சேர்ந்தே இருப்பது வறுமையும் புலமையும்!
தமிழ் இலக்கியங்களிலே அறிவாளிகளுக்கு எண்ணிக்கை கிடையாது. புலவர்களுக்கு எண்ணிக்கை கிடையாது. வீர புருசர்களுக்கு எண்ணிக்கை கிடையாது. ஆனால் இல்லையென்று சொல்லாமல் வழங்கிய வள்ளல்களுக்குத் தான் எண்ணிக்கை உண்டு. முதல் ஏழு வள்ளல்கள். இடையேழு வள்ளல்கள். கடையேழு வள்ளல்கள் என்று அவர்கள் குறிக்கப்பட்டார்கள்.
அந்தக் கடை ஏழு வள்ளல்களில் கொல்லிமலையை ஆண்ட ஓரி என்பவனும் ஒருவன். அவன் தன்னிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் ஏதாவது கொடுத்து உதவுபவன். அவனது அந்தச் சிறந்த குணத்தை அறிந்து கழைதின் யானையார் என்னும் புலவன் தன் வறுமையின் நிமித்தம் ஏதாவது பொருள் பெற்று ஆறுதல் அடையலாம் என்று எண்ணி அவனிடம் வந்தார்.
அன்று மன்னன் என்ன காரணத்தினாலோ அவருக்கு எதுவும் கொடுக்காமல் இருந்து விட்டான். புலவன் கோவிக்கவில்லை. வருத்தப்படவும் இல்லை. மலர்ந்த முகத்தோடு மன்னனின் முன்னே வந்து நின்றான். அவன் கோபம் கொண்டு எதையாவது சொல்லியிருந்தால் இது சங்க இலக்கியம் ஆகியிருக்காது. புறநானூறும் அவனைத் தவிர்த்திருக்கும்.
மன்னனுக்கு முன்னே வந்த புலவன் சொல்லத் தொடங்கினான். ஒரு மனிதன் தன் வறுமையைப் போக்கிக் கொள்ள வசதி படைத்தவர்களுக்கு முன்னே சென்று எனக்கு ஏதாவது ஈயுங்கள் என்று கேட்டு நிற்பது மிகவும் இழிவானது. அப்படி ஒருவன் வந்து நிற்கும் போது அவனுக்கு ஒரு உதவியும் செய்யாமல் கைவிடுவது இரக்கும் இழிவை விட பெரிய இழிவாக அமையும்.
ஒருவன் வந்து எதையாவது கேட்கும் முன்னரே அவனை முந்திக் கொண்டு இதை எடுத்துக் கொள் என்று கொடுத்து விடுவது உயர்ந்த செயல். அப்படி எடுத்துக்கொள் என்று சொன்ன பொருளைத் தொடாமல் வேண்டாம் என்று மறுத்துவிடுவது கொடுப்பதைக் காட்டிலும் உயர்ந்த செயல்.
இதை உணர்ந்திருந்தாலும் என் வறுமை என்னை உன் முன்னிலையில் தள்ளிக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கின்றது. ஆனாலும் நீ எனக்கு எதுவும் தரவில்லை. அது உன் குற்றமல்லை. வரும் போது வழியில் பிழையான சகுனத்தைக் காட்ட சில பறவைகள் திசைமாறிப் பறப்பதைக் கண்டேன். எனக்கு நேரம் சரியில்லை. அதுவே காரணம்.
எனவே இந்தத் துன்ப நிலையிலும் உன்னை நான் பழித்து உரைக்க மாட்டேன். யாருக்கும் இல்லை என்று சொல்லாமல் வழங்கும் பண்பு கொண்டவன் நீ. வானத்திலே கூடும் கரிய மேகங்கள் மழை பொழிவது போல வாரி வழங்கும் குணம் உடையவன் நீ. நீ பல்லாண்டு வாழ வேண்டும்.
கடலிலே தண்ணீர் அதிகமாக இருந்தாலும் தண்ணீர் தாகம் எடுக்கும் ஒருவனால் அந்தக் கடல் நீரைக்குடிக்க முடியாது. ஆனாலும் பசுக்களும் பிற விலங்குளும் புகுந்து கலக்கிச் சேறாக்கி உண்ட ஒரு குளத்துக் கலங்கிய தண்ணீரை அந்த மனிதனாலும் பிறராலும் குடிக்க முடியும். அது போல என் வறுமையை என் ஊருக்குச் சென்று அங்குள்ளவர்கள் மூலம் நான் நீக்கிக் கொள்கிறேன்.
ஓரியைப் பார்த்து சிரித்த முகத்தோடு கூறிவிட்டு அந்த அரண்மனையை விட்டு வெளியேறினான் அந்தப் புலவன்.
ஈ என இரத்தல் இழிந்தன்று அதன் எதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று
கொள் எனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதன் எதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று
தெண் நீர்ப் பரப்பின் இமிழ் திரைப் பெருங் கடல்
உண்ணார் ஆகுப நீர் வேட்டோNர்
ஆவும் மாவும் சென்று உண கலங்கி
சேற்றொடு பட்ட சிறுமைத்து ஆயினும்
உண்நீர் மருங்கின் அதர் பல ஆகும்;
புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை
உள்ளிச் சென்றோர்ப் பழியலர்; அதனால்
புலவேன் வாழியர் ஓரி! விசும்பில்
கருவி வானம் போல
வரையாது சுரக்கும் வள்ளியோய்! நின்னே.
இந்தப் பாடல் புறநானூற்றிலே 204 வது பாடலாகத் தொகுக்கப்பட்டுள்ளது. கழைதின் யானையார் என்று ஒரு புலவன் பாடியிருக்கின்றான். இந்தப் பாட்டிலே திருக்குறள் வருகின்றது. ஒளவை வருகின்றாள்.அவன் காலத்தில் ஒளவை வாழ்ந்தாளா தெரியவில்லை. இலக்கியச் சுவைக்காகவும் படிப்போர் மனத்திலே ஒளவையின் ஒரு பாடலை மறக்க முடியாதவாறு நிலை நிறுத்தவும் அந்தப் புலவன் வரும் வழியில் ஒளவையைக் கண்டதாக சேர்த்துக் கொள்வோம்.
வரும் வழியிலே அந்தப் புறநானூற்றுப் புலவன் ஒளவையைக் கண்டு நடந்ததை எல்லாம் அவளிடம் கூறினான். நீண்ட தூரம் நடந்து சென்றும் எதுவும் கிடைக்காமல் திரும்பி வரும் அந்தத் தமிழ்ப் புலவனைப் பரிவோடு பார்த்தாள் ஒவை.
ஒளவை சொன்னாள் மகனே பிறக்கும் போது பிரமன் தலையிலே எழுதிய விதிப்படித்தான் வாழ்க்கை நிகழ்வுகள் அமையும். நாங்கள் நினைப்பது போல எதுவும் நடக்காது என்பது மடமை மிக்க மனித மனத்துக்குத் தெரியாது. அது எதையாவது எண்ணிக் கவலைப்பட்டுக் கொண்டுதான் இருக்கும். கேட்டதைக் கேட்டபடியே கொடுக்கும் விண்ணுலக கற்பக தரு மரத்தை ஒருவன் சென்றடைந்தாலும் முந்திய பிறவியிலே செய்த பாவம் அங்கே வந்து ஒன்றுக்கும் உதவாத நஞ்சுமிக்க காஞ்சுரம் என்ற காயைத் தான் அவனுக்குப் பெற்றுக் கொடுக்கும் என்றாள் ஒளவை.
எழுதியவாறே காண் இரங்கு மட நெஞ்சே
கருதியவாறு ஆமோ கருமம் – கருதிப்போய்
கற்பகத்தைச் சேர்ந்தோர்க்கு காஞ்சிரங்காய் ஈய்ந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை.
(ஒளவையின் வாக்குண்டாம் பாடல் 22)
இரா.சம்பந்தன்
(கனடா தமிழர் தகவல் 5.3.2025 இதழில் நான் எழுதிய கட்டுரை இது)