நிலவும் நல்லவர்களும்!
வானத்திலே தோன்றும் நிலவானது தன்னிடமுள்ள கறையை நீக்கித் தன்னை மேலும் அழகு படுத்திக் கொள்ள நினையாது இந்த உலகத்தைச் சூழ்ந்த இருளை நீக்கிவிடத்தான் முயற்சி செய்யும்.
அது போல நல்ல உயர்ந்த குணமுடைய மனிதர்களும் தங்கள் வாழ்விலே என்ன குறை குற்றங்கள் இருந்தாலும் அதைச் சரி செய்து தங்களை உயர்த்திக் கொள்ள நினையாது அடுத்தவர்கள் யாராவது வந்து தங்கள் குறைகளைச் சொன்னால் அந்தக் குறைகளையே முதலில் தீர்த்து வைத்து அவர்களுடைய துன்பத்தைப் போக்கவே நினைப்பார்கள்.
தனக்கு மிஞ்சித் தான் தானமும் தருமமும் என்ற நினைப்பு எல்லாம் அவர்களுக்கு கிடையாது.
தங்குறை தீர்வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறூஉம்
வெங்குறை தீர்க்கிற்பார் விழுமியோர் – திங்கள்
கறையிருளை நீக்கக் கருதாது உலகில்
நிறை இருளை நீக்கும் மேல் நின்று.
(துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளின் நன்னெறி வெண்பாவில் இருந்து)
இரா.சம்பந்தன்.