நெடிய பயணமுண்டு பாப்பா
ஓடி ஒளியாதே பாப்பா – என்றும்
ஒதுங்கி இருக்காதே பாப்பா
தேடிப் பிரச்சனைகள் வந்தால் – நீயும்
தீர்க்கத் தயங்காதே பாப்பா
வாடியுன் பெற்றவரை போல – நெஞ்சில்
வலிகள் சுமந்தபலர் பாப்பா
கூடிக் குடியிக்கும் நாட்டில் – உனக்குக்
குறைகள் எதுவுமில்லை பாப்பா
பெரிய தேசமடி கனடா – மனிதம்
பெருமையுற சட்டமுள்ள கனடா
உரிய மதிப்பளிக்கும் பாப்பா – உனக்கு
உதவிகளைச் செய்துதரும் பாப்பா
நிறையக் கவலையுண்டு பாப்பா – உன்னைப்
பெற்றவர்கள் நெஞ்சிலடி பாப்பா
இறையைத் தவிரவடி பாப்பா – அவர்க்கு
இங்குவந்தும் துணைகளில்லைப் பாப்பா
ஈழமெனும் நாடிழந்தார் பாப்பா – பெற்றார்
ஈரமிலா நெஞ்சினரால் பாப்பா
தோழரென்று ஒருவரில்லைப் பாப்பா – எல்லாம்
தோல்வியிலே முடிந்தடி பாப்பா
போனதெல்லாம் போகட்டுமே பாப்பா – நீயும்
புகலிடத்தில் உயர்ந்துவிடு பாப்பா
ஆனதெல்லாம் பொறுத்தவர்க்குப் பாப்பா – இங்கே
அதுவொன்றே போதுமடி பாப்பா
செந்தமிழைப் படித்துவிடு பாப்பா – இனத்தின்
சிறப்புகளை அறிந்துகொள்ளு பாப்பா
செந்தணல்மேல் சாம்பலென பாப்பா – அதனைச்
சிந்தையிலே மறைத்துவைப்பாய் பாப்பா
ஈழம் இழந்துவிட்டோம் பாப்பா – கனடா
இதுவேயுன் தேசமினிப் பாப்பா
வாழப் பயங்களில்லைப் பாப்பா – நல்ல
வழியைத் தேர்ந்தெடுப்பாய் பாப்பா
குடும்ப தினத்திலடி பாப்பா – கனடா
கூடிக் களிக்குதடி பாப்பா
நெடிய பயணமுண்டு பாப்பா – உனக்கு
நிலத்தினிலே நாளையடி பாப்பா!
இரா.சம்பந்தன்