந்ததால் உடனேயே ஞாபகத்துக்கு வருகின்றது.
ஒரு காதலன் தன் காதலிக்கு அன்பான உறுதி மொழி கொடுத்து வீட்டில் இருத்திவிட்டுப் பொருள் தேடிவரப் பிரிந்து கப்பல் ஏறிச் செல்கின்றான். அவனின் அன்பான வார்த்தை நிழலிலே வாழும் காதலியை மாலைப் பொழுது வந்து வருத்துகின்றது. அவள் மாலைக் காலத்தைப் பார்த்துக் கேட்டாள்.
கவலையோடு கோட்டைக்குள் இருக்கும் ஒரு அரசனை எதிரி முற்றுக்கை இடும்போது அவனுக்கு துணை செய்ய முற்படும் உள்ளூர்க்காரன் போல நீயும் என் காதலரோடு சேர்ந்து கொண்டு என்னை துன்பப்படுத்தப் பார்க்கிறாயா என்று பொருள்படும் அந்தப் பாடலை மாதவி கோவலனுக்கு முன்னாலே பாடிக் காட்டினாள் மாதவி.
பிரிந்தார் பரிந்துரைத்த பேர் அருளின் நிழல்
இருந்து ஏங்கி வாழ்வார் உயிர்ப்புறத்தாய் மாலை
உயிர்ப் புறத்தாய் நீ ஆகில் உள் ஆற்றா வேந்தன்
எயிற்புறத்து வேந்தnனோடு என் ஆதி மாலை
(சிலப்பதிகாரம் – கானல் வரி)
இந்தப் பாட்டைக் கேட்டதும் கோவலன் தவறாக நினைத்தான். இவளுக்கு எனது தொடர்பு ஏற்படும் முன்னரே வேறு யாருடனோ காதல் இருந்திருக்கின்றது. இவள் பாடிய உள்ளூர் காரன் போல நான் தான் காதலனை பிரிந்து ஏங்கும் இவளிடத்திலே வலிய வந்து இவளைத் துன்பப் படுத்துவதாக இவள் நினைக்கிறாள். நான் காவிரியைப் பற்றிப்பாட இவள் தன் பழைய காதலனை நினைத்துப் பாடுகிறாளே என்று தப்பாக நினைத்து கோவலன் மாதவியைப் பற்றியிருந்த தன் கையை உதறிவிட்டு காவிரிக் கடற்கரையிலேயே மாதவியை விட்டுப் பிரிந்து சென்றான்.
கானல்வரி நான் பாடத் தான் ஒன்றின்மேல் மனம் வைத்து
மாயப்பொய் பலகூட்டும் மாயத்தாள் பாடினாள் என
யாழ் இசை மேல் வைத்து தன் ஊள்வினை வந்து உருத்தது ஆதலின்;
உவவு உற்ற திங்கள் முகத்தாளைக் கவவுக்கை ஞெகிழ்ந்தானாய்ப்
பொழுது ஈங்கு கழிந்தது ஆதலின் எழுதும் என்று உடன் எழாது
ஏவலாளர் உடன் சூழ்தரக் கோவலன் தான் போன பின்னர்
(சிலப்பதிகாரம் – கானல் வரி)
சிலம்பில் மட்டுமல்ல இன்றைய சமுதாயத்திலும் பொறாமையும் சந்தேகமும் தான் பல அன்பு நெஞ்சங்களை இரு கூறுகளாகப் பிளந்து போட்டிருக்கின்றது. அனைவரும் கண்டு களிக்க வேண்டிய ஒரு பெண்ணின் கலைத்திறமையை அறைக்குள் அவளைப் பூட்டி வைத்து தான் மட்டும் தான் அனுபவிக்க வேண்டுமென்ற பல ஆடவரின் சுயநலப் போக்கினால் இன்றைய பல நடிகைகள் மட்டுமல்ல அன்றைய மாதவியும் தன் குடும்ப வாழ்வை இழந்திருக்கின்றாள்.