நிறை மொழி மாந்தர்கள்!
அது 1996ம் ஆண்டு கனடாவில் ஒரு தொடர்மாடிக் கட்டிடத்தின் லிப்டில் பெருங்கவிக்கோ பண்டிட் வா.மு. சேதுராமன் அவர்களும் நானும் இன்னும் சில கனடிய தமிழ்ப் பெரியோர்களும் மேல் நோக்கிப் பயனிக்கின்றோம்.
எங்கள் தமிழ்நாட்டில் சினிமாவில் நடிக்கப் போன பெண்களை நாம் மதிப்பதில்லை என்கிறார் சேதுராமன்.
எங்கள் யாழ்ப்பாணத்தில் அடிக்கடி சினிமாப்படம் பார்க்கப் போகும் பெண்களையே நாம் மதிப்பதில்லை என்கிறேன் நான்.
என்வார்த்தை அவரைச் சுட்டிருக்க வேண்டும். லிப்டை விட்டு வெளியே வரும் வரை யாரும் வாய் திறக்கவில்லை. என்மீது கரிசனை மிக்க ஒரு பெரியவர் மட்டும் சேதுராமன் அவர்களிடம் என்னைச் சுட்டிக்காட்டி இவரும் கவிதை எழுதுபவர் என்று கொழுத்திப் போடுகின்றார்.
கவிஞனா என்னைப்பற்றி உடனே ஒரு கவிதை சொல்லப்பா என்கிறார் சேதுராமன்.
கன்றெடுத்த பசுமடியை மெல்லத் தொட்டுக்
கறந்தெடுத்த பசும்பாலைக் கனியக் காய்ச்சி
குன்றெடுத்த மலைவாழைப் பழமும் தேனும்
குளிர்ந்தபலா மாஞ்சுளையும் குழையச் சேர்த்து
நன்றளிப்பார் ஆயிடினும் நயந்து போற்றேன்
நமதுகவிக் கோமகனார் சேது ராமர்
மன்றளிக்கும் கவிதைமழை கேட்பேன் ஆகில்
மாநிலத்தில் ஈடதற்கு எதுதான் உண்டோ
என்று மறுகணமே அவரைப்பற்றி ஒருகவிதை சொல்கின்றேன் நான். உடனே ஓடிவந்து என்னை அணைத்துத் தலையைத் தடவிவிட்டு தன் தோளிலே மாட்டியிருந்த பையில் இருந்து தமிழ் நூல்களில் கவிதை பற்றிய கருத்துகளும் கற்பனைகளும் என்ற தனது புத்தகத்தை எடுத்து அதில் பின்வருமாறு வெண்பா ஒன்று எழுதி தன் கையெழுத்தையும் இட்டுத் தருகின்றார்
சம்பந்தன் என்னும் தமிழ்த்தம்பி நன்றுதமிழ்த்
தும்பிபோல் தேன்தமிழ்த் தோட்டத்தில் – நம்பியே
கம்பன்போல் நல்லெதிர் காலத்தில் ஓங்குகவே
தெம்புடன் வாழ்க தெளிந்து
அன்று அந்தப் பெரியவர் வாழ்த்திய நிறைமொழி அதற்குரிய பலனை என் வாழ்விலே பல சந்தர்ப்பங்களில் வாரி வழங்கியிருக்கின்றது.
கோபம் கொண்டு கெட்டுப் போகும்படி கூறினாலும் அன்பு கொண்டு வாழ்த்தி அருளினாலும் அதற்குரிய பலனை தப்பாது வழங்கும் வார்த்தைகளுக்கு நிறைமொழி என்று பெயர். அதைப் பேசக்கூடியவர்களை நிறைமொழி மாந்தர் என்றது திருக்குறள்.
இரா.சம்பந்தன் (கனடா)