திருக்குறள் கருத்துக்களில் தொல்காப்பியத்தின் தாக்கம்!
திருக்குறள் கருத்துக்களில் தொல்காப்பியத்தின் தாக்கம்!
திருக்குறளின் கருப்பொருள் என்ன என்றால் காம இன்பமும் அதற்குத் துணைசெய்யும் வாழ்வைக் கொண்டு நடத்த தேவையான பொருளும் அந்தப் பொருட்களைத் தப்பான வழியில் தேடிக் கொண்டுவிடாமல் இருக்கக் கடைப்பிடிக்கக் கூடிய அறவழிகளும் தான் என்று உலகம் ஏற்றுக் கொண்டிருக்கின்றது.
உலகம் முழுவதற்கும் பொதுவான இந்தக் கருத்துக்களைக் கையில் எடுத்துக்கொண்டு அவற்றிற்கு ஈரடிக் குறளில் வரிவடிவம் வகுத்த காரணத்தால் திருக்குறள் உலகப் பொதுமறை ஆனது. அதனால் அதன் கருத்துக்களை எங்காவது ஒரு இடத்திலாவது பயன்படுத்தி பேசாத எழுதாத கல்விமான்கள் இல்லை என்ற நிலை இன்றும் இருந்து வருகின்றது.
யார் வேண்டுமானாலும் தங்களின் கருத்துக்களைச் சொல்லிவிட்டு அதற்குத் திருக்குறளில் இருந்து ஒரு பாட்டை மேற்கோள் காட்டிவிட்டால் போதும் அந்தக் கருத்து அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு விடும் என்ற நியதி இதிகாச காலம் முதல் இருந்து வருகின்றது.
கம்பன் கூடத் தனது இராமாயணத்திலே பல இடங்களில் திருக்குறளைப் பயன்படுத்தியிருக்கின்றான்.
காலமும் இடனும் ஏற்ற கருவியும் தெரிந்து கற்ற நூலுற நோக்கித் தெய்வம் நுனித்தறம் குறித்து மேலோர் என்று அந்தப் பாடல் அடிகள் வரும்.
(கம்பராமாயணம் – அயோத்தியா காண்டம் – மந்திரப் படலம்)
இது மந்திரிகள் எப்படி இருக்க வேண்டும் என்று திருவள்ளுவர் அமைச்சு என்ற அதிகாரத்திலே சொன்ன ஒரு குறளின் விரிவான வடிவமாகும்.
கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு
அந்தக் காலத்துக் கம்பன் போல இந்தக் காலத்துக் கண்ணதாசனும் திருக்குறள் பலவற்றைத் தூக்கிக் கொண்டு தமிழ்த் திரைப்படத் துறைக்கு வந்தார். வாழ்க்கைப் படகு என்ற படத்திலே நேற்றுவரை நீயாரோ நான் யாரோ இன்று முதல் நீவேறோ நான் வேறோ என்று ஒரு பாடலைக் கண்ணதாசன் எழுதினார்.
உன்னை நான் பார்க்கும்போது மண்ணை நீ பார்க்கின்றாயே
விண்ணை நான் பார்க்கும்போது என்னை நீ பார்க்கின்றாயே
என்று இரு கவிதை அடிகளைச் சேர்த்திருப்பார் கண்ணதாசன். இந்த அடிகள் கண்ணதாசனுடையவை அல்ல. அவை திருக்குறளில் இருந்து எடுக்கப்பட்வையாகும்.
எனது காதலி நான் அவளைப் பார்க்கும் போது வெட்கத்தினால் நிலத்தைப் பார்த்துக் கொண்டு நிற்பாள். நான் அவளைப் பாராத போது ஆவலோடு என்னைப் பார்த்துப் புன்னகைப்பாள் என்ற கருத்தில் வள்ளுவர் எழுதிய
யான் நோக்குங்கால் நிலம் நோக்கும் நோக்காக்கால்
தான் நோக்கி மெல்ல நகும்
என்ற குறள் தான் கவியரசரால் மேற்படி சினிமாப் பாடலாக்கப்பட்டது.
இவ்வாறு சிலப்பதிகாரத்து இளங்கோவடிகள் முதற்கொண்டு பலரும் திருக்குறளைப் பங்கு போட்டுக் கொண்டதைப் போல திருவள்ளுவர் தானும் யாருடைய கருத்துக்களை அல்லது செய்யுட்களை எடுத்துத் தனது திருக்குறளிலே பயன்படுத்தியிருக்கின்றாரா என்று பார்த்தால் தொல்காப்பியத்தில் இருந்து சில தரவுகளை வள்ளுவர் எடுத்துக் கொண்டிருக்கின்றார் என்று காண முடிகின்றது.
திருவள்ளுவர் மற்றவர்களைப் போல தான் எடுத்துக் கொண்டதைப் பூசி மெழுகிக் காட்டவில்லை. நேரடியாகவே பயன்படுத்தினார். தொல்காப்பியர் தனது பொருள் அதிகாரத்தின் செய்யுளியலிலே மந்திரம் என்றால் என்ன என்பதற்கு ஒரு வரைவிலக்கணம் கொடுப்பார்.
நிறைமொழி மாந்தர் ஆணையில் கிளர்ந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப
மந்திரத்துக்கு தொல்காப்பியர் சொன்ன இந்த இலக்கணத்தை திருவள்ளுவர் தனது நூலுக்கு அப்படியே கொண்டு வருகின்றார்.
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்
வாழ்த்திக் கூறினாலும் கோபப்பட்டுப் பேசினாலும் அவற்றுக்கான பலன்களைத் தந்துவிடக்கூடிய நிறைமொழிகளைப் பேசும் தவ முனிவர்களின் சிறப்பை இந்த உலகத்திலே அவர்கள் சொல்லி வைத்துவிட்டுப் போன மந்திரங்களே அறிவித்து விடும் என்பது இதன் பொருளாகும்.
(திருக்குறள் – அறத்துப்பால் – நீத்தார் பெருமை – குறள்28)
இனிப் புதல்வரைப் பெறுதல் என்ற அதிகாரத்திலே திருவள்ளுவர் ஒரு குறள் எழுதினார்.
அமிழ்தினும் ஆற்ற இனிதே தம்மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.
தாம் பெற்ற குழந்தைகள் தமது பிஞ்சுக் கைகளினாலே அளைந்த உணவினைப் பெற்றோர் உண்ணும் போது ஏற்படும் சுவையானது வானுலகத்து அமிழ்தை உண்ணும் சந்தர்ப்பம் வந்தாலும் அதற்கு ஒப்பாகாது என்பது இதன் பொருள்.
இந்தச் செய்தியின் கருவை திருவள்ளுவர் தொல்காப்பியரின் பொருளதிகாரத்துக் கற்பியலிலே தலைவன் கூற்று என்ற பகுதியில் இருந்து எடுத்திருக்கின்றார். ஆனால் வேறுபாடு என்னவென்றால் தொல்காப்பியர் காதலன் காதலிக்கு சொல்வது போல அமைக்க வள்ளுவர் அதைக் குழந்கைளுக்கு என்று மாற்றிக் கொள்கின்றார்.
ஏனது சுவைப்பினும் நீ கை தொட்டது
வானோர் அமிழ்தம் புரைமால் எமக்கு
(தொல்காப்பியம் – பொருளதிகாரம் – கற்பியல்)
இனித் தொல்காப்பியர் தனது மரபியல் பகுதியில் ஒரு நூலுக்கு இருக்க வேண்டிய சிறப்புக்கள் பற்றிக் குறிப்பிடும் போது
மனத்தின் எண்ணி மாசறத் தெரிந்து கொண்டு
இனத்தின் சேர்த்தி உணர்த்தல் வேண்டும்
என்று இலக்கணம் எழுதினார். இதனைத் திருக்குறளுக்கு கொண்டுவருகின்றார் வள்ளுவர்.
மனத்து உளதுபோலக் காட்டி ஒருவர்க்கு
இனத்துஉளது ஆகும் அறிவு
(திருக்குறள் – சிற்றினம் சேராமை – குறள்454)
இதுவரை காலமும் திருக்குறளை எடுத்துப் பயன்படுத்தியவர்களை மட்டும் கண்ட நெஞ்சங்களுக்கு திருக்குறள் கொடுத்த கடன்களைப் போல அது பெற்றுக் கொண்ட கடன்களும் இருக்கின்றன என்ற செய்தி ஒரு மாறுதலைத் தரக்கூடும்.
கனடா தமிழர் தகவல் 5.5.2021 சஞ்சிகையில் வெளிவந்திருக்கும் எனது கட்டுரை இது.