நற்றிணை காட்டும் நமது வாழ்வியல்!
துள்ளி நடந்துவரும் துயில் நீத்த அலைகளெல்லாம் அள்ளிக் கொடுத்துதவும் அரியவகை மீனையெல்லாம் கிள்ளித் தலைமுடிந்த கிழவிகளும் குமரிகளும் வள்ளத்தில் இருந்தகற்றி வழியெல்லாம் தோள்சுமந்து கீழ்மணலில் இறக்கி வைத்துக் கிடுகோலைக் கூறிட்டு வெள்ளிப் பணத்துக்காய் விலைபேசி விற்கின்ற நெய்தல் நிலப்பரப்பு நீண்டு கிடந்ததங்கே.
ஏழ்மை நிறைந்த மக்கள். எழுத்தறியா மனக்கணக்கு. கீழ்மை நிலைவாழ்வு கீற்றொளிபோல் தூயமனம். தாழ்வு மனப்பான்மை தந்துவிட்ட தைரியத்தால் அவர்கள் கூவும் குரலினிலே கொடியதொரு பயமிருக்கும் மற்றவர்க்கு. பொய்தடவிப் பேசிவிட்டால் புறப்படவே முடியால் நெய்தடவி வைத்தபல ஆயுதங்கள் தடுத்துவிடும் எவரையும்தான்.
மீனும் வலையும் விலையுயர்ந்த வள்ளங்களும் கானில் முளைத்தகனித் தாழைமரப் பழவகையும் சுறாவயிற்று ஊனில் வடித்தெடுத்து உறையவைத்த தைலங்களும் வாங்க வருவோர்கள் வரவும் செலவுமன்றி ஏனைக் காரணங்கள் எதுசொல்லி வந்தாலும் ஏற்காத மக்களங்கு எங்கும் வாழ்ந்தார்கள்.
வலை கொண்ட மீன் கொள்ளும் வறியவராய் இருந்தாலும் சிலை செய்து தங்கத்தால் சேலை என்னும் அதையுடுத்து மாலைக் கதிர்போன்ற மணிகோர்த்து கழுத்தினிலும் தலை கொண்ட கொண்டையிலும் தாள் என்னும் கால்களிலும் நிலைகொள்ள அணிவித்து நிலத்தினிலே நடக்கவிட்டார் நீண்டகுழல் பெண்குலத்தை.
முத்தைப் பல் தோற்கடிக்கும் முழுநிலவை முகம் வீழ்த்தும். கத்தை முகில்குலத்தை கார்குழலும் நடுங்க வைக்கும். பித்துப் பிடிக்கவைக்கும் பார்ப்போரை இரு கண்ணும். பத்து விரல் தாங்கும் பசுமைமிகு கையிரண்டும் கொத்துத் தாமரையின் குளிர்தண்டை நினைவூட்டும். தைத்துப் போட்டறியாச் சட்டையற்ற மார்பகத்தைச் முற்றும் மறைக்கவெனப் தாவணியும் போராடும்.
கரும்புச் சுவை கண்டால் கட்டெறும்பு உண்ணவரும். அரும்பு மலர் கண்டால் அதைத்தேடி வண்டுவரும். விரும்பும் கனி பழுத்தால் விரைந்துவரும் பறவையினம். குரும்பைத் தெங்குமடல் தெரிந்தால் அணில் ஏறும். நரம்புப் பயிற்றையெனில் நாள்தோறும் கிளி கொத்தும். அங்கேயும் அப்படித்தான்.
பணம் நீட்டி மீன்வாங்கும் சாக்கினிலே பரதவரின் கன்னியரைத் கணந்தோறும் பார்க்கவரும் காளையரோ ஏராளம். அதிலொருவன் கொடிபறக்கும் நெடுமாடக் கூரைமிகும் ஊருடையான். படிநெல்லு அளந்தால் போல் பணமள்ளும் குடும்பத்தான். நொடிப்போதில் செல்லவல்ல நெடுந்தேரும் வைத்திருந்தான். அவனுக்கும் காதலாம் கடல்கன்னி ஒருத்தியுடன்.
கண்ணெடுத்தும் பாராமல் கால்நடந்து செல்வாளை காசுத் திமிரோடு கனகாலம் சுற்றிவந்தான். புண்ணெடுத்து நெஞ்சமெல்லாம் புதுநோவாய் அது வருத்த பெண்ணவளும் துடித்திட்டாள் பிரச்சனைகள் பிறகென்று. சாதி வேறு. சார்ந்திருக்கும் நிலம் வேறு. பாதி வயிறுண்டு பட்டினியாய் வாழ்ந்தாலும் நீதி வழி நடக்க நினைக்கின்ற என் வாழ்வில் மீதிக் காலத்தில் இப்படியோர் மனிதனுமா.
கரையோரப் பெண் வளத்தை காசுக்கு இரை கொடுக்க சாதி இணங்காது. பணம் வந்து பழிதீர்க்கும். மோதிப் பெருங்குலத்து முதுமக்கள் தம்மோடு வாதிட்டு வெல்வதற்கும் வாழ்க்கையிலே இடமில்லை. போகட்டும் அவன்காதல் போய்த்தொலைந்தால் போதுமெனத் தோழிக்குத் தன் நிலையை எடுத்துரைத்தாள் அப்பெண்ணும்.
தோழி ஒருநாள் தோன்றினாளக் காதலன்முன். வாழி மானுடரே வளைத்து நீர் பிடிக்கத் துடிக்கும் பெண்கனவை மறந்துவிடும் இக்கணமே. கொழுத்த சுறாமீனைக் கொண்டுவந்து கூறிட்டு பழுக்க வெய்யினிலே பதம் பண்ணும் போது வரும் பறவை கலைத்துழலும் பரதவத்துப் பெண்கள் யாம். மீன் நாற்றம் அடிக்கிறதே நீர்நிற்கும் இடமெல்லாம். எங்கள் வீடும் அப்படித்தான் வெடுக்கெடுத்து நாறும் தினம்.
சின்ன மனிதர் நாம். சிறப்பாக வாழுகின்றோம். என்ன நடந்தாலும் இப்படித்தான் வாழ்ந்திவோம். காதலை நாம் வெறுக்கவில்லை. காதல் பிறக்கின்ற காளையைத் தான் வெறுக்கின்றோம்.
சாதிப் பிரச்சனையை சாகடிக்க முடியாது. பணமும் சேர்ந்து கொண்டால் பழுதுபடும் காதலெலாம். சாதி ஒழியட்டும். சமத்துவத்தால் பணமேடும் நிலத்தில் சரியட்டும். அதுவரைக்கும் உயர்வான குடிப்பிறந்த உம்போன்ற மனிதரெல்லாம் உம்குலத்தில் பெண்ணெடுத்து உயர்வாக வாழ்ந்திடுங்கள்.
சாதி குறைந்த சரித்திரத்தில் வாழ்ந்தாலும் ஆதிக் குடியான மீனவர்கள் சமூகத்தில் சிறந்தவர்கள் உள்ளார்கள். என்றுமக்குச் சொல்லும்படி அனுப்பினாள் என்தோழி. அதனாலே நான் வந்தேன் என்றுரைத்தாள் அத்தோழி.
இவளே கானல் நண்ணிய காமர் சிறுகுடி
நீல் நிறப் பெருங்கடல் கலங்க உள்புக்கு
மீன் எறி பரதவர் மகளே நீயே
நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்க்
கடுந்தேர்ச் செல்வன் காதல் மகனே
நிணச் சுறா அறுத்த உணக்கல் வேண்டி
இனப் புள் ஓப்பும் எமக்கு நலன் எவனோ?
புலவு நாறுதும் செல நின்றீமோ!
பெரு நீர் விளையுள் எம் சிறு நல் வாழ்க்கை
நும்மொடு புரைவதோ அன்றே
எம்மனோரில் செம்மலும் உடைத்தே!
என் தோழியோ கடற்கரைச் சோலையின் அருகில் உள்ள அழகிய சிற்றூரில் உள்ள கடலில் சென்று மீனைப் பிடிக்கும் பரதவரின் மகள். நீயோ பெரிய கொடிகள் பறக்கும் கடை வீதிகள் உள்ள பழமையான ஊரில் விரைந்துச் செல்லும் தேரையுடைய பணக்காரரின் அன்பு மகன். கொழுத்த சுறா மீனை அறுத்துக் காய வைத்து பறவைகளை விரட்டும் எங்களுக்கு உன்னால் என்ன பயன்? இங்கு மீன் நாற்றம் அடிக்கின்றது. நிற்காமல் இங்கிருந்து போய் விடு. பெரிய கடல் தரும் பயனால் நாங்கள் எளிய நல்ல வாழ்க்கையை வாழ்கின்றோம். அது உன்னுடையதைப் போன்று உயர்வானது இல்லை. ஆனால் எங்கள் நடுவிலும் உயர்ந்தோர் உள்ளனர்!
(சங்க இலக்கியம் நற்றிணை பாடல் 45)
இரா.சம்பந்தன்
கனடா தமிழர் 5.1.2025 இதழில் வெளிவந்த எனது கட்டுரை இது,