|

பதிவொன்றும் போடாதே மனமே!

பதிவொன்றும் போடாதே மனமே – முகநூல்
பக்கம்நீ போகாதே பிரச்சனை தினமே
பதிவொன்றும் போடாதே மனமே – முகநூல்
பக்கம்நீ போகாதே பிரச்சனை தினமே

நல்லவர் ஒருசிலர் உண்டாம் – ஆனால்
நல்லறி வில்லாத நட்பினர் பலராம்
கல்லெறி பட்டது போன்றே – தினமும்
காயங்கள் வாங்கிநீ சேர்க்கிறாய் மனமே

எழுதிய கவிதையால் கோபம் – கட்டுரை
ஏதும் எழுதினால் அதைவிடக் கோபம்
தொழுதிடும் கடவுளால் கோபம் – என்றே
தொல்லை கொடுக்கிறார் மனமேநீ பாவம்

கள்வெறி ஆசையைப் போல – தினமும்
கண்கள் அழைக்குதா முகநூலின் பக்கம்
முள்வளர் பற்றைக்குள் புகுந்தே – ஐயோ
முள்ளென்று கத்துறாய் மனமேநீ வெட்கம்

விருப்ப லைக்குள் பெற்றும் – அதை
வேறு பலருக்கு திருப்பிநீ இட்டும்
நெருப்பிலே மிதிக்கிறாய் மனமே – ஆசை
நிழலில் அழிக்கிறாய் நேரத்தை தினமே

பேத்திக்கு சாதகம் எழுதி – வீட்டில்
பெட்டியில் மறைத்திடும் பேர்வழி எல்லாம்
நாத்திகம் பேசுதே நாட்டில் – வந்து
நடுவர்கள் ஆகுதே முகநூலாம் கோட்டில்

பிறந்தநாள் படங்களைப் போடு – பிள்ளை
பிறந்திட்ட செய்தியைப் படத்துடன் போடு
இறந்தநாள் மனிதரைப் போடு – இல்லை
இருப்பவர் புகழினை இனிமையாய் பாடு

தேர்தல் அரசியல் வேண்டாம் – கோவில்
தெய்வங்கள் பற்றிநீ எழுதவே வேண்டாம்
ஊரும் உலகமும் வேண்டாம் – நல்ல
உயர்தமிழ் செய்திகள் அவைகளும் வேண்டாம்

கலைத்துறை நடிகையைப் போடு – அவள்
காவடியாட்டத்தின் கதைகளைப் பேசு
குலைக்கின்ற எதிரிகள் கூட்டம் – உன்னை
கோபுர உச்சியில் ஏற்றியே காட்டும்

பதிவொன்றும் போடாதே மனமே – முகநூல்
பக்கம்நீ போகாதே பிரச்சனை தினமே
பதிவொன்றும் போடாதே மனமே – முகநூல்
பக்கம்நீ போகாதே பிரச்சனை தினமே

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.