துறவின் இலக்கணம் என்ன?
பட்டணத்துச் செட்டியார் என்ற பெயரோடு பெருஞ் செல்வந்தராக வலம் வந்த பட்டினத்தார் ஒரு நாளிலேயே மாளிகை மனைவி செல்வம் என்ற அனைத்தையும் விடுத்துத் துறவியாகி கோவண தாரியாக வந்து நெல் அறுக்கப்பட்ட வயல் ஒன்றிலே சுடு புழதியில் படுத்திருந்தார்.
அப்போது தண்ணீர் எடுத்துச் செல்ல இரு பெண்கள் அந்த வழியால் வந்தார்கள். அவர்களில் ஒருத்தி வயலில் கிடந்த பட்டினத்தாரைப் பார்த்துவிட்டு நேற்றுவரை எப்படிச் செல்வச் செழிப்போடு இருந்தவர் இன்று இப்படி வந்து வயலிலே படுத்துக் கிடக்கிறாரே இதுவல்லவோ உண்மையான துறவு என்று தோழிக்குச் சொன்னாள்.
உடனே மற்றவள் எல்லாம் சரிதான். ஆனால் இது முழுமையான துறவு அல்ல. தலையை வயல் வரம்பிலே வைத்துக் கொண்டு படுத்திருக்கிறாரே அப்போ தலைக்கு உயரம் வேண்டும் என்ற எண்ணம் இருக்கல்லவா என்றாள்.
இந்த உரையாடலைக் கேட்ட பட்டினத்தார் தன் தவறை உணர்ந்து தலையைச் சமதரையிலே வைத்துக்கொண்டு திரும்பவும் படுத்திருந்தார்.
தண்ணீர் எடுத்துக்கொண்டு வரும் போது அந்தப் பெண்கள் பட்டினத்தாரைப் பார்த்தார்கள். இப்போது பார் தலைக்கு உயரம் வேண்டும் என்ற எண்ணத்தையே துறந்து விட்டாரே இப்போது என்ன சொல்கிறாய் என்றாள் ஒருத்தி தோழியிடம்.
இவரின் துறவு இன்னும் முழுமை பெறவில்லை. தன்னைப் பற்றி மற்றவர்கள் என்ன கதைக்கிறார்கள் என்பதையும் காது கொடுத்துக் கேட்கின்றார் துறவி என்றால் இந்தப் பற்றும் இருக்கக் கூடாது என்றாள் தோழி.
பட்டினத்தார் எழுந்திருந்து அழுதார்.